விழிப்புணர்வு தேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு தேவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 டிசம்பர், 2009

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!!


தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

வெள்ளி, 11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

நன்றி : காலம்

புதன், 9 டிசம்பர், 2009

"தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது...?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பணியில் முதல் கட்டமாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாடத்திட்டம் குறித்த முன் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடம் இருக்கக்கூடாது என்று கூச்சல் போடத் துவங்கியுள்ளார்.


மேலும் மறுமலர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பற்றிய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும், இவையெல்லாம் இந்து விரோத நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள் ளார்.சமச்சீர் கல்விப் பாடங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இராமகோபாலனின் இத்தகைய மத அடிப்படைவாத மிரட்டல்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

விழிப்புணர்வுக் கருத்துக்கள் இந்து விரோதக் கருத்தென்று இவர் கூறுவதன் மூலம், இந்துக்களைக் கேவலப்படுத்தி யுள்ளார். இவருடைய மூடப்பழக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது? இஸ்லாமியர் பற்றியும், கிறிஸ்தவர் பற்றியும் பாடத்தில் வரவே கூடாது என்று கூறும் துணிச்சல் இந்த நபருக்கு எங்கிருந்து வந்தது?

இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இந்திய வர லாற்றில் இடமே இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?வர்ணாசிரமக் கல்வி என்ற பேரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்து வந்த அதே குரல்தான்,

இன்று இராமகோபாலன் வடிவில் வந்து நிற்கிறது. இந்த விஷவித்தை தமிழ் மண்ணில் ஊன்ற நாம் அனுமதிக் கக்கூடாது.

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும், சகல பகுதி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களும் ஒரே குரலில் உறுதியுடன் இதை எதிர்த்து நிற்க வருமாறு தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

ஏதாவது ஒரு குற்றம் சொல்லி, எந்த வகையிலேனும் சமச் சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்கிற அர சியலும் இக்குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

தமிழகத் தில் எடுபடாமல் போன ரத்தக்கறை படிந்த தங்கள் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலை, இப்பிரச்சனையைப் பெரிதாக்குவதன் மூலம் முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் இதைப்பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழர் கல்வி உரிமைக்கு எதிரான இராமகோபாலனின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட தமுஎகச தயாராக இருக்கிறது.

இத்தகைய மத அடிப்படைவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல் அரசியல் உறுதியுடன் நின்று சமச்சீர் கல்வியை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கூடிய பாடத்திட்டத் துடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 5 டிசம்பர், 2009

உலகில் உயிர்கள் உருவானது கடவுளின் செயலா?


உலகமும் - உயிர்களும்

உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன அல்ல; எரிமலைகள் வெடித்தமையால்தான் உயிர்கள் உற்பத்தி ஆயின. இதோ ஆதாரம்:

எரிமலைகள் வெடித்துச் சிதறியதுதான் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நீரில், வாயுக்களைக் கலந்து மின்சாரத்தைச் செலுத்தி அந்த நீரில் அமினோ அமிலம் உண் டானதைச் சோதனைச் சாலைகளில் செய்துபார்த்து இந்த முடிவுகளைக் கூறியுள்ளனர்.

எரிமலைகள் வெடித்துச் சிதறியயமைதான் தொடக்க காலத்தில் இருந்த தூசுக் குழம்பைச் சூடாக்கி வாயுக்களை உற்பத்தி செய்துள்ளன என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

1953-இல் ஸ்டான்லி மில்லர் எனும் ஆய்வாளர் இரண்டு பிளாஸ்குகளில், ஒன்றில் தொடக்க காலக் குழம்பு (Cosmic Soup) எனவும், மற்றொன்றில் வாயுக்கள் எனவும் எடுத்துக் கொண்டு ஊழி யின் தொடக்க கால நிலையை உருவாக்கிக் கொண்டார். பிறகு இவை இரண்டையும் ரப்பர் குழாய் மூலம் இணைத்தார். பின்னர் இவற்றில் மின்சா ரத்தைப் பாய்ச்சி மின்னலின் தாக்குதலை நடத்தச் செய்தார்.

சில நாள்களுக்குள் நீரில் அமினோ அமிலங்கள் உற்பத்தியாகி மேலும் சில உயிர்க் கூட்டுகளும் உருவாகி, உயிர்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைத் தோற்றுவித்தன.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரினப் பேராசிரியர் ஜெஃப் பாடா என்பவர் ஸ்டான்லி மில்லரிடம் உதவியாளராக இருந்தவர்; மில்லர் பயன்படுத்திய சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்தார். அண்மைக்காலக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து ஏதும் புதிய பொருள்களைக் காண முடியுமா என ஆய்ந்தார்.

11 சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்ததில் 22 வகை அமினோ அமிலங்கள் உள்ளதைக் கண்டு பிடித்தார். இவற்றில் 10 வகைகளை ஏற்கெனவே மில்லரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மின்னல்களும் எரிமலை வெடிப்புகளும் சேர்ந்துதான் உலகில் உயிர்களை உருவாக்குவதற்கு உதவி செய்துள்ள என்பதுதான் ஜெஃப் கண்டுபிடித்த ஆய்வின் முடிவாகும்.

இன்னும்கூட பலவற்றை மில்லரின் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியம் என பாடா கூறுகிறார். எரிமலைக் குழம்புகள் பற்றி அறிந்திடக் கண்டுபிடிக்கப்பட் டுள்ள நவீன கருவிகள் பலவேறு கூட்டுப்பொருள்களைக் கண்ட றிய உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மின்னலின் மின் சக்தியும் வாயுக்களோடு சேர்ந்து எரிமலைக் குழம்புகளுடன் இணைந்த போது, உயிர்கள் உருவாவதற்கானச் சூழலைத் தோற்றுவித்தன என்பதுதான் இந்த ஆய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

உயிர்களின் உற்பத்தியில் கடவுளுக்கு தொடர்பே கிடையாது. அப்படிக் கூறுவது மூடத்தனம் என்பதுதான் முடிவு..

----------- "தி டெய்லி டெலிகிராம்" இதழில் வெளிவந்த ஆய்வு முடிவு.

இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் !!!


அரியானா மாநிலத்தின் ரோடக் நகரில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்ட வகுப்பில் சேர இடம் மறுக்கப்பட்ட மாணவர் குல்ஷன் பிரகாஷும் வேறு சிலரும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே.எம். பஞ்சால் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகத்தின் பட்ட வகுப்பில் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்து பட்டம் பெற்ற எங்களுக்கு முதுகலைப் பட்ட வகுப்பிலும் அதே அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வழக்கு தொடுத்தனர்.

2007_ 08ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அவர்கள் வழக்கு தொடுத்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

அரசியல் சட்டத்தின் 15 (4) வது பிரிவு, 16 (4) வது பிரிவு ஆகியவற்றை மனுதாரர்கள் மேற்கோள் காட்டி இட ஒதுக்கீட்டுச் சலுகை கோருகின்றனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிட தேவைப்படும் சமயங்களில் சலுகைகளை அளிக்க அரசுக்கு அதிகாரம் அளிப்பவைதான் அந்தப் பிரிவுகளே தவிர கட்டாயம் இடங்களைத் தந்தே தீர வேண்டும் என்கிற வகையிலான நிரந்தர ஏற்பாடுகள் அல்ல. அந்தந்த மாநிலங்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் இந்தப் பிரிவுகளை இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம். அரியானா மாநில அரசுகூட எதிர்காலத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) பழங்குடி (எஸ்.-டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) வகுப்பு மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அவசியம் என்று கருதினால் இட ஒதுக்கீட்டு முறையை ஏதேனும் ஒரு வகையில் அமலுக்குக் கொண்டு வரலாம் என்று விளக்கிய நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரித்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பு உண்மையிலே அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று என்பதில் அய்யமில்லை.
சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. அந்த நிலையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமே (1951) மேற்கொள்ளப்பட்டு இன்றுவரையில் கல்வியில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது 15(4); வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 16(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்ற ஒன்று.

அத்தகைய சட்டங்களின் வலிமையைப் பலகீனப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது மறுபரிசீலனை செய்யப்படவேண்டியதாகும்.

இந்த இரு பிரிவுகளின் அடிப்படையில்தான் இதுவரை உச்சநீதிமன்றமேகூட பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.-அப்பொழுதெல்லாம் சொல்லப்படாத ஒரு கருத்து இப்பொழுது உச்சநீதிமன்றத்திலிருந்து வெளிவந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இட ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய விகிதாச்சார இடங்கள் கிடைத்தபாடில்லை.

கீழ்மட்டப் பதவிகளில்தான் இட ஒதுக்கீடு முழுமையான அளவில் செயல்படுத்தப்படுகிறதே தவிர, மேலே போகப் போக சதவிகிதங்களின் அளவு கீழ்நோக்கிப் போகிறது.

அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு என்பது 1990 ஆம் ஆண்டிலிருந்து, சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது செயல்பாட்டுக்கு வந்தது என்றாலும், உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையின் காரணமாக 1992 ஆம் ஆண்டிலிருந்துதான் செயல்படுத்தப்படுகிறது. கல்வியில் இன்னும் கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தட்டுத் தடுமாறி நடை எடுத்து வைக்கும் நேரத்தில், இதுபோன்ற தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கலாமா?

“பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளா தார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகிய வற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறோம்!’’ என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடங்கப்படுகிறது.

இதில் எடுத்த எடுப்பிலேயே சமூகநீதி என்பதுதான் முன்னுரிமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த சமூகநீதியை இரண்டாம் இடத்தில் தள்ளுவது அதற்கு வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம் என்று நினைப்பது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

தமிழ்நாடு போன்ற சமூகநீதி செழித்த மண்ணிலே அரசுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் இட ஒதுக்கீடுக்கு அனுசரணையாக இருக்கக் கூடும். மற்ற மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன?

அரியானா மாநில அரசில் சமூகநீதி கிடைக்காத காரணத்தால்தானே உச்சநீதிமன்றத்தைத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருவர் அணுகியிருக்கின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் குறித்து சமூகநீதியாளர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி, மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெருங்குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

-------------------"விடுதலை" தலையங்கம் 4-12-2009