புதன், 8 ஜூன், 2011

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா?

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா? முடியும் என்கிறார் பாபா ராம்தேவ். அப்படியே சொல்கின்றன இந்தியாவின் பரபரப்பு ஆங்கில செய்தி சேனல்கள். அப்படியே சொல்கிறார்கள் பி.ஜே.பி. உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் தலைவர்கள். பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை அரசு அதிரடியாக முடிவுக்குக் கொண்டுவந்த விதம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் பாபா ராம்தேவ் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்? அதன் பின்னணி என்ன? யாரைப் பாதுகாக்க, யாரை வளர்த்துவிட அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பதுபோன்ற கேள்விகளை இந்த பரபரப்பு மீடியாக்கள் எதுவுமே எழுப்பாதது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. ஏதோ ஊழலை ஒழிக்கவந்த அவதார புருஷனாக ராம்தேவை முன்னிறுத்துகின்றன ஆங்கில செய்தி சேனல்களும் தேசிய செய்தித்தாள்கள் சிலவும்! உண்ணாவிரதத்தைத் தடுத்ததற்காக அவரிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் பேசுகிறார் அத்வானி. அதற்கெல்லாம் அவர் தகுதியானவரா?


மனித எலும்புகளைக் கலந்து ஆயுர்வேத மருந்து தயாரிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ராம்தேவ். ஆயிரங்களில் கட்டணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும், மேல்தட்டு மக்களுக்கான ஆன்மிக குரு அவர். கோடிக்கணக்கில் சொத்து, வெளிநாடுகளிலும் ஆசிரமக் கிளைகள், எங்கும் தனி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சொகுசு, ஒரு தீவையே வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளும் அளவுக்கு ஆடம்பரம் என பணத்தின்மீது படுக்காதகுறையாக யோகா சொல்லித் தரும் ஆசாமி அவர்.
கடந்த ஓராண்டாகவே தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்தக் கட்சியை தேர்தலில் போட்டியிடச் செய்யப்போவதாகவும் சொல்லி வந்தார். அந்தத் தருணத்திலிருந்துதான் அரசியல் தொடர்பாக அடிக்கடி கருத்துகள் சொல்ல ஆரம்பித்தார். லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அதற்கு தேசமெங்கும் இளைஞர்கள், நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. இது ராம்தேவை பெருமளவு ஈர்த்தது. உடனே டெல்லிக்கு ஓடி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் உட்கார்ந்து கொண்டார். லோக்பால் மசோதா தொடர்பான ஆலோசனைக் கமிட்டியில் மக்கள் பிரதிநிதிகள் ஐந்து பேரை சேர்த்துக்கொள்ள அரசு சம்மதம் தெரிவித்தது. அன்னா தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பார் என எதிர்பார்த்தார் ராம்தேவ். அன்னா ஹசாரே இந்த சாமியாரின் உள்நோக்கம் தெரிந்து உஷாராகி, இவரைப் புறக்கணித்தார். உடனே பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் என ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை இந்தக் கமிட்டியில் அன்னா ஹசாரே சேர்த்ததை எதிர்த்து அறிக்கை விட்டார் ராம்தேவ். அப்பழுக்கற்ற இரண்டு சட்ட நிபுணர்கள் அந்தக் கமிட்டியில் இடம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தலைவர்கள் யாருடைய சதியாகக் கூட இந்த அறிக்கை இருக்கக்கூடும்.
 
அதன்பின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே அன்னா ஹசாரே ஆனார். காந்தி குல்லாவுடனான அவரது உருவமே பொதுவாழ்க்கையில் நேர்மையின் சின்னமாக ஆனது. சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரம்மாவும் அன்னாவின் வலதுகரமுமான அரவிந்த் கேஜுரிவால், சந்தோஷ் ஹெக்டே போன்ற அந்தக் கமிட்டியின் உறுப்பினர்களே பிரதானப்படுத்தப்பட்டார்கள். ராம்தேவ் இதில் எந்த ஆதாயமும் தேடிக்கொள்ள முடியவில்லை.


அன்னா ஹசாரேவைத் தாண்டி தானும் புகழ்பெற்று, அந்தப் புகழை அரசியல் எதிர்காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், அதற்கு தானும் ஒரு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு ராம்தேவ் வந்திருக்க வேண்டும். அதற்கு இந்துத்வா அமைப்புகள் தூண்டுதலாக இருந்ததற்கும் ஒரு அரசியல் காரணம் இருக்கிறது.

நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சி மாபெரும் சரிவைச் சந்தித்துவரும் வேளையில், அந்த சரிவின் ஆதாயத்தை பெரும்பாலும் ஆங்காங்கே இருக்கும் குட்டி மாநிலக் கட்சிகளே அனுபவித்து வருகின்றன. வரும் 2014 பொதுத் தேர்தலுக்குள் காங்கிரஸுக்கு மாற்றான வலுவான தேசியக் கட்சியாக தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறது பாரதிய ஜனதா. ஆனால், அதற்குத் தகுந்த தலைவர்கள் அந்தக் கட்சியில் இல்லை. வாஜ்பாய் படுக்கையில் இருக்கிறார்.

அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். வேறுவழியின்றி நரேந்திர மோடி மீது இருக்கும் மதக் கலவர கறையைத் துடைத்துவிட்டு, அவரது தலைமையில் அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது பி.ஜே.பி. எனவேதான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை, ‘குஜராத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. நரேந்திர மோடியின் முன்மாதிரியை பின்பற்றினால் ஊழல் ஒழிந்துவிடும்’ என்று சொல்ல வைத்தார்கள். குஜராத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமலே அன்னா இப்படிச் சொன்னதும், அவருக்கு இந்துத்வா முத்திரை குத்தவும் முயற்சி நடந்தது. காந்தியவாதியான அவர் உஷாராக உடனே தன் கருத்தை மறுத்துவிட்டார்.
இப்போது ராம்தேவை அதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘சாமியார்கள் எல்லோரும் ஊழலை எதிர்ப்பவர்கள்; சாமியார்கள் இருக்கும் கட்சியும் ஊழலை எதிர்க்கும் கட்சி’ என சொந்தம் கொண்டாட முடியும்.

படித்த இளைஞர்களுக்கு அரசியல் என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கிறது; நடுத்தர மக்களின் மனோபாவமும் இதுவாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே தங்கள் தோளில் குதிரை சவாரி செய்து, தாங்கள் கட்டும் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள் என்ற நினைப்பு இந்த இரண்டு சமூகத்துக்கும் இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் மெஜாரிட்டி கூட்டமாக இருப்பது இளைஞர்களும் நடுத்தர வர்க்கமும்தான். அரசியல்வாதிகளின் அதிகாரத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதாலேயே அவர்கள் நேரடியாக எதிர்ப்பு காட்டாமல் இருக்கிறார்கள். அன்னா ஹசாரே போன்ற யாராவது போராடும்போது, அந்தத் தலைமைக்குப் பின்னால் அணி திரள்கிறார்கள்.

இதுவும் ஒருவகை அரசியல்தான்! அப்படிப் பார்க்கும்போது இந்தியாவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருப்பது இந்த இரண்டு இனமும்தான். ஊழல் எதிர்ப்பு என்கிற போர்வையில் ராம்தேவ் போன்ற ஆசாமிகளை தூண்டில் புழுவாக மாட்டி, இளைய சமுதாயத்தையும் நடுத்தர வர்க்கத்தையும் வீழ்த்த நினைக்கும் இந்துத்வ சக்திகளின் சதியாகவே இந்த உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது.

மகாத்மா காந்தி என்ற மாபெரும் அவதார புருஷர் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த அகிம்சை போராட்ட ஆயுதம்தான் உண்ணாவிரதம். இன்றைக்கும் இந்தியாவில் எளிய மனிதர்களின் போராட்ட வடிவமாக அதுவே இருக்கிறது. அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றாலும்கூட, உண்ணாவிரதம் இருந்து தங்கள் வலியை உணர்த்த இந்தியாவின் எந்த மூலையிலும் மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.

காந்தி காட்டிய வழியில் உண்ணாவிரதம் இருந்ததால்தான் அன்னா ஹசாரே இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ராம்தேவ் போன்ற ஆசாமிகள் அந்த வலிமையான ஆயுதத்தை கொச்சைப்படுத்த முயற்சிப்பது, மகாத்மாவுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்!

கருத்துகள் இல்லை: