செவ்வாய், 2 மார்ச், 2010

நுழைவுத்தேர்வு எதற்கு?


இந்தத் துறைதான் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் நுழைந்துவிடுகிறது அரசியல். தற்போது கல்வித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கி வருகிறது மத்திய அரசு. ஆனால் இதில் பலிகடாவாக்கப்படுவதென்னவோ அப்பாவி மாணவர்கள்தான். தமிழகத்தில் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் வகையில் புதிய கல்வி சட்ட மசோதாவை முன்வைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கும் இந்த கல்வி சட்ட மசோதாவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா குறித்து விவாதிக்கும் முன் தமிழக அரசு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்ததன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி முடித்த கையோடு, தொழிற்கல்விகளில் சேருவதற்கான பொதுநுழைவுத்தேர்வுக்காக முட்டிமோதி படிப்பதிலேயே மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அதுவும் ஏட்டுச்சுரைக்காய்க்குக் கூட வழியில்லாத பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. கல்விக் கட்டணம் செலுத்த வசதியில்லாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆயிரக் கணக்கில் செலவழித்து பொதுநுழைவுத்தேர்வுக்கென தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதும் குதிரைக் கொம்புதான். இந்த சமூக ஏற்றத் தாழ்வுகளால் நகரங்களில் உள்ள ஓரளவுக்கு வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே நுழைவுத்தேர்வின் மூலமாக தொழிற்கல்விகளில் சேர்ந்தனர். கிராமப்புற மாணவர்களிடம் திறமை இருந்தும் தொழிற்கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் கடந்த 2007ம் ஆண்டு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டுவந்து, கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்தது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

அரசின் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி அப்போதே சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அரசு தனது நிலையில் உறுதியாக இருந்ததோடு, நுழைவுத்தேர்வை ரத்து செய்ததற்கான ஆதாரங்களையும் முன்வைத்தது. 'கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேவை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்திய பிறகுதான் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது' என்ற அரசு தரப்பின் நியாயமான காரணங்களால் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். கூடவே, அதை எதிர்த்து போடப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவையும் எடுபடவில்லை. உண்மையிலேயே மக்களுக்கு பயன்படுகிற விஷயத்தில் அரசு கொள்கை உறுதியுடன் இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் நுழைவுத்தேர்வு விஷயத்திலும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மாணவர்கள் அவர்களது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். 2007ம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளில் சேரும் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளி விவரக் கணக்கு. 2006ம் ஆண்டுவரை தமிழ்வழியில் படித்த மாணவர்களில் சராசரியாக 26% மாணவர்கள்தான் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மாணவர்களின் இந்த முன்னேற்றத்துக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும்விதமாக மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து பேசி வருகிறது மத்திய அரசு. இதை வைத்துப் பார்க்கும்போது மத்திய அரசு கல்வித்துறை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத்தான் தெரிகிறது. இதன் ஒருகட்டமாக தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை கல்வித்துறையில் செயல்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான கல்வி முறை இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்றால், கேட்கப்படும் கேள்விகளின் தரம், மொழி எல்லாம் எப்படி இருக்கும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் இப்போதே பயமும் பதட்டமும் நிலவ ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் மத்திய அரசின் புதிய கல்வி சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்பை மத்திய அரசு எந்தவகையில் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறி. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்ற மத்திய அமைச்சர் கபில்சிபலின் கருத்து ஏற்கப்பட்டால், நம் தமிழகத்து மாணவர்களின் நிலை?! கிராமப் பள்ளிகளிலும் மத்திய அரசுப்பள்ளிகளிக்கு இணையாக தரமான கல்வியைக் கொடுத்துவிட்டு பொது நுழைவுத்தேர்வு வைத்தால் யார் எதிர்க்கப் போகிறார்கள்? அதை விட்டுவிட்டு எளியோரையும் வலியோரையும் ஒரே தராசில் நிற்க வைப்பதில் நியாயம் இல்லை. மத்திய மாநில அரசுகளின் உரிமை போராட்டத்தில் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்வார்களா?

கருத்துகள் இல்லை: