வியாழன், 3 மார்ச், 2011

தியாகத் திருவுருவம் காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சி, இந்திய அரசியலில் மிகப்பிரதானமான கட்சியாக இருந்து வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் எந்த அளவுக்கு பாடுபட்டது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.
 நேரு மௌண்ட் பேட்டனின் மனைவியின் புகைப்பானை பற்ற வைக்க உதவுகின்றார். (என்னமா தியாகம் பண்றாருன்னு பாருங்க மக்களே)

அதே சமயம், அந்த இந்திய தேசிய காங்கிரஸ் வேறு – சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், தன்மையிலும் தரத்திலும் வேறுபட்டது என்பது வரலாறு சரியாகப் புரிந்தவர்களுக்குத் தெரியும். அன்றிலிருந்து இன்றுவரை இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் செய்திருக்கும் தியாகங்கள் பல (!). சுதந்திரம் அடைவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு & தான் பிரதமராக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததும் உடல்நலம் குன்றிய ஜின்னா சிறிதுகாலம் பிரதமராக இருக்கட்டும் என்று மன்றாடிய மகாத்மா காந்தியின் வேண்டுகோளை நிராகரித்ததும் சரித்திரம். தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக இந்தியாவை இரண்டாக பிளக்க ஒப்புக்கொண்டார் நேரு. அதன்விளைவாக உருவான பாகிஸ்தானால் இன்றுவரை நமக்குத் தலைவலி தீரவில்லை. ஆக, பதவிக்காக நாட்டின் ஒரு பகுதியைத் தியாகம் செய்ததிலிருந்து இந்த தியாக தீபத்தைத் தொடர்கிறது காங்கிரஸ். பின்னால் சீனாவுடன் போர் வந்த சமயத்தில் கிருஷ்ணமேனனின் ஆலோசனையை நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டதன் மூலம், போரில் வெற்றியைத் தியாகம் செய்தது நேருவின் காங்கிரஸ் ஆட்சி.

     மொரார்ஜி தேசாய்க்கும் இந்திரா காந்திக்கும் நடந்த அதிகாரப் போட்டியில் குஜராத் பல சமயங்களில் கலவர பூமியானது. வழக்கமாக காங்கிரஸ் இத்தகைய கலவரங்களுக்கு பி.ஜே.பி.யைக் குற்றம்சாட்டும். ஆனால், 1969 களில் இந்தக் கலவரங்கள் நிகழ்ந்தபோது பி.ஜே.பி. பிறக்கவேயில்லை. மகாராஷ்டிராவிலும் சிவசேனா வளர்வதற்கு முன்னாலேயே கலவரங்கள் நடைபெற்றதின் பின்னணி, காங்கிரசினுள் நிகழ்ந்த மறைமுக அதிகாரச் சண்டை என்பது சென்ற தலைமுறையினருக்குத் தெரிந்த உண்மை.

இன்றைக்கு ‘காமராஜர் ஆட்சி’ அமைப்போம் என்று வாய்கிழிய முழக்கமிடும் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காலத்தில் காமராஜரையே ‘தியாகம்’ செய்துவிட்டது என்பது கசப்பான உண்மை. காங்கிரஸ் (i) என்றும் காங்கிரஸ் (0) என்றும் பிளவுபடவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. அப்போது காங்கிரஸ் (i) யாக இருந்த இன்றைய காங்கிரஸ், சுதந்திர காலத்திலிருந்து தன்னலமற்று பணியாற்றிய காமராஜ், நிஜலிங்கப்பா போன்றோரை இந்திரா காந்திக்காக போட்டுத்தள்ளியது.

        இன்று பி.ஜே.பி. பெரிது படுத்துவதாகச் சொல்லப்படும் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் எப்படி முளைத்தது? சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் புரியும். பாபர் மசூதி இருக்குமிடத்தில் ராமர் விக்கிரகத்தைக் கொண்டு வந்து வைத்தது நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். பல வருடங்கள் நடுவில் மூடி வைக்கப்பட்டிருந்த அந்த சர்ச்சைக்குரிய இடத்தை மறுபடி திறந்து விட்டது ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு (ஷாபானு வழக்கையொட்டி நிகழ்ந்தது இது.) அயோத்தியில் பி.ஜே.பி. செய்தது சரியில்லை என்பதுதான் என் அபிப்ராயமும். ஆனால், கடைசிவரை அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, மசூதியை இடித்தவுடன் மத்திய அரசுக்கு எதுவுமே தெரியாது என்று காங்கிரஸின் உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் சொன்னபோது, காங்கிரஸ் மூலம் மத்திய அரசு சுயகௌரவத்தைத் தியாகம் செய்தது.

        எந்த விடுதலைப் புலிகளுக்கு காங்கிரஸ் ஆதரவும் ஆயுதங்களும் கொடுத்துக்கொண்டிருந்ததோ, அதே காங்கிரஸ் தான் மிறிரிதி-ஐயும் ஆயுதங்களையும் அனுப்பி விடுதலைப் புலிகளை வீழ்த்த முற்பட்டது. இந்தியர்களின் தன்மானமும் தமிழர்களின் நலனும் சந்தோஷமாகத் தியாகம் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளின் அணுகுமுறை தவறு என்றே வைத்துக்கொண்டாலும் இந்தியா இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்.

             ராஜீவிற்குப் பிறகு நரசிம்மராவ் பலரும் ஆச்சரியப்படும் வகையில் ஓரளவு நல்லாட்சி கொடுத்து அசத்தினார். ஆனால் போபர்ஸ் ஆயுதபேர ஊழலில் ராஜீவின் பெயரைக் காப்பாற்றுவதாக நினைத்து அமரரான நரசிம்மராவின் நற்பெயரைத் ‘தியாகம்’ செய்து சமாளித்தது காங்கிரஸ். அதே ஊழலில் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமான குவாத்ரோச்சி என்ற மாஃபியா மன்னனைக் காப்பாற்ற இந்திய இறையாண்மையைத் தியாகம் செய்து குற்றவாளியைத் தப்பவிட்டதுடன் ஊழல் பணத்தையும் அவருக்கே பரிசாக அளித்து இந்தியர்களின் தன்மானத்தை தாரை வார்த்தது. அதற்கு ‘பெரிதும் உதவி புரிந்த’ பரத்வாஜைக் கர்நாடகத்து கவர்னராக்கியது காங்கிரஸ். எடியூரப்பாவின் ஊழலைப் பற்றி முழு நேர அரசியல்வாதியைப் போல் குழாய்ச் சண்டை பேட்டிகள் கொடுத்து அசத்துகிறார் இந்தக் காங்கிரஸ் தியாகி!

 எமர்ஜென்ஸி காலத்தில் பிந்தரன் வாலேயை உருவாக்கியதில் பெரும்பங்கு உண்டு இந்திரா காந்தி அம்மையாருக்கு. பின்னாளில் தன்வினை தன்னைச் சுட்டது சரித்திரம். ஆனால், அதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் உயிரைத் தியாகம் செய்ய வைத்துப் பழிதீர்த்துக் கொண்டது காங்கிரஸ். இந்திய ஜனநாயகத்தின் ‘கருப்பு காலம்’ என்றழைக்கப்படும் எமர்ஜென்சி கொடுமைகளை மறைக்க – கடைசியாக காங்கிரஸ் தியாகம் செய்ய முடிவெடுத்திருப்பது சஞ்சய் காந்தியை! அவர் அவருடைய கொள்கையில் சற்று மிகையாக (Arbitrary approach) நடந்து கொண்டாராம். அவ்வளவுதான். இருப்பவர்களையே தியாகம் செய்யத் துணிபவர்களுக்கு இறந்தவர்கள் எம்மாத்திரம்? சஞ்சய் காந்தி தவறு செய்யவில்லை என்று யாரும் வாதாடவில்லை. ஆனால், காங்கிரஸின் இந்த சந்தர்ப்பவாத அரசியல்தான் அவர்களின் கொள்கைகளை சந்திசிரிக்க வைக்கிறது. சஞ்சய் காந்தி இருக்கும்போதே இதை ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரசின் நேர்மையைப் பாராட்டலாம். என்ன செய்வது – இல்லாத ஒன்றை எதிர்பார்த்து ஏங்குவதே இந்தியாவின் பொதுஜனத்திற்கு தலைவிதியாகிவிட்டது!      ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட காங்கிரஸ், ஏதோ வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தைபோல் நடிக்கிறது. மக்களின் கோபத்தை தி.மு.க.வின் மேல் முழுதாகத் திருப்பிவிட்டுத் தான் தப்பிக்க வேண்டும். அதே சமயம் தி.மு.க.வின் முதுகில் கூட்டணி குதிரை ஏறி தேர்தலில் லாபம் பெறவேண்டும். எத்தனை உயர்ந்த உள்ளம்! காமன் வெல்த்தில் அடித்த ஆயிரக்கணக்கான கோடிகளிலும், ஆதர்ஷ் ஹவுசிங் அவலங்களிலும் தி.மு.க.வோ வேறு எந்தக் கட்சியுமோ சம்பந்தப்படவில்லையே. காங்கிரஸ் அரசு இதற்கெல்லாம் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? செய்ய மாட்டார்கள் – தன்மானத்தையே வழி வழியாக தியாகம் செய்தவர்கள் – மிஞ்சிப் போனால் தன்னளவில் நேர்மையானவர் என்று இன்றும் நம்பப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தியாகம் செய்ய முன்வரலாம் காங்கிரஸ்.
 இத்தனை நடந்த பின்னும் காங்கிரஸ் ஒய்யாரமாக ஆட்சியில் குந்தியிருப்பது அவர்களுடைய பலத்தால் அல்ல. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யின் பலவீனத்தால்தான். அக்கட்சியின் உச்சத்தில் இருக்கும் அரைடஜன் தலைவர்களுக்கிடையில் ஒருங்கிணைந்த கருத்துமில்லை. ஒன்றிப்போகும் எண்ணமும் இல்லை. இன்றைய அளவில் புலித்தோல் போர்த்திய பூனையாகத்தான் தெரிகிறது பி.ஜே.பி. காங்கிரசில் வாரிசு அரசியல் இல்லாதிருந்தால் அல்லது பி.ஜே.பி.யில் வாரிசு அரசியல் இருந்திருந்தால் & இரண்டு கட்சிகளுக்கும் இன்றைய அளவில் வித்தியாசமே இருந்திருக்காதோ என்று தோன்றுகிறது. காங்கிரசின் ‘தியாகம்’ தொடர்கிறது. நஷ்டம் வழக்கம்போல மக்களுக்குத்தான்!

நன்றி: நற்றமிழன் 



கருத்துகள் இல்லை: