பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 பிப்ரவரி, 2010

வெள்ளமெனத் திறந்திடுவீர்! அள்ளிச்சென்று மாந்திடுவீர்! "பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளை " !!!

"பற்றற்ற உள்ளம், பகைக்கஞ்சாப் பேராண்மை
வற்றாத தன்மான நல்லுணர்ச்சி - கற்றற்கு
உரிய கடப்பாடு உறுதியோடு அய்ந்தும்
பெரியாரின் தொண்டர்க்கு அணி "

 (புரட்சிக்கவிஞர் பாவேந்தர் , "குயில்", 18-11-1958)
 பற்றற்ற உள்ளம்
 பகைக்கு அஞ்சாப் பேராண்மை 
 வற்றாத தன்மான உணர்ச்சி
 கடப்பாடு
 உறுதி
      
            மாதம் பல ஆயிரம் வருவாய் தந்த மண்டிக்கடை வணிகம்; மாதம் சில ஆயிரம் வருவாய் தந்த பஞ்சு ஆளை ;மஞ்சளும் கடலையும் விளைந்த பாசன நிலம்;வாடகை வருமானம் தரும் 150 குடியிருப்பு வீடுகள்; 29 கவுரவப்பதவிகள்; தங்கக்காப்பு; புலால் சோறு படைக்கும் செல்வ செழிப்பு; கள்ளும்  தேங்காயும் தந்த தென்னந் தோப்பு ; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உருதுனைகள். இத்துனை ஏந்துகளையும் பெற்றிருந்தவர் பெரியார் .

சிம்மம் போன்ற அந்த மேதை 1919 இல் இவ்வளவையும் துறந்துவிட்டு ,தம் குறிப்பறிந்து செயல்பட்ட துணைவியார் நாகம்மை;தம் மனங்கோணாமல் நடந்த தமையனார் கிருஷ்ணசாமி ,தட்த்தட்டி அறிவுரைத்த தாயார்;அடித்துதிருத்த விரும்பிய தந்தை;மதுக்குடியில் மிதந்த மனமொத்த நண்பர் குழாம்;சேலம் நகராட்சி தலைவர் இராஜாஜி பின்பற்ற விரும்பிய ஈரோடு நகராட்சி நிர்வாகம் .

இத்துனையையும் தூக்கி எறிந்துவிட்டு ,காந்தியத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தெருதெருவாய் - ஊர் ஊராய் நடந்தும்,மாட்டு வண்டியிலும்,பேருந்திலும்,தொடர் வண்டியிலும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலும் பல ஆண்டுகள் பயணித்த - பற்றற்ற உள்ளம்
  
சாணி உருண்டை அடி,அழுகிய கோழி முட்டை அடி,கல்லடி ,சொல்லடி ,செருப்படி,செருப்புத் தோரண வரவேற்ப்பு ,கல்லுக்கும் காசுக்கும் அடியாள்களாகத் திரண்ட காங்கிரஸ் காலிகளின் எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் நையாண்டி ;வெள்ளை ஆட்சி சுமத்திய அரச நிந்தனை வழக்குகள் அவ்வளவையும் கண்டு அஞ்சாத - பேராண்மை 
ஆயிரம் ஏக்கருக்கு அதிபதியாய் -அமைச்சர் பதவியில் அமர்ந்தவரே -ஆங்கிலம் கற்ற மேதைகளாய் -சொத்தை விற்று கட்சியை வளர்தகலாய் -பார்பனரல்லாதாருக்கு பதவி தேடி அளித்தவர்கலாய் விளங்கிய தமிழர்,தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகள்,ஒரியர்களிடம் -'எங்கே உங்கள் சமுதாய சுயமரியாதை ? ஏன் நீங்கள் அதற்க்கு வழிகானக்கூடது ? என்று வினாத் தொடுத்து தன்மான உணர்ச்சியூட்டியத் தன்மான இயக்கம் கண்ட தலைமகன் . 
கள்ளுக்கடை ஒழிப்பு,அந்நியத் துணி எரிப்பு,பதவித் துறப்பு ,கட்டாய இந்தி எதிர்ப்பு எனக் கடமைகளை ஆற்றுவதில் தோய்ந்த கடப்பாடு . 

சிதம்பரம் இரயிலடியில் கொலை முயற்சி ,திருநெல்வேலியில் அடியாள்கள் எதிர்ப்பு,சேலம் இராசேந்திர சத்திரத்தில் கத்தியால் குத்திட வந்த காங்கிரசாரின் கையாள்;கட்சியினால் கவுரப்பதவி அடைந்தவர்களின் உள் எதிர்ப்பு ,இவை எதற்கும் அஞ்சாத மன உறுதி .

இவ்வளவு அறிய தன்மைகளைப் பெற்ற அவர்தாம் , ஈ,வெ,ரா !

தான் பிறந்த தமிழ்நாட்டில் தன்னியோத்த தமிழ் மக்கள் சமுதாயத்தில் சமத்துவம் இழந்து,சமயத்தில் தன்மானத்தையும் தமிழையும் தொலைத்துவிட்டுத தெருப் பஜனை ,தெருக்கூத்து ,தேர்த்திருவிழா ,நீதிமன்றம் ,பார்ப்பன வழக்கறிஞர்கள் வீடு,கள் சாராயக் கடை எனத் தன்மானம் இழந்து வாழ்ந்த இழிநிலை கண்டு மணம் நொந்து ,தன்னுரிமையை இழந்த தமிழர்க்குத் தன்னுரிமை வேண்டுமெனத் துணிந்தார்.அவர்தாம் ஈ.வெ.ரா ! 

"நாய்களும் குட்டரோகிகளும் தீண்டப்படாதாரும் நுழையக்கூடாது " (பிராமணாள் ஓட்டல்)
"பிராமணாள்" - "இதராள்" சாப்பிடுமிடம் ( இரயில்வே நிலைய பிராமணாள் ஓட்டல்)
"நீச பாஷை தமிழ் - அதில் இசை பாடக்கூடாது "
"ஆறாம் வகுப்பு முதல் இந்தி கட்டாயப்பாடம்;தேர்வு எழுதுவதற்கான " பாடம் என விதித்தவற்றை - "தேவடியாள் சதிர் எனப் பெயர் வைத்து " தமிழ் இனப்பெண்களை விலங்குகளாக ஆக்கியும் நடத்தப்பட்டதை எதிர்த்தார். - அவர்தாம் ஈ.வெ.ரா !

பெரிய பண்ணையம் -  பெரிய படிப்பு - பெரிய சதி மரியாதை -பெரிய அமைச்சர்,சிறிய அமைச்சர் பதவி -பட்டுக்குல்லாய் ,பங்களா வாழ்க்கை ,பராக்குக்கூரப் பணியார்கள் இத்துனையும் உள்ள நீங்கள் நாலாஞ் சாதிதானே -சூத்திர சாதிதானே ! பூணூலும் பஞ்சகச்சமும் பட்டை நாமமும் உச்சிக்குடுமியும் ஆங்கில படிப்பும் அமைச்சர் பதவியும் உங்கள் சூத்திரப்பட்டத்தையும் சாதி இழிவையும் போக்கவில்லையே - எங்கே உங்களுக்குச் சுயமரியாதை என்று பண்கள் அரசரை.ஆர்க்காடு இராமசாமி முதலியாரை ,பார் -அட்-லா  படித்த பி.தி.இராசனை தட்டிக்கேட்டு அவர்களையும் துணைக்கு திரட்டிக்கொண்டு ,பார்பனரல்லாத பெருந்தலைவர்களைக் கண்டு பேசி ,1926 இல் பார்ப்பனரல்லாத சுயமரியாதை இயக்கத்தை கண்டார்!   அவர்தாம் ஈ.வெ.ரா !
வெள்ளையர் காலத்தில் அதிகாரப் பதவிகளில் வெள்ளைநிற ஆங்கிலேயரும் ,தவிட்டு நிற பார்ப்பனருமே குடிநீர் ஊற்றுகிற பணி முதற்கொண்டு கோட்டாட்சியர் பதவி வரையில் ஆக்கிரமித்துக்கொண்டுருந்ததை மூர்க்கமாக எதிர்த்து நின்று ,அவரவர் வகுப்புக்கு அவரவர் எண்ணிக்கைப்படி அரசாங்க வேலைகளை பங்கு போடு என வேல்லையரிடமும் ,பார்ப்பனப் பரதேசிகளிடமும் வாதாடி-போராடி வகுப்புவாரி உரிமையை மாகாண அரசு வேளையிலும் ,முறையே மத்திய அரசு வேளையிலும் 1927 இலும் ,1935  இலும் பெற்றுத்தந்த மக்கள் நாயக உரிமைப் போராளி  ;அவர்தாம் ஈ.வெ.ரா !
அப்பன் செத்தால் அம்மாவுக்கு வயிற்றுக்கு சோறு;இடுப்புக்குத் துணி -கணவன் செத்தபிறகு மனைவிக்கு உரிமை அவ்வளவுதான் .
ஆண்பிள்ளை வேண்டும் -கொல்லி வைக்க ! கருமாதி செய்ய ,திதி கொடுக்க -இவற்றைப் பெண்பிள்ளைகள் செய்யக் கூடாது -இது சாஸ்திரம் !

குடித்துவிட்டு அடிப்பான்;கூப்பிட்ட குரலுக்கு ஓடிவராவிட்டால் உதைப்பான் -படித்தவன் வாசுகுயின் கற்பை சுட்டி சொல்லி ஏசுவான் ;எந்த பெண்ணும் எதிர்த்து பேசக்கூடாது ;ஆண்பிள்ளை பெற்றெடுத்தறாதவளை வீட்டில் வைத்துக்கொண்டே ,இரண்டாம் ,மூன்றாம் மனைவிகளைக் கட்டிக்கொள்வான் ,அதாவது பெண் ஒரு அனுபோகத்துக்கான பண்டம் என்று நம்பினான் .உலகில் பாதிப்பேர் பெண்கள்-உலகில் பெண்கள் நிலை பெரும்பாலும் அப்படித்தான் .அதை அடி நாள் முதல் எதிர்த்தார் - அவர்தாம் ஈ.வெ.ரா !
ஈ.வெ.ராமசாமி ,1925 வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என அறியப்பட்டார் ! ஈ.வெ.ரா .சுயமரியாதை சங்கத்தின் தந்தையாக.1926 இல் முகிழ்த்தார்.
தமிழறிந்த பெரியோரும் ,ஆத்திகரும்,நாத்திகரும்,அரசியலறிஞரும் கட்டாய இந்தி எதிர்ப்பு போர்ப்படையின் தலைவராக -தமிழர் தலைவரராக -1938 இல் ஏற்றுக்கொண்டனர்.

தமிழர் தலைவராக - தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி உருவானார்.
அவர் இந்தியத்தேசியவாதியாக இருந்த போதே ஏடுகளில் அழுத்தினார்.மேடைகளில் பேசினார்.அவருடைய எழுத்துகளை 'நவமணி' 'குடிநூல்' ஏடுகள் வெளியிட்டன.அவருடைய பேச்சை The Hindu, The Madras mail,The Madras Standard,Justice, சுதேசிமித்திரன் ,திராவிடன்,நாடற்குல மித்திரன்,தமிழ் நாடு ,நவ சக்தி ஏடுகள் வெளியிட்டன.
இவ்வேடுகளில் வெளிவந்த அவற்றை திரட்டி நாம் விளியிட வேண்டும் .

"நாடற்குல மித்திரன் " எடு முழுவதுமாக எனக்கு கிடைத்தது .அதில் 1922 ,1923 , 1924, 1925 இல் வெளிவந்த எல்லாச் செய்திகளையும் முதன் முதலாக 2009 செப்டம்பர் சிந்தனையாளன் இதழில் தான் நான் வெளியிட முடிந்தது .

The Hindu ஏட்டில் 1950 இல் வெளிவந்ததை 1974 இல் வெளியிட்டேன் .1924 இல் வெளிவந்ததை 1999 இல் முதன்முதலாக வெளியிட்டேன் .

இவற்றையெல்லாம் தேடித் தொகுத்துப் பதிப்பித்து வெளியிடுவதன் மூலம்,அவருடைய தொடக்க காலத்திய சிந்தனையே தெளிவாக ,புதியதாக ,புரட்சி மணம் வீசுவதாக விளங்கியதை நாம் அறிய முடியும் .
தமக்கு சொந்தமான " குடி அரசு " ஏட்டை 2.5.1925 இல் தான் அவர் தொடங்கினார் .அதில் வெளிவந்த அவருடைய தலையங்கக் கட்டுரைகள் ,அறிக்கைகள்,உரையாடல்கள் முற்றாக அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளை உலகுக்கு உணர்த்துபவை.அவை அப்படியே முதல் நிலை சான்றுகள் .
1925  முதல் 1970  வரை 45 ஆண்டுக் காலத்தில் அவர் தொடங்கிய எல்லா ஏடுகளிலும் அவர் எழுதினார்."விடுதலை" நாளேடு 1935 இல் தொடங்கப்பட்டது .21.12.1973 வரை -அவர் 19.12.1973 இல் ஆற்றிய சொற்பழிவு வரை அவற்றில் வெளிவந்தன.அவற்றிலும் அவருடைய 'தலையங்கங்கள் ,அறிக்கைகள்,வெளிவந்தன.அவையெல்லாம் முதல்நிலை சான்றுகள் .அவருடைய ஏடுகளிலும் (1925 முதல்)பிறர் நடத்திய ஏடுகளிலும் அவருடைய சொற்பொழிவுகள் 1914 முதல் - 1935 முதல்  வெளிவந்தன.அவர் எதையும் எழுதி வைத்துப் பேசுவதில்லை.எடுத்த எடுப்பில் பேசுபவர்.அவருடைய சொற்பொழிவுகளை அவரே ஏடுகளுக்கு எழுதி தந்தார்.தோழர்கள் எழுதி தந்தனர்.உதவியாளர்கள் எழுதித் தந்தனர்.அப்படி எழுதப்பட்டவற்றை அவர் படித்து திருத்தி கையொப்பமிட்டு ஏடுகளுக்கு அனுப்பினார்.இவையெல்லாம் இரண்டாம் நிலை சான்றுகள் .

1974 இல் பெரிய அளவில் அவருடைய சொற்பொழிவுகளும்,எழுத்துக்களும் என்னால் முதன் முதலில் தொகுக்கப்பட்டு ,பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பெருநூல்தான் " பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" மூன்று பெருந் தொகுதிகள்.இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு சொற்பொழிவுகள் இவை இரண்டாம் நிலை சான்றுகள் .மூன்றில் ஒரு பகுதி எழுத்துகள்-முதல் நிலை சான்றுகள் .இந்த இரண்டாம் பதிப்பில் இவற்றிலிருந்து நீக்கங்கள் உள்ளன. புதிய சேர்க்கைகள் உள்ளன.
இப்போது விரிவாக்கம் செய்யபடுவதற்க்காக மேற்கொண்டு தொகுக்கப்பட்டவற்றுள் பெரும்பாலானவை பெரியாருடைய எழுத்துக்களே .- அவ்வளவும் முதல் நிலை சான்றுகளே !
எல்லாவற்றையும் சேர்த்து ,73  துறைகள் அல்லது பொருள்கள் அல்லது செய்திகள்; பற்றிய பெரியாரின் அறிய தெளிவான ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தும் -9000 பக்கங்களாக - 20 நூல்களாகத் தமிழர்க்குத் தரப்பட்டுள்ளன.இவற்றை தூக்கிச் சென்று ,ஒரு குன்றின் உச்சியில் நின்று ,உரத்த குரலில், " பெரியார் சிந்தனைகள் வெல்க!" எனத் தமிழரெல்லாம் கூறலாம்! அதற்கான பெரியார் கொள்கை முரசம்தான் "{ பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் " நூல்.
அதனை வெற்றியாக வெளிக்கொனருவதர்க்கு 100 பேர்களுக்கு மேல் தமிழகம் ,கருநாடகம், ,துபாய் பகுதிகளிலுள்ள பெரியாரிய-மார்க்சிய -அம்பேத்கரிய-தமிழியக்கத் தோழர்களும் தொண்டர்களும் 100  நாட்களுக்கு மேல் ஒய்வு ஒழிச்சல் இன்றித் தம் பாரிய உழைப்பத்தந்துள்ளனர்.
எங்கள் ஒவ்வருவருடைய முயற்சியும் -ஒவ்வொரு தாயும் தலைச்சன் பிள்ளையைப் பெற்றெடுத்திடப் படுகிற துன்பத்தை விட அதிகமானது.
இது தேவையா என்று ஏகடியம் பேசினோர் -இது வெற்றி பெறக்கூடாது எனத் திட்டமிட்டு 11.10.2009 முதல் 11.1.201 வரை முட்டுக்கட்டை போட்டோர் எல்லோருமே இந்தப் பணியை முடுக்கிவிட எங்களுக்கு மறைமுகமாக உதவினர்.
இப்பேருழைப்பாளர்களுக்கும் ,எங்களின் அன்பான -அடக்கமான-ஆனால் திடமான ,சிறப்பான ,ஈடு இணையற்ற நூல் வெளியீட்டு முன்பதிவு முறையை மனமார வரவேற்றுப் பல நூறு தமிழப் பெருமக்களும் செல்வர்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவுக்கு முன்வந்து பெரிய அளவில் ஆதரவு நல்கினர்.

தலைச்சனைப் பெற்றேடுக்கத் துன்புறும் தாய்போல எண்களின் வேண்டுகோளை ஏற்று எல்லாவகையிலும் உதவிய எல்லாத் தொச்ஹர்களுக்கும் ,தோழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

35 ஆண்டுகளுக்கு பிறகும் நம்முடன் நலமுடன் ,வாழ்ந்து இன்றும் தமிழ்நாட்டு முதலைமச்சராக விளங்கும் டாக்டர் .கலைஞர் அவர்கள் 21.3.2010 அன்று இந்நூலை வெளியிட்டுச் சிறப்பிக்க மனமுவந்து ஒப்புதல் நல்கியமைக்குப் "பெரியார்-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையின்  சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினையும் பாராட்டுதலையும் அன்புடன் உரித்தாக்குகிறேன் .

வெள்ளமெனத திரண்டு வாரீர்!
அள்ளிச் சென்று மாந்திடுவீர்!
" பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகளை!"

                                                                                                                   - வே.ஆனைமுத்து .

இந்த மலரை முன்பதிவு செய்ய விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி :

வே.ஆணைமுத்து ,
தலைவர் - 'பெரியார் -நாகம்மை கல்வி அறக்க்கட்டளை ,
19,முருகப்பா தெரு,சேப்பாக்கம் ,சென்னை -600005.
பேச : 044 - 2852 2862
பணவிடை /வங்கி முறி மூலம் முன்பதிவு செய்திட விரும்புவோர் :
PERIYAR E.V.RAMASAMY -NAGAMMAI EDUCATION AND RESEARCH TRUST என்ற பெயரில் பணம் செலுத்த வேண்டும் .

ஒரு  தொகுப்பின்  மொத்த  விலை : ரூ .5,800/-
முன்பதிவு திட்டம் -(அதிக தள்ளுபடி ரூ .2,000/- )ஒரே தவணையில் ரூ.3,800/-

-பிப்ரவரி 2010 சிந்தனையாளன் இதழிலிருந்து உங்களுக்காக. -- சூரியன்