வெள்ளி, 28 ஜனவரி, 2011
இளைஞன் - திரைவிமர்சனம்
வெள்ளி, 18 ஜூன், 2010
ராவணன் - விமர்சனம்
சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.
திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.
வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.
முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.
வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.
அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.
மணிரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.
- நன்றி : தெனாலி
வெள்ளி, 12 மார்ச், 2010
விண்ணைத்தாண்டி வருவாயா!!! - விமர்சனம்
கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது ,ஒருவேளை ரசிகர்கள் அந்த காதல் உணர்வில் நன்றாக ஊறி திளைக்க வேண்டும் என்று மெதுவாக கொண்டு சென்றாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது .படம் முழுக்க கிளைமாக்ஸ் காட்சி தவிர அனைத்தையும் ரசிகர்கள் ஒருவிதமான புன் சிரிப்புடன் ,நமட்டு சிரிப்புடனும் ,ஒருவிதமான ஆச்சர்ய பார்வையுடனும் ரசித்ததை என்னால் காண முடிந்தது .
ஒரு வேளை அதற்க்கெல்லாம் காரணம் நஅம்முடைய காதல் போலவே இருக்கிறதே என்று அர்த்தமோ என்னவோ,அதை அவர்களே வந்து சொன்னால் தான் தெரியும் :) .
ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்தவிதமான மசாலா அயிட்டங்களும் இல்லாமல் ,யாதொரு சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு முழுமையான இயக்குனரின் படமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குனர் கௌதமிற்கும் ,இப்படத்தின் நாயகன் சிலம்பரசனுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் . சிம்பு நினைத்திருந்தால் இந்த படத்தை எப்படி வேண்டும் என்றாலும் சிதைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம் ,ஆனால் அவர் எடுத்த முயற்சியினால் நமக்கு வெளியில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு அழகான காதல் கதை கொண்ட தரமான திரைப்படம் கிடைத்துள்ளது .
இந்த படத்தைப் பற்றி நான் இவ்வளவு Positive Comments சொன்னதுக்கு நான் ஏதோ காதலில் விழுந்து விட்டதால் தான் உணர்வு பூரவமாக சொல்கிறேன் என்று சிலபேர் நினைப்பார்கள். இப்படியொரு தரமான படத்தை பார்த்து அதை சந்தோஷமாக பலபேருடன் பகிர்ந்து கொள்ள காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை .
சிலம்பரசன் ,த்ரிஷா நடிப்பு ,கௌதம் மேனன் இயக்கம் இதெல்லாம் ஒரு ஆச்சர்யத்தை தந்தால்,இதென்ன இதற்க்கு மேல் நான் தருகிறேன் என்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் .
ஹோசான பாடலுக்கும் ,இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்குமே கொடுத்த 50 ரூபாய் காலி .இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் எதுவென்று கேட்டால் கடைசி 30 நிமிடங்கள் என்று சொல்லுவேன் .
கடைசியில் சினிமா பேனரில் இயக்கம் - கார்த்திக் என்றிருப்பது மாறி கௌதம் மேனன் என்று மாறும் வரை ..எங்கும் எதிலும் இயக்குனரின் கைவண்ணம் மின்னுகிறது .
இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை ...சுருக்கமாக சொல்வதென்றால் இதைப்படிக்கும் எல்லோரும் கண்டிப்பாக போய் படத்தை பாருங்க ..இதுபோல் இன்னும் நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துங்கள் .
படம் முடிந்து எழுத்து போடும் போது ஒலிக்கும் ஜெஸ்ஸி ..... ஆங்கில பாடல் மிகவும் அருமை - அதை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க !!!!!
-சூரியன்
திங்கள், 1 பிப்ரவரி, 2010
ஆயிரத்தில் ஒருவன் - ஒரு அலசல்
இந்நேரம் தமிழ்நாட்டில் பெரும்பலனவர்களுக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் ,ஏனென்றால் படம் பார்த்தார்களோ இல்லையோ கதையை தெரிந்து கொண்டிருந்திருப்பார்கள் . நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் படம் வெளியாகி மூன்றாவது நாள் நானும் என் நண்பர்களும் படம் பார்க்க செல்லும் போது திரையரங்கில் நங்கள் வெறும் நான்கு பேர்தான் .படம் ஆரம்பித்த பிறகும் கொஞ்சம் கூட்டம் வந்தது ,ஆனாலும் மொத்தத்தில் நூறைத்தாண்ட வில்லை .எனக்கு அப்போது காரணம் என்னவென்று புரியவில்லை .அதற்குள் ஊருக்குள் இந்த படம் சரியில்லை என்று பேச்சு .அனால் நான் இது போல் பல பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் ,ஆவர்களின் பேச்சையும் மீறி படம் ஹிட்டானதும் மாற்றி பேசுவதையும் கேட்டிருக்கிறேன் .அதனால் யார் பேச்சையும் கேட்காமல் நான் என்னுடைய சொந்த கருத்தை அறிய விழைந்து படம் பார்க்க சென்றேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல எல்லாருக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக விமர்சனத்துக்குள் செல்லலாமென்று நினைக்கிறேன் .படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு "ச்சே ,என்னமா எடுத்திருக்கான்யா படத்தை ,சூப்பர் என்று தான் சொல்ல வாய் வந்தது ,அப்படித்தான் நானும் சொன்னேன் .ஆனால் விமர்சனம் எழுதவேண்டும் என்று அமர்ந்து யோசிக்கும் போதுதான் அதில் எவ்வளவு குறைபாடுகள் உள்ளது ,ஏன் இந்த படம் மக்களுக்கு பிடிக்க வில்லை ? (புரியவில்லை! ) என்ற கேள்விக்கான விடைகள் கிடைக்க ஆரம்பித்தன .அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாகி இதோ எழுதுகிறேன் ........
முதலில் இந்த படத்தை ஆங்கில படம் போல எடுத்திருக்கிறார்கள் என்று எல்லோரும் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் ,ஏனென்றால் உண்மைலேயே ஆங்கில படத்திலிருந்த நிறைய காப்பி பண்ணித்தான் எடுத்திருக்கிறார்கள் .செல்வராகவன் ஆங்கில படத்திற்கு இணையாக எடுப்பது என்பது ,அதை பார்த்து அப்படியே காப்பி அடிப்பது என்று நினைத்து விட்டார் போல ( பார்க்கவும் மம்மி,கிளாடியேட்டர் ,மெக்கனாஸ் கோல்ட் ).கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காப்பி அடித்துவிட்டு இதை நிரூபித்தால் நான் சினிமா எடுப்பதையே விட்டுவிடுகிறேன் என்று சவால் வேறு .
யோகி எடுத்து கெட்ட அமீர் போல ,ஆ.ஒ மூலம் கெட்ட செல்வராகவன் என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது .படத்தின் முதல் பாதி உண்மைலேயே மிக அருமை ,போரடிக்காமல் செல்வராகவன் தனக்கே உரிய செக்ஸ் நடையில் படம் எடுத்திருந்தார் .எப்பவும் போல அதை ரசித்து கைதட்டி ரசித்த மக்களுக்கு இடைவேளைக்கு முன் படத்தில் வரும் கார்த்தி ,ரீமாசென் ,ஆண்ட்ரியா (அப்பாடா !!! படத்தில் நடித்தவர்கள் பெயர் சொல்லியாச்சு )காது கிழிவது போல கிழிகிறது இரண்டாம் பாதியில் .அவ்வளவு சத்தம் எதற்கென்று தெரியவில்லை ,கொடுரம் ஏனென்றும் தெரியவில்லை .தேவையல்லாத கட்சிகள் நிறைய இருக்கிறது படத்தில் ,செல்வராகவன் எதோ ஒரு ராஜா ,ராணி என்று சொல்லிவிட்டு போயிருந்தால் இவ்வளவு பிரச்சினையே கிடையாது.அவருடைய சொந்த கற்பனைக்கெல்லாம் சோழ ,பாண்டியர்களை வம்பிக்கிழுத்ததுதான் பெரிய பிரச்சினையே .அந்த மன்னர் குடும்பத்தினர் அவமரியாதை வழக்கு போட்டால் இவர் அம்பேல் தான் . படத்தில் எல்லோரும் சொல்வது போல சோழர்களை காட்டு மிராண்டிகளாக காட்டியது மிகப்பெரிய தவறு.தான் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியாக சொன்னார் இயக்குனர் ,என்ன ஆராய்ச்சி செய்தாரோ தெரியவில்லை சோழர்களை பற்றிய படம் எடுக்க இவர் எதற்கு ரோமானிய மன்னர்களை பற்றி ஆராய்ச்சி பண்ணார் என்றுதான் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை .புரியவில்லையா ? இதோ சொல்கிறேன் ,படத்தில் அவர் காட்டிய போர்முறைகள் ரோமானியர்களின் போர்முறைகளாகும்.எந்த தமிழ மன்னனும் அடிமைகளையும் ,கைதிகளையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது கிடையாது .எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் யாரும் ஆப்பிரிக்கர்களை மிஞ்சும் அளவுக்கு கருப்பாக இருந்ததாகவும் ,இருப்பதாகவும் கேள்விப்பட்டதும் ,படித்ததும் இல்லை .இன்னும் பற்பல லாஜிக் ஓட்டைகள் குவிந்து கிடக்கின்றன இப்படத்தில் .ஏழு கண்டம் தாண்டி வரும் இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் கிளைமாக்சில் சட்டென்று வருவது ,வியட்நாம் நாட்டு தீவில் இந்திய ராணுவம் வந்து சிங்கள ராணுவம் போல கொடூரங்கள் நிகழ்த்துவது .இதெல்லாம் அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகத்தில் வேண்டுமானால் நடக்கலாம் ,இப்புவியில் நடக்க வாய்ப்பே இல்லை .இன்னும் எவ்வளவோ ஓட்டைகள் படத்தில் .
என்னடா இவன் இப்படி காய்ச்சி எடுக்கிறானே ,படத்தில் எதுவுமே நன்றாக இல்லையா என்று நினைத்து விடாதீர்கள் .இருக்கின்றன ,அதெல்லாம் செல்வராகவன் படத்தில் நாங்கள் எதிர்பார்த்து போனவைகள்,மிகவும் நன்றாகவே செய்திருந்தார் முதல் பாதியை .ஏனோ இரண்டாம் பாதி எழுதும் போது அவருக்கு மூளை குழம்பிப்போய் இருந்திருக்கலாம் .படத்தில் மொத்தம் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் (கார்த்தி ,ரீமா,.பார்த்திபன் ),இவர்கள் இந்த மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார்கள் ,ஓரளவுக்கு தூக்கியும் நிறுத்துகிறார்கள் .ஒரு திறமையான இயக்குனரான பார்த்திபனுக்கு கூட இயக்குனர் கதையை சொல்லவில்லையாம் ,அது இந்த படத்தை பார்க்கும் போதே தெரிகிறது .படம் முழுக்க பார்த்திபன் என்ன கதையாக இருக்கும் என்று யோசிப்பதுபோலவே மிரட்சியுடன் திரிகிறார்.
ரீமாசென் பாராட்டப்பட வேண்டிய நடிப்பு .பார்த்திபன் அந்த கிளைமாக்ஸ் ல் அவருடைய நடிப்பு ,உணர்ச்சி வெளிப்படுத்தும் விதம் விருது கொடுத்து பாராட்டப்பட வேண்டியது .இவருக்கு கதை சொல்லிருந்தால் இன்னும் பண்பட்ட நடிப்பை வெளிக்கொனர்ந்திருப்பார் .கார்த்தி இவர் உண்மையிலேயே தமிழ் சினிமாவில் ஒரு அரிதான நடிகராக இருக்கிறார் .எந்த வொரு build up இல்லாமல் பன்ச் டயலாக் இல்லாமல் படம் முழுக்க அடிவாங்குகிறவராகவே உலா வருகிறார்.இதற்கும் ஒரு தைரியம் துணிச்சல் வேண்டும் .
இசை -என்னமோ போங்க ,நெல்லாடிய ,உன்மேல ஆசைதான் தவிர வேறெந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை ,பின்னணி இசை கூட பரவாயில்லைதான் .செல்வராகவன் படத்தில் பின்னணி இசைவரைக்குமே தனியாக டவுன்லோட் செய்தது கேட்பவர்கள் உண்டு ,அந்த அளவுக்கு பிரசித்தம் .செல்வராகவன் உங்களுக்கு இவர் சரிவரமாட்டார் விட்டுவிடுங்கள்.
படத்தில் எந்தவொரு குறையும் சொல்லாத மாதிரி இருப்பது எதுவென்றால் ஒளிப்பதிவும் ,கலையும் (Art ) தான் .இரண்டாம் பாதியில் editor கூட கொஞ்சம் தூங்கிட்டார் போலிருக்கிறது .ரொம்ப நீளமான காட்சிகள் நிறைய இருக்கிறது .
என்ன செய்து யாருக்கு புண்ணியம் எல்லாத்தையும் சாப்பிட்டு யாப்பம் விட்டுவிட்டது சொதப்பலான செல்வராகவனின் கதையும்,திரைக்கதையும் .இனிமேலாவது சொந்தமாக யோசிக்காமல் உதவி இயக்குனர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள் சார் .இன்னொரு சேரனாக உருவாகிவிடாதீர்கள் .நாங்கள் உங்களிடம் இன்னும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .ஆளானப்பட்ட பாலாவே ஆறு மாசத்தில் படம் எடுக்க வந்துவிட்டார் நீங்களெல்லாம் ஏன் இன்னும் வருஷ கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சரி படம் எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு நினைவூட்டல் ,நான் ஆரம்பத்தில் சொன்னது போலவே தமிழ் சினிமாவின் செண்டிமெண்டை மீண்டும் நிரூபித்த படம் "ஆயிரத்தில் ஒருவன் ".(விதி விலக்கல்ல ).
திங்கள், 21 டிசம்பர், 2009
வேட்டைக்காரன் - திரைவிமர்சனம்
நாங்கள் முன்கூட்டியே சென்றதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் டிக்கெட் எடுத்து கியூவில் நின்றோம் .தியேட்டருக்கு போகும் போதுதான் சிலபல வேலைகள் செய்யவேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் ஒருவர் இருக்கிறார்.அவரால் நங்கள் கொஞ்சம் படபடப்பாக வேண்டியதாயிற்று. அப்பாடா ஒருவழியாக உள்ளே போய் நல்ல சீட்டாக பார்த்து உட்கார்ந்தாச்சு.
வேட்டைக்காரன் கதை :
தூத்துக்குடியில் +2 நான்காவது முறையாக எழுதி ரிசல்ட் க்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் ரவி (இல்லை இல்லை போலீஸ் ரவி ,இதுதான் படத்தில் ஹீரோவோட பேரு ) ஊரில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்டுக்கொண்டு ஒரு போலிசாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .இவனுடைய லட்சியமெல்லாம் Encounter specialist தேவராஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி ) மாதிரியே பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் . அவருக்காக ஊர் நடுவில் பெரிய கட்அவுட்டு வைக்கிற அளவுக்கு பெரிய விசிறி .
இப்படியே போய்கொண்டிருக்கிற போலீஸ் ரவி வாழ்கையில் திடீரென்று ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது .அது அவரு +2 பாஸ் பண்றதுதான் .அப்புறம் ஒரு வழியாக தேவராஜ் படிச்ச அதே காலேஜ்ல சீட் வாங்கி சேர்கிறார் விஜய்.முதல் நாளே தன் சக மாணவிக்கு நேரும் அவமானத்திற்கு பதில் தீர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கும் விஜய் ,அப்படியே அந்த மாணவியை தன்னுடைய தோழி ஆக்கிகொள்கிறார். அவள் மூலமாகவே தேவராஜ்போல் தானும் ஆட்டோ ஒட்டி சம்பாதித்துதான் படிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக்கொள்கிறார்.
ஹீரோ சிட்டிக்கு வந்தாச்சே !! இப்போ வில்லன் என்ட்ரி அகனுமே ? வருகிறார் சாய்குமார் வித்தியாசமான கெட் டப்பில் .அவருக்கு அழகான பெண்களை பார்த்தவுடனே படுக்கைக்கு அழைக்கும் ( கடத்தி செல்லும் ) குணம். அதை நிறைவேற்றுவதற்காகவே கூட 5 அல்லக்கைகள் .தன் தோழி மீது அதே வில்லனின் கடைக்கண் பார்வை விழ !!! ஹீரோ வில்லனுடன் மோதுகிறார் ,அவரை அடித்து வீழ்த்தி ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறார் ,கூடவே அவருக்கு இருந்த Image ஐ யும் உடைக்கிறார். இப்போ போலீஸ் வந்து வில்லனை பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு,அவர்கள் விஜய்ஐ சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள்.ஒரு கட்டத்தில் பொங்கி எழும் ஹீரோ சிறையை உடைத்து வெளியில் வர பெரிய Polica force வந்து அவரை மடக்கி பிடித்து மறுபடியும் சிறையில் அடிக்கிறார்கள் .மேலும் பழைய வெடிகுண்டு கேஸில் விஜய் பெயரையும் சேர்த்து Encounter la போட்டு தள்ள காட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ,அங்கிருந்து தப்பிக்கும் விஜய் ஆற்றின் முடிவான அருவியில் இருந்து குதித்து சின்ன முழங்கால் காயத்தோடு தப்பிக்கிறார்!!!! ????? .
தப்பித்த விஜய் நேராக பெரிய வில்லன் சலீம் கௌஸ் முன்னாள் போய் நிற்க அவர் விஜயை கூட்டிக்கொண்டு தன்னுடை ஒரு நாள் வேலையை விளக்குகிறார் ( பயம் காட்றாராமாம்). இதன் மூலம் எதிரியின் கோட்டையை புரிந்து கொள்ளும் விஜய் அவனை அழிக்க தானும் ரவுடி ஆகிறார் ( புலி உறுமுது பாடல் ஒலிக்க). எப்படி அவர் வில்லனை அழிக்கிறார் ,தன்னுடைய நிஜ ஹீரோ தேவராஜை பார்த்தாரா இல்லை அவர் என்ன ஆனார் என்பதுடன் படம் முடிவடைகிறது இடை இடையே காதல்,காமெடி காட்சிகளுடன் .
விமர்சனம் :
இதற்க்கு முன் வந்த படங்களை விட இந்த படத்தில் விஜயின் அறிமுக காட்சியில் அடக்கி வாசித்திருக்கிறார்கள் .Opening song ல் விஜயுடைய பையன் வந்து ஆடுவது கலகலப்பு ,விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா என்று தியேட்டரில் பெரும்பாலனோர் சலசலத்தது கேட்கமுடிந்தது. ஊரில் செய்யும் கலாட்டா அதை தொடர்ந்து சென்னைக்கு கிளம்புவது வரை ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போலவே இருந்தது பலவீனம் .ரயில்வே ஸ்டேஷன் ல அனுஷ்காவை பார்த்ததும் விஜய்யும் சத்யனும் செய்யும் காமெடி கலாட்டா தூள் .
சென்னை வந்ததும் ஸ்ரீஹரியை போய் பார்க்கும் விஜய் அவர் ஊரில் இல்லை என்றதும் எங்கு தங்குகிறார் என்பதெற்கெல்லாம் விடை இல்லை .விஜய்யும் ,அனுஷ்காவின் பாட்டி சுகுமாரியும் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டவில் தியேட்டரே கல கல . ஸ்ரீநாத் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று வந்து உண்மைலேயே காமெடி பீஸாகி போகிறார். வடிவேல் ,விவேக்,சந்தானம் போன்ற காமெடியன்களின் உதவி இல்லாமல் கதையோடு விஜய் செய்யும் காமெடிகள் ரசிக்க தக்கவை . ஒரு மசாலா படத்திலேயே இவ்வளவு செய்ய முடிகிற விஜய், கமல் போல ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம் .
சண்டைக்காட்சிகள் அனைத்தும் அனல்பறக்க உள்ளது ,அனால் வில்லனின் அடியாட்களுடன் விஜய் பின்னால் பறப்பது எல்லாம் டூமச் .அதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வில்லன் கதாபாத்திர வடிவமைப்பில் ஏதும் புதுமை இல்லை,அதே காட்டு கத்தல் தான் . சலீம் கௌஸ் -ன் நடிப்பு அருமை ,அதுவும் கிளைமாக்ஸ்ல் அவர் பேசும் வசனமும் ,அந்த தொனியும் சூப்பர்.
அனுஷ்கா - ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை தெரிந்து நடித்திருக்கிறார் .மற்றபடி வழக்கம் போல விஜய் பட நாயகியாக வந்து அவரை காதல் செய்வதைத்தவிர யான் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று சொல்லி செல்கிறார். சத்யன் இந்த படத்தில் ஹீரோ friend என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார், இதே போல் வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்தால் அவருக்கு பெரிய எதிர்காலமுண்டு .
தில்,தூள்,திருப்பாச்சி,பகவதி படங்களின் பாதிப்பு அங்கங்கே தென்படுவதை தவிர்க்கமுடியவில்லை .ஒருவேளை டைரக்டர் இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கியே தீரவேண்டுமென்று இப்படிசெய்துவிட்டாரோ என்னவோ.ஆனால் படத்தில் Director Touch என்ற வார்த்தைக்கு ஒரே காட்சி கூட இல்லை ,இயக்குனர் முழுக்க முழுக்க விஜய் என்ற தனிமனிதனை நம்பி களத்தில் இறங்கியிருப்பது படம் பார்க்கும் கடைசி ரசிகனுக்கு கூட கண்கூடாக தெரிகிறது .சத்யன் கொலைக்கு பழிவாங்க விஜய் செய்யும் செயல்கள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடுவதால் ,என்ன நடக்கிறது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சாய்குமாரை கொலை செய்ய காரை தண்ணியில் தள்ளி remote மூலம் Door lock செய்வதெல்லாம் ரசிக்கும்படி இருந்தது .
பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் ( ஒரே ஒரு டயலாக் " சாமிகிட்ட மட்டும்தான்" தவிர) .உபயம்: சன் பிக்சர்ஸ்.
பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன .புலி உறுமுது பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை. மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை .பின்னணி இசையில் ஒன்றும் புதிதாக சொல்வதற்கில்லை ,விஜய் அந்தோனி இன்னும் கொஞ்சம் நன்றாக முயற்சித்திருக்கலாம் .ஒளிப்பதிவு -கோபிநாத் பாடல் காட்சிகளை தவிர மற்ற எதிலும் அவர் சாதிக்கவில்லை. படத்தொகுப்பு -V.T.விஜயன் ,பாடல்கள் அனைத்தும் திடீரென்று முடிந்து காட்சிகள் தொடர்வது சற்று கடினமாக உள்ளது ,இன்னும் Soft Editing செய்திருக்கலாம் .விஜயிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் டான்ஸ் இந்த படத்தில் குறைவு.சொல்லிக் கொள்கிற அளவுக்கு விஜய்க்கு இந்த படத்தில் Dance movements இல்லை (உச்சி மண்டை பாடலில் வரும் தலைகீழ் நடனம் தவிர )என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் .கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் சார்பாக ஒரே வேண்டுகோள் ..இந்த படம் ஓடுகிறது என்பதற்காக மீண்டும் இதே போல் நடிக்காமல் atleast கதையாவது புதுசா தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
3 மணிநேரத்திரைப்படம் ,போரடிக்காமல் செல்கிறது...காமெடி,காதல் என்று முதல் பாதி அருமை . வழக்கம் போல அடிதடி ,பழிவாங்கல் என்று இரண்டாம் பாதி.
விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி ,மற்றவர்களுக்கு ஓகே ரகம்.
வேட்டைக்காரன் - ரசிகர்களை வேட்டையாடாதவன்.
-சூரியன்
புதன், 4 நவம்பர், 2009
பேராண்மை - திரை விமர்சனம்
நடிப்பு - ஜெயம் ரவி, தன்ஷிகா, காதல் சரண்யா, வசுந்தரா, லியாஸ்ரீ, வர்ஷா, பொன்வண்ணன், ரோலன்ட் கிக்கிங்கர், வடிவேலு.
இசை - வித்யாசாகர்
இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்
தயாரிப்பு- கருணா மூர்த்தி, அருண்பாண்டியன்
இந்தியா அனுப்ப இருக்கும் செயற்கைகோளை அழிக்க வரும், சர்வதேச கூலிப்படை கும்பலை ஐந்து மாணவிகள் உதவியுடன் தீர்த்துகட்டும் இளைஞனின் கதை.
அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் ஜெயம் ரவி பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., பயிற்சிக்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணிக்கு ரவியை நியமிக்கிறார் வனத்துறை அதிகாரி பொன்வண்ணன். அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவிகள். கூடவே மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர்.
அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் ஐந்து பேரை காட்டுக்கு அழைத்துப் போகிறார் ஜெயம் ரவி. அப்போது நவீன எந்திர துப்பாக்கிகளுடன் வெள்ளைக்காரர்கள் போவதை ஒரு மாணவி பார்த்து ரவியிடம் சொல்கிறாள். அவர்கள் விவசாயத்துக்காக இந்தியா அனுப்ப உள்ள ராக்கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் கூலிப்படை என்பதை புரிந்து கொள்கிறார் ஜெயம் ரவி. உடனே அவர்களை அழிக்க புறப்படுகிறார்.
மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து ஜெயம் ரவியுடன் செல்கின்றனர். மாணவிகளின் உதவியோடு கூலிப்படையினரின் சதியை ரவி எப்படி முறியடிக்கிறார்? என்பது க்ளைமாக்ஸ்.
காதல் நாயகனாக வலம்வந்த ஜெயம் ரவி, ஆக்ஷன் நாயகனாக கண்ணில் வெறியையும், தோற்றத்தில் முரட்டுத்தனத்தையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பேராண்மையில். உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் சும்மா மிரட்டியிருக்கும் ஜெயம் ரவி, சாதி ரீதியாக உயர் அதிகாரியும், மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் துறுதுறுப்பு என நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஜெயம் ரவியை பயிற்சியாளர் பணியிலிருந்து விரட்ட வசுந்தரா, தன்ஷிகா கூட்டணி போடும் திட்டங்கள் திடுக். அதற்காக, நிர்வாண வாக்கிங் எல்லாம் ஓவர். செக்கிங் பாயின்ட்டில் நிற்கும் ஜீப்பை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் ஐந்து நாயகிகளும் முதல் பாதியில் வில்லிகளாகவே மாறிவிடுகின்றனர்.
நாயகன்களுக்கு சமமாக நாயகிகளும் ஆக்ஷனில் பாய்வதால் படத்தில் ஆறு நாயகன் என சொல்லுமளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள். காதல் சரண்யாவின் மனதுக்குள் உறங்கும் காதலும், அவர் கண்கள் பேசும் வார்த்தைகளும் யதார்த்தம்.
ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள். ஊர்வசி, பொன்வண்ணன், கையால் நடந்து வரும் குமரவேலு என அனைவரும் கதைக்கேற்ற தேர்வு.
கல்லூரி பியூனாக வந்து நாயகன் ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசி அடிக்கடி பொன்வண்ணன் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலுவின் காமெடி வழக்கம்போலவே செம கலாட்டா. மாணவிகளின் நிர்வாண கதையை கேட்டு, நள்ளிரவு 12 மணி வரை உறங்காமல் இருக்க வடிவேலு முயற்சிப்பது கிக் காமெடி.
சிக்ஸ் பேக் ஹாலிவுட் வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் தனது உடலைப் போலவே கேரக்டருக்கும் உரமேற்றுகிறார். படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம்.
மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்... மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸ’ல் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி.
பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.
இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும், சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.
ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரின் மலைவாழ் குடிசை செட், செயற்கைகோள், ராணுவ ஆயுதங்கள் கனக் கச்சிதம்.
பேராண்மை - கம்யூனிச சிந்தனைகளுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படம்.