ராஜீவ் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அதைக் காரணம் காட்டி நளினியை சிறுகச் சிறுகக் கொலை செய்வது நியாயமாகாது. வாழும் நீதிமான்களில் மிக மூத்தவரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், 'ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு' என்று தனது தீர்ப்புகளில் அடிக்கடி குறிப்பிடுவார். நீதியரசர்கள் சொல்வதைவிட 'கூட்டணி தர்மங்கள்'தான் இங்கு எல்லாப் பிரச்னைகளையும் தீர்மானிக்கின்றன. எனவேதான், வீட்டுக்கும் வர முடியாமல் சிறையிலும் நிம்மதியாக இருக்க முடியாமல் அந்தரத்தில் அல்லாடுகிறது நளினியின் வாழ்க்கை!
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், உடலில் வெடிகுண்டு தாங்கிய தனு என்ற பெண்ணால் கொலை செய்யப்பட்டார். கைதான 26 பேருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதியானது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர், நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 'ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தானே. அதன் பிறகும் என்னை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?' என்று நளினி கேள்வி எழுப்புகிறார். நளினியை விடுவிக்க முடியாது என்று சிறை ஆலோசனைக் குழு சொன்னதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சிக்கலுக்குக் காரணம் இதுதான்!
''அன்னை சோனியா காட்டிய கருணையால்தான் நளினியின் தூக்குத் தண்டனையே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் மீண்டும் கிளப்புவது நளினிக்கு அனுதாபம் தேடும் முயற்சியே. ராஜீவ் கொலையை நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது'' என்று சொல்லும் காங்கிரஸ் பேச்சாளர் கோபண்ணா, ''சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அதன் போக்கிலேயே விட வேண்டுமே தவிர, இதைப் பிரசாரமாக்கக் கூடாது'' என்கிறார்.
முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால், 14 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது சரியானது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்குமானால், ஆயுள் முழுக்கச் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இது இன்று இருக்கும் சட்ட யதார்த்தம். நளினி தன்னுடைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில்வைத்து அவர்களது பரிசீலனைக்கு தனது வழக்கைக் கொண்டுபோகலாம்'' என்று சொல்கிறார்.
முன்னாள் டி.ஜி.பி-யான வைகுந்தும் இவரது கருத்தையே வழிமொழிகிறார். ''ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்று கறாரான வரையறை இல்லை. ஆயுள் தண்டனை என்பதன் அர்த்தம் ஆயுள் முழுக்கத் தண்டனையை அனுபவிப்பதுதான். நளினியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு முக்கியக் குற்றவாளியாக இருப்பதால், இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து முறையான தீர்ப்பைத் தரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்'' என்கிறார் வைகுந்த்.
'நளினி தொடர்புடைய குற்றம் கொடூரமானது. ராஜீவ் உள்ளிட்ட 18 பேர் கொலை செய்யப்படக் காரணமான சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக அவர் செயல்பட்டுள்ளார்' என்பதை முக்கியக் காரணமாகச் சொல்லி, நளினியின் முன்விடுதலையை நிராகரித்துள்ளது தமிழக அரசு. 'ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது. இந்திய அரசைத் திகைக்கச் செய்வதோ அல்லது இந்திய மக்களிடம் அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க ஆதாரம் இல்லாததால் தடா சட்டப் பிரிவுகள் இதற்குப் பொருந்தாது. சதிகாரர்களில் எவரும் ராஜீவ் காந்தியைத் தவிர, வேறு எந்த இந்தியரின் சாவையும் விரும்பியதற்குச் சான்று ஏதும் இல்லை' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வெளிப்படையாகச் சொன்ன பிறகு, அதே காரணத்தைச் சிறை ஆலோசனைக் குழு கூறுவதும் அதைத் தமிழக அரசு ஏற்பதும் வழக்கை மீண்டும் பின்நோக்கிக் கொண்டுசெல்லும் காரியமாகத்தான் இருக்கிறது.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''நளினி விடுதலையானால் குடியிருக்கப் போகும் ராயப்பேட்டை பகுதியின் இன்ஸ்பெக்டர் மட்டும்தான் நளினியை உறுதியாக விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார். அந்தப் பகுதியில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், தலைவர்களின் வீடுகள், அமெரிக்கத் தூதரகம் இருக்கின்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறார். நளினியின் அம்மாவும் தம்பியும் அந்தப் பகுதியில்தான் 12 ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இருப்பதே யாருக்கும் தெரியாத மாதிரி அமைதியாகத்தான் காலத்தைக் கழிக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கொலை வழக்கு குற்றவாளிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று இருக்கிறது. முன் விடுதலை செய்யும்போது சிறை ஆலோசனைக் குழு, சம்பந்தப்பட்டவர் சிறையில் ஒழுங்காக இருந்தாரா, இவரை வெளியில் விடுவதால் இவரது உயிருக்கு ஆபத்து அல்லது இவரால் மற்றவர் உயிருக்கு ஆபத்து உண்டா, விடுதலை ஆகும் நபரை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைத்தான் பார்ப்பார்கள். இறந்து போனவர் யார் என்பது முன் விடுதலைக்கான தகுதி ஆகாது'' என்கிறார் புகழேந்தி.
மனித உரிமையாளர் 'எவிடென்ஸ்' கதிர், ''நடந்திருப்பது கொடூரமான குற்றம் என்று சொல்லி முன்விடுதலைக்கு மறுக்கிறார்கள். எது கொடூரம் என்பதற்கு என்ன வரையறை? மேலவளவு படுகொலைகள், லீலாவதி கொலை, தா.கிருஷ்ணன் கொலை போன்றவை கொடூரமான குற்றங்களா... இல்லையா? அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் இதுபோல் அடக்கப்பட்டார்களா? அரசாங்கத்தின் கொள்கைகள், நீதிமன்றத்தின் போக்குகள், தீர்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. நளினியை விடுவிக்காமல் இருக்க அரசியல் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஆனால், விடுவிக்கச் சொல்ல மனிதாபிமானக் காரணங்கள் ஏராளம் இருக்கின்றன'' என்கிறார் 'எவிடென்ஸ்' கதிர்.
வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதியதுதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 'நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும், மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது!'
நளினி மகள்!
நளினி - முருகன் தம்பதியருக்கு ஒரே மகள். பெயர் மேகரா. அரித்ரா என்றும் அழைக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தார் நளினி. வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் மேகரா. சில ஆண்டுகள் மட்டும் அம்மாவுடன் சிறையில் இருந்த மேகரா, முருகனின் அம்மாவுடன் இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இருந்து சில ஆண்டுகள் கழித்து தமிழகம் வந்து நளினியைச் சந்தித்தார். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், தொடர்ந்து இங்கு தங்குவதற்குத் தடை ஏற்பட்டது. எனவே, முருகனின் சகோதரர் தன்னுடன் ஸ்காட்லாண்டு அழைத்துச் சென்றுவிட்டார். இன்று அங்குதான் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நளினியைப் பார்க்க அவர் முயற்சிக்க, விசா அனுமதி கிடைக்கவில்லை. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருப்பதைக் காரணமாகக் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டதாம். ''என்னுடைய அம்மா நிரபராதி. அவர் என்னை அருகில் இருந்து படிக்கவைக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் படித்து வருகிறேன். அவர் விரைவில் வெளியில் வந்து எனக்கு ஆசி வழங்குவார்'' என்று தனது உறவினர்களிடம் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம் மேகரா!
ஆனந்த விகடன் / 14-04-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக