வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர்

இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.

ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.

அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:

ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?

''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.

புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.

திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''

ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?

''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் [^] பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.

தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''

சீமானின் போராட்டம் [^] அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.

ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு [^]க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் [^] இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.

ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?

பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''

உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?

''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.

அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!

மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.

அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''

சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?

''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''

லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?

''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.

இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''

நன்றி- தட்ஸ் தமிழ்