திங்கள், 3 மே, 2010

ஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.


தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன். அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?

http://neerottam.wordpress.com/

1 கருத்து:

Sakthi Doss சொன்னது…

"அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன்" நானும் வெட்கித்தலைகுனிகிறேன் நண்பா!!!!!