பொருட்காட்சி மைதானத்தில் தொலைந்த குழந்தை போல, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி தொலைந்து போய் விட்டிருந்தது. பழம்பெருமை பேசியே நிகழ்காலச் சிக்கல்களை மறக்கடித்துவிடும் சாமர்த்தியம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! அப்படி தமிழர்களின் பழம்பெருமைகளை சுட்டிக்காட்டும் ‘இனியவை நாற்பது’ ஊர்வலமும், கண்காட்சி அரங்கும் தமிழர்களை பரவசப்பட வைத்து, ஈழச் சிக்கல்களை மறக்கச் செய்தது. வாலியும் வைரமுத்துவும் நா.முத்துகுமாரும் செம்மொழி நாயகனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறின. ஈழ மண்ணில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்தது. ‘ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு குழுவை நியமித்தது சட்டவிரோதமானது. எங்கள் நிர்வாகத்தில் குறுக்கிட அவர்கள் யார்? இந்தக் குழுவில் இருக்கும் யாருக்கும் விசா தரமாட்டோம்’ என்று கொதித்தது இலங்கை அரசு. ஐ.நா. அமைப்பை கண்டித்து ராஜபக்ஷே கட்சியின் சார்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க, ஒரு அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தைத் தாக்குவதில் தவறில்லை’ என்றுகூட பேசினார்.
‘இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது நுடுல்ஸ் தயாரிப்பது போல சில நிமிட வேலை கிடையாது. அதற்கென நாங்கள் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வோம்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளிப்படையாகவே சொன்னார். இந்நிலையில், செம்மொழி மாநாட்டின் சாரலாக, இலங்கை பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டு அழைப்பிதழைக்கூட முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தார். செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் முக்கியம்; இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கடிதம் சாதாரணமானதா?
மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை; தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்லும் புதிதான ஆய்வுகள், நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தமிழில் செய்யவேண்டிய மாற்றங்கள், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரவேண்டியவை என்னென்ன?, கணினி பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழுக்கு என்ன செய்யவேண்டும்... இப்படியான முடிவுகளை எடுக்க அடிகோலும் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்க வேண்டும். 380 கோடி செலவிடப்பட்ட செம்மொழி மாநாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் படிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வரங்குகளில் கூட்டமே இல்லை. படித்த கட்டுரைகள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை!
தமிழின் சிறந்த நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழி நூல்களை தமிழில் கொண்டுவரவும் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதும், யூனிகோட் எழுத்துரு பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்புமே இந்த மாநாட்டால் நடந்த உருப்படியான விஷயங்கள். ஆனாலும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர நினைக்கும் இந்த அரசு, தமிழில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதை மனசாட்சியோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்விகளை தமிழில் படிக்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களே இல்லை; தரமான புத்தகங்களை மொழிபெயர்க்க இதுவரை நடந்த எந்த முயற்சிக்கும் அரசின் ஆதரவு இல்லை. பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழில் இருந்தாலும், சகல வசதிகளும் அரசு பள்ளிகளில் இருந்தாலும், தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சூழ்நிலை அந்தப் பள்ளிகளில் இல்லை என்பதை யாராவது மறுக்கமுடியுமா? தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தரமான கல்வியைத்தான் பெறுகிறோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மரபணுப்பூங்கா, செம்மொழிப் பூங்கா என கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தமிழை வளர்த்துவிடாது. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகத் தலைவர்கள் அதற்கான ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முல்லைபெரியாறு அணைக்காக பிரதமரைச் சந்திக்க கேரளத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அப்படிச் செல்வதை யாராவது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியுமா?
உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர விரும்பினாலும் அதற்கு எளிய எழுத்துப் பயிற்சிகளைக் கொண்ட முழுமையான புத்தகங்கள் கிடைப்பதில்லை; தமிழின் தாய்பூமியான இங்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்னும் படிக்கப்பட்டாத கல்வெட்டுகளிலும், இடிந்துகிடக்கும் ஏராளமான கோயில்களிலும் தமிழகத்தின் & தமிழனின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.அழிவிலிருந்து அதை மீட்க வேண்டும்.
உண்மையில் இதையெல்லாம் செய்வதற்கு செம்மொழி மாநாட்டுக்கு ஆன செலவைவிட அதிகம் ஆகிவிடாது; தேவை, நிஜமான அக்கறை மட்டுமே!
நன்றி : தெனாலி