அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூன், 2011

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா?

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா? முடியும் என்கிறார் பாபா ராம்தேவ். அப்படியே சொல்கின்றன இந்தியாவின் பரபரப்பு ஆங்கில செய்தி சேனல்கள். அப்படியே சொல்கிறார்கள் பி.ஜே.பி. உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் தலைவர்கள். பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை அரசு அதிரடியாக முடிவுக்குக் கொண்டுவந்த விதம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் பாபா ராம்தேவ் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்? அதன் பின்னணி என்ன? யாரைப் பாதுகாக்க, யாரை வளர்த்துவிட அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பதுபோன்ற கேள்விகளை இந்த பரபரப்பு மீடியாக்கள் எதுவுமே எழுப்பாதது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. ஏதோ ஊழலை ஒழிக்கவந்த அவதார புருஷனாக ராம்தேவை முன்னிறுத்துகின்றன ஆங்கில செய்தி சேனல்களும் தேசிய செய்தித்தாள்கள் சிலவும்! உண்ணாவிரதத்தைத் தடுத்ததற்காக அவரிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் பேசுகிறார் அத்வானி. அதற்கெல்லாம் அவர் தகுதியானவரா?


மனித எலும்புகளைக் கலந்து ஆயுர்வேத மருந்து தயாரிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ராம்தேவ். ஆயிரங்களில் கட்டணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும், மேல்தட்டு மக்களுக்கான ஆன்மிக குரு அவர். கோடிக்கணக்கில் சொத்து, வெளிநாடுகளிலும் ஆசிரமக் கிளைகள், எங்கும் தனி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சொகுசு, ஒரு தீவையே வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளும் அளவுக்கு ஆடம்பரம் என பணத்தின்மீது படுக்காதகுறையாக யோகா சொல்லித் தரும் ஆசாமி அவர்.
கடந்த ஓராண்டாகவே தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்தக் கட்சியை தேர்தலில் போட்டியிடச் செய்யப்போவதாகவும் சொல்லி வந்தார். அந்தத் தருணத்திலிருந்துதான் அரசியல் தொடர்பாக அடிக்கடி கருத்துகள் சொல்ல ஆரம்பித்தார். லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அதற்கு தேசமெங்கும் இளைஞர்கள், நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. இது ராம்தேவை பெருமளவு ஈர்த்தது. உடனே டெல்லிக்கு ஓடி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் உட்கார்ந்து கொண்டார். லோக்பால் மசோதா தொடர்பான ஆலோசனைக் கமிட்டியில் மக்கள் பிரதிநிதிகள் ஐந்து பேரை சேர்த்துக்கொள்ள அரசு சம்மதம் தெரிவித்தது. அன்னா தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பார் என எதிர்பார்த்தார் ராம்தேவ். அன்னா ஹசாரே இந்த சாமியாரின் உள்நோக்கம் தெரிந்து உஷாராகி, இவரைப் புறக்கணித்தார். உடனே பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் என ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை இந்தக் கமிட்டியில் அன்னா ஹசாரே சேர்த்ததை எதிர்த்து அறிக்கை விட்டார் ராம்தேவ். அப்பழுக்கற்ற இரண்டு சட்ட நிபுணர்கள் அந்தக் கமிட்டியில் இடம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தலைவர்கள் யாருடைய சதியாகக் கூட இந்த அறிக்கை இருக்கக்கூடும்.
 
அதன்பின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே அன்னா ஹசாரே ஆனார். காந்தி குல்லாவுடனான அவரது உருவமே பொதுவாழ்க்கையில் நேர்மையின் சின்னமாக ஆனது. சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரம்மாவும் அன்னாவின் வலதுகரமுமான அரவிந்த் கேஜுரிவால், சந்தோஷ் ஹெக்டே போன்ற அந்தக் கமிட்டியின் உறுப்பினர்களே பிரதானப்படுத்தப்பட்டார்கள். ராம்தேவ் இதில் எந்த ஆதாயமும் தேடிக்கொள்ள முடியவில்லை.


அன்னா ஹசாரேவைத் தாண்டி தானும் புகழ்பெற்று, அந்தப் புகழை அரசியல் எதிர்காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், அதற்கு தானும் ஒரு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு ராம்தேவ் வந்திருக்க வேண்டும். அதற்கு இந்துத்வா அமைப்புகள் தூண்டுதலாக இருந்ததற்கும் ஒரு அரசியல் காரணம் இருக்கிறது.

நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சி மாபெரும் சரிவைச் சந்தித்துவரும் வேளையில், அந்த சரிவின் ஆதாயத்தை பெரும்பாலும் ஆங்காங்கே இருக்கும் குட்டி மாநிலக் கட்சிகளே அனுபவித்து வருகின்றன. வரும் 2014 பொதுத் தேர்தலுக்குள் காங்கிரஸுக்கு மாற்றான வலுவான தேசியக் கட்சியாக தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறது பாரதிய ஜனதா. ஆனால், அதற்குத் தகுந்த தலைவர்கள் அந்தக் கட்சியில் இல்லை. வாஜ்பாய் படுக்கையில் இருக்கிறார்.

அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். வேறுவழியின்றி நரேந்திர மோடி மீது இருக்கும் மதக் கலவர கறையைத் துடைத்துவிட்டு, அவரது தலைமையில் அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது பி.ஜே.பி. எனவேதான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை, ‘குஜராத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. நரேந்திர மோடியின் முன்மாதிரியை பின்பற்றினால் ஊழல் ஒழிந்துவிடும்’ என்று சொல்ல வைத்தார்கள். குஜராத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமலே அன்னா இப்படிச் சொன்னதும், அவருக்கு இந்துத்வா முத்திரை குத்தவும் முயற்சி நடந்தது. காந்தியவாதியான அவர் உஷாராக உடனே தன் கருத்தை மறுத்துவிட்டார்.
இப்போது ராம்தேவை அதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘சாமியார்கள் எல்லோரும் ஊழலை எதிர்ப்பவர்கள்; சாமியார்கள் இருக்கும் கட்சியும் ஊழலை எதிர்க்கும் கட்சி’ என சொந்தம் கொண்டாட முடியும்.

படித்த இளைஞர்களுக்கு அரசியல் என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கிறது; நடுத்தர மக்களின் மனோபாவமும் இதுவாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே தங்கள் தோளில் குதிரை சவாரி செய்து, தாங்கள் கட்டும் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள் என்ற நினைப்பு இந்த இரண்டு சமூகத்துக்கும் இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் மெஜாரிட்டி கூட்டமாக இருப்பது இளைஞர்களும் நடுத்தர வர்க்கமும்தான். அரசியல்வாதிகளின் அதிகாரத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதாலேயே அவர்கள் நேரடியாக எதிர்ப்பு காட்டாமல் இருக்கிறார்கள். அன்னா ஹசாரே போன்ற யாராவது போராடும்போது, அந்தத் தலைமைக்குப் பின்னால் அணி திரள்கிறார்கள்.

இதுவும் ஒருவகை அரசியல்தான்! அப்படிப் பார்க்கும்போது இந்தியாவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருப்பது இந்த இரண்டு இனமும்தான். ஊழல் எதிர்ப்பு என்கிற போர்வையில் ராம்தேவ் போன்ற ஆசாமிகளை தூண்டில் புழுவாக மாட்டி, இளைய சமுதாயத்தையும் நடுத்தர வர்க்கத்தையும் வீழ்த்த நினைக்கும் இந்துத்வ சக்திகளின் சதியாகவே இந்த உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது.

மகாத்மா காந்தி என்ற மாபெரும் அவதார புருஷர் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த அகிம்சை போராட்ட ஆயுதம்தான் உண்ணாவிரதம். இன்றைக்கும் இந்தியாவில் எளிய மனிதர்களின் போராட்ட வடிவமாக அதுவே இருக்கிறது. அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றாலும்கூட, உண்ணாவிரதம் இருந்து தங்கள் வலியை உணர்த்த இந்தியாவின் எந்த மூலையிலும் மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.

காந்தி காட்டிய வழியில் உண்ணாவிரதம் இருந்ததால்தான் அன்னா ஹசாரே இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ராம்தேவ் போன்ற ஆசாமிகள் அந்த வலிமையான ஆயுதத்தை கொச்சைப்படுத்த முயற்சிப்பது, மகாத்மாவுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்!

திங்கள், 12 ஜூலை, 2010

விடாது செம்மொழி!

மழை விட்டும் தூவானம் விடாதகுறையாக, செம்மொழி மாநாடு முடிந்தபிறகும் இன்னமும் அது தொடர்பான சர்ச்சைகளிலும் சாகசங்களிலும்தான் தமிழக அரசியல் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது. ‘கருணாநிதி போர்க் குற்றவாளி’ என்று ஜெயலலிதா கொதிக்க, ‘ஈழப்பிரச்னைக்காக பதவியை ராஜினாமா செய்தவன் நான்’ என ஃபிளாஷ்பேக் நினைவுகளில் மூழ்கினார் முதல்வர் கருணாநிதி. இதற்கிடையே செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழக அரசு சில முடிவுகளையும் எடுத்திருக்கிறது. இதற்கான கூட்டத்தில் முதல் வேலையாக முதல்வரைப் பாராட்டி தீர்மானம் போட்டுவிட்டுத்தான் அடுத்த தீர்மானங்கள் பற்றியே யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பொருட்காட்சி மைதானத்தில் தொலைந்த குழந்தை போல, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி தொலைந்து போய் விட்டிருந்தது. பழம்பெருமை பேசியே நிகழ்காலச் சிக்கல்களை மறக்கடித்துவிடும் சாமர்த்தியம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! அப்படி தமிழர்களின் பழம்பெருமைகளை சுட்டிக்காட்டும் ‘இனியவை நாற்பது’ ஊர்வலமும், கண்காட்சி அரங்கும் தமிழர்களை பரவசப்பட வைத்து, ஈழச் சிக்கல்களை மறக்கச் செய்தது. வாலியும் வைரமுத்துவும் நா.முத்துகுமாரும் செம்மொழி நாயகனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறின. ஈழ மண்ணில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்தது. ‘ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு குழுவை நியமித்தது சட்டவிரோதமானது. எங்கள் நிர்வாகத்தில் குறுக்கிட அவர்கள் யார்? இந்தக் குழுவில் இருக்கும் யாருக்கும் விசா தரமாட்டோம்’ என்று கொதித்தது இலங்கை அரசு. ஐ.நா. அமைப்பை கண்டித்து ராஜபக்ஷே கட்சியின் சார்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க, ஒரு அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தைத் தாக்குவதில் தவறில்லை’ என்றுகூட பேசினார்.
‘இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது நுடுல்ஸ் தயாரிப்பது போல சில நிமிட வேலை கிடையாது. அதற்கென நாங்கள் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வோம்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளிப்படையாகவே சொன்னார். இந்நிலையில், செம்மொழி மாநாட்டின் சாரலாக, இலங்கை பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டு அழைப்பிதழைக்கூட முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தார். செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் முக்கியம்; இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கடிதம் சாதாரணமானதா?

மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை; தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்லும் புதிதான ஆய்வுகள், நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தமிழில் செய்யவேண்டிய மாற்றங்கள், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரவேண்டியவை என்னென்ன?, கணினி பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழுக்கு என்ன செய்யவேண்டும்... இப்படியான முடிவுகளை எடுக்க அடிகோலும் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்க வேண்டும். 380 கோடி செலவிடப்பட்ட செம்மொழி மாநாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் படிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வரங்குகளில் கூட்டமே இல்லை. படித்த கட்டுரைகள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை!
தமிழின் சிறந்த நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழி நூல்களை தமிழில் கொண்டுவரவும் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதும், யூனிகோட் எழுத்துரு பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்புமே இந்த மாநாட்டால் நடந்த உருப்படியான விஷயங்கள். ஆனாலும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர நினைக்கும் இந்த அரசு, தமிழில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதை மனசாட்சியோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்விகளை தமிழில் படிக்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களே இல்லை; தரமான புத்தகங்களை மொழிபெயர்க்க இதுவரை நடந்த எந்த முயற்சிக்கும் அரசின் ஆதரவு இல்லை. பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழில் இருந்தாலும், சகல வசதிகளும் அரசு பள்ளிகளில் இருந்தாலும், தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சூழ்நிலை அந்தப் பள்ளிகளில் இல்லை என்பதை யாராவது மறுக்கமுடியுமா? தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தரமான கல்வியைத்தான் பெறுகிறோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மரபணுப்பூங்கா, செம்மொழிப் பூங்கா என கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தமிழை வளர்த்துவிடாது. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகத் தலைவர்கள் அதற்கான ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முல்லைபெரியாறு அணைக்காக பிரதமரைச் சந்திக்க கேரளத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அப்படிச் செல்வதை யாராவது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியுமா?

உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர விரும்பினாலும் அதற்கு எளிய எழுத்துப் பயிற்சிகளைக் கொண்ட முழுமையான புத்தகங்கள் கிடைப்பதில்லை; தமிழின் தாய்பூமியான இங்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்னும் படிக்கப்பட்டாத கல்வெட்டுகளிலும், இடிந்துகிடக்கும் ஏராளமான கோயில்களிலும் தமிழகத்தின் & தமிழனின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.அழிவிலிருந்து அதை மீட்க வேண்டும்.

உண்மையில் இதையெல்லாம் செய்வதற்கு செம்மொழி மாநாட்டுக்கு ஆன செலவைவிட அதிகம் ஆகிவிடாது; தேவை, நிஜமான அக்கறை மட்டுமே!

நன்றி : தெனாலி

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நளினி சிறுகச் சிறுகச் சித்ரவதை!

ராஜீவ் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அதைக் காரணம் காட்டி நளினியை சிறுகச் சிறுகக் கொலை செய்வது நியாயமாகாது. வாழும் நீதிமான்களில் மிக மூத்தவரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், 'ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு' என்று தனது தீர்ப்புகளில் அடிக்கடி குறிப்பிடுவார். நீதியரசர்கள் சொல்வதைவிட 'கூட்டணி தர்மங்கள்'தான் இங்கு எல்லாப் பிரச்னைகளையும் தீர்மானிக்கின்றன. எனவேதான், வீட்டுக்கும் வர முடியாமல் சிறையிலும் நிம்மதியாக இருக்க முடியாமல் அந்தரத்தில் அல்லாடுகிறது நளினியின் வாழ்க்கை!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், உடலில் வெடிகுண்டு தாங்கிய தனு என்ற பெண்ணால் கொலை செய்யப்பட்டார். கைதான 26 பேருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதியானது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர், நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 'ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தானே. அதன் பிறகும் என்னை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?' என்று நளினி கேள்வி எழுப்புகிறார். நளினியை விடுவிக்க முடியாது என்று சிறை ஆலோசனைக் குழு சொன்னதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சிக்கலுக்குக் காரணம் இதுதான்!

''அன்னை சோனியா காட்டிய கருணையால்தான் நளினியின் தூக்குத் தண்டனையே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் மீண்டும் கிளப்புவது நளினிக்கு அனுதாபம் தேடும் முயற்சியே. ராஜீவ் கொலையை நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது'' என்று சொல்லும் காங்கிரஸ் பேச்சாளர் கோபண்ணா, ''சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அதன் போக்கிலேயே விட வேண்டுமே தவிர, இதைப் பிரசாரமாக்கக் கூடாது'' என்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால், 14 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது சரியானது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்குமானால், ஆயுள் முழுக்கச் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இது இன்று இருக்கும் சட்ட யதார்த்தம். நளினி தன்னுடைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில்வைத்து அவர்களது பரிசீலனைக்கு தனது வழக்கைக் கொண்டுபோகலாம்'' என்று சொல்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி-யான வைகுந்தும் இவரது கருத்தையே வழிமொழிகிறார். ''ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்று கறாரான வரையறை இல்லை. ஆயுள் தண்டனை என்பதன் அர்த்தம் ஆயுள் முழுக்கத் தண்டனையை அனுபவிப்பதுதான். நளினியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு முக்கியக் குற்றவாளியாக இருப்பதால், இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து முறையான தீர்ப்பைத் தரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்'' என்கிறார் வைகுந்த்.

'நளினி தொடர்புடைய குற்றம் கொடூரமானது. ராஜீவ் உள்ளிட்ட 18 பேர் கொலை செய்யப்படக் காரணமான சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக அவர் செயல்பட்டுள்ளார்' என்பதை முக்கியக் காரணமாகச் சொல்லி, நளினியின் முன்விடுதலையை நிராகரித்துள்ளது தமிழக அரசு. 'ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது. இந்திய அரசைத் திகைக்கச் செய்வதோ அல்லது இந்திய மக்களிடம் அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க ஆதாரம் இல்லாததால் தடா சட்டப் பிரிவுகள் இதற்குப் பொருந்தாது. சதிகாரர்களில் எவரும் ராஜீவ் காந்தியைத் தவிர, வேறு எந்த இந்தியரின் சாவையும் விரும்பியதற்குச் சான்று ஏதும் இல்லை' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வெளிப்படையாகச் சொன்ன பிறகு, அதே காரணத்தைச் சிறை ஆலோசனைக் குழு கூறுவதும் அதைத் தமிழக அரசு ஏற்பதும் வழக்கை மீண்டும் பின்நோக்கிக் கொண்டுசெல்லும் காரியமாகத்தான் இருக்கிறது.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''நளினி விடுதலையானால் குடியிருக்கப் போகும் ராயப்பேட்டை பகுதியின் இன்ஸ்பெக்டர் மட்டும்தான் நளினியை உறுதியாக விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார். அந்தப் பகுதியில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், தலைவர்களின் வீடுகள், அமெரிக்கத் தூதரகம் இருக்கின்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறார். நளினியின் அம்மாவும் தம்பியும் அந்தப் பகுதியில்தான் 12 ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இருப்பதே யாருக்கும் தெரியாத மாதிரி அமைதியாகத்தான் காலத்தைக் கழிக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கொலை வழக்கு குற்றவாளிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று இருக்கிறது. முன் விடுதலை செய்யும்போது சிறை ஆலோசனைக் குழு, சம்பந்தப்பட்டவர் சிறையில் ஒழுங்காக இருந்தாரா, இவரை வெளியில் விடுவதால் இவரது உயிருக்கு ஆபத்து அல்லது இவரால் மற்றவர் உயிருக்கு ஆபத்து உண்டா, விடுதலை ஆகும் நபரை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைத்தான் பார்ப்பார்கள். இறந்து போனவர் யார் என்பது முன் விடுதலைக்கான தகுதி ஆகாது'' என்கிறார் புகழேந்தி.

மனித உரிமையாளர் 'எவிடென்ஸ்' கதிர், ''நடந்திருப்பது கொடூரமான குற்றம் என்று சொல்லி முன்விடுதலைக்கு மறுக்கிறார்கள். எது கொடூரம் என்பதற்கு என்ன வரையறை? மேலவளவு படுகொலைகள், லீலாவதி கொலை, தா.கிருஷ்ணன் கொலை போன்றவை கொடூரமான குற்றங்களா... இல்லையா? அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் இதுபோல் அடக்கப்பட்டார்களா? அரசாங்கத்தின் கொள்கைகள், நீதிமன்றத்தின் போக்குகள், தீர்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. நளினியை விடுவிக்காமல் இருக்க அரசியல் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஆனால், விடுவிக்கச் சொல்ல மனிதாபிமானக் காரணங்கள் ஏராளம் இருக்கின்றன'' என்கிறார் 'எவிடென்ஸ்' கதிர்.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதியதுதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 'நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும், மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது!'

நளினி மகள்!

நளினி - முருகன் தம்பதியருக்கு ஒரே மகள். பெயர் மேகரா. அரித்ரா என்றும் அழைக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தார் நளினி. வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் மேகரா. சில ஆண்டுகள் மட்டும் அம்மாவுடன் சிறையில் இருந்த மேகரா, முருகனின் அம்மாவுடன் இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இருந்து சில ஆண்டுகள் கழித்து தமிழகம் வந்து நளினியைச் சந்தித்தார். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், தொடர்ந்து இங்கு தங்குவதற்குத் தடை ஏற்பட்டது. எனவே, முருகனின் சகோதரர் தன்னுடன் ஸ்காட்லாண்டு அழைத்துச் சென்றுவிட்டார். இன்று அங்குதான் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நளினியைப் பார்க்க அவர் முயற்சிக்க, விசா அனுமதி கிடைக்கவில்லை. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருப்பதைக் காரணமாகக் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டதாம். ''என்னுடைய அம்மா நிரபராதி. அவர் என்னை அருகில் இருந்து படிக்கவைக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் படித்து வருகிறேன். அவர் விரைவில் வெளியில் வந்து எனக்கு ஆசி வழங்குவார்'' என்று தனது உறவினர்களிடம் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம் மேகரா!

ஆனந்த விகடன் / 14-04-2010

சனி, 19 டிசம்பர், 2009

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!!


தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

வெள்ளி, 11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

நன்றி : காலம்

வியாழன், 10 டிசம்பர், 2009

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?


 ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009