வியாழன், 25 பிப்ரவரி, 2010

கத்தியின் கூர்மையும் தூரிகையின் நளினமும் !!!!


சச்சின் டெண்டுல்கரைப் பார்க்கும் போதெல்லாம் வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வரும். பணியுமாம் என்றும் பெருமை என்னும் வாக்கு. இந்திய நாடாளுமன்றம் அவரது சாதனையைப் பாராட்டுகிறது. மக்களின் கரகோஷம் வானை நிறைக்கிறது. இதையெல்லாம் கேட்டுக் கூச்சத்துடன் அவர் தலை தாழ்கிறது. மாபெரும் சாதனை ஒன்றைச் செய்து முடித்த இந்த ஜாம்பவான் பரிசளிப்பின்போது ரவி சாஸ்திரி கேட்கும் கேள்விகளுக்கு வெட்கத்துடனும் அடக்கத்துடனும் பதிலளிக்கிறார்.

ஒருநாள் போட்டிகள் ஆடத் தொடங்கி 39 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2961 போட்டிகள் நடந்திருக்கின்றன. இத்தனை போட்டிகளில் யாரும் செய்யாத ஒரு காரியத்தை சச்சின் டெண்டுல்கர் செய்திருக்கிறார். 200 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக பட்ச ரன்களைக் குவித்துள்ள அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது முற்றிலும் பொருத்தமானது.

சாதாரண ஆட்டக்காரர்கள் இலக்கை எட்டுவதற்காகப் பாடுபடுவார்கள். ஏற்கனவே இருக்கும் எல்லைகளுக்குள் நின்று தன் முத்திரையைப் பதிப்பார்கள். சாதனையாளர்களோ களத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவார்கள். புதிய சவால்களை முன்வைப்பார்கள். புதிய அளவுகோல்களை உருவாக்குவார்கள். சச்சின் அத்தகைய ஒரு சாதனையாளர். ஏற்கனவே டெஸ்ட்களிலும் ஒருநாள் போட்டிகளிலும் அதிக ரன் அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை வைத்திருக்கும் இவர் இப்போது ஒரு ஆட்டத்தில் அதிக பட்ச ரன் என்னும் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்.


“எல்லாச் சாதனைகளும் முறியடிக்கப்படுவதற்காகத்தான் இருக்கின்றன. ஆனால் சச்சினைப் போன்ற ஒருவர் ஒரு சாதனையை முறியடிக்கும்போது மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது. இந்தச் சாதனைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர். மேலும் பல சாதனைகளை அவர் நிகழ்த்துவார்” என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டாட்.

யாராலும் வெல்ல முடியாத ஆஸ்திரேலிய அணியை எதிர்த்துச் சிறப்பாக ஆடிவருபவர் சச்சின். 1997இல் ஷார்ஜாவில் மணல் புயலுக்கு நடுவில் வீசிய இவரது மட்டையின் வேகத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று கருதப்படும் டான் பிராட்மேன் வியந்தார். இந்தப் பையன் ஆடுவதைப் பார்க்கும்போது என்னையே நான் பார்த்துக்கொள்வதுபோல இருக்கிறது என்றார். போன ஆண்டு ஆஸி அணிக்கெதிராக 175 ரன் எடுத்தபோது, “நான் பார்த்த மிகச் சிறந்த ஆடங்களில் ஒன்று இது” என்று எதிரணி கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழ்ந்தார்.

சமீப நாட்களில் அவரது ஆட்டம் புதியதொரு சிகரத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் அவர் அவர் 10 சதங்களை அடித்துள்ளார் (டெஸ்ட் போட்டிகளில் 6, ஒரு நாள் போட்டிகளில் 4). இதில் நான்கு சதங்கள் தொடர்ந்து நான்கு டெஸ்ட்களில் அடிக்கப்பட்டவை. ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டில் மட்டும் நியூசிலாந்துக்கு எதிராக 163, ஆஸி அணிக்கு எதிராக 175 ஆகிய பெரிய ஸ்கோர்களை அடித்திருக்கிறார்.

இப்போதெல்லாம் அவரது ஆட்டத்தில் நம்ப முடியாத அளவுக்கு சரளம் கூடியிருக்கிறது. நிர்ப்பந்தத்தின் சுமையையோ ஆடுகளத்தின் தன்மையையோ பந்து வீச்சாளர்கள் பற்றிய கவலையையோ அவரது மட்டை வீச்சில் உணர முடியவில்லை. நாள்தோறும் புதிய சிகரங்களை எட்டிவரும் சச்சினின் பயணம் எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் உத்வேகமூட்டக்கூடியது.
இயல்பான அதிரடி ஆட்டம், அசாத்தியமான தொழில்நுட்ப நேர்த்தி, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஆடும் பக்குவம் ஆகியவற்றுடன் 21 ஆண்டுகளின் அனுபவமும் சேர்ந்து சச்சினை இப்போது ஒப்பற்ற கிரிக்கெட் வீரராக ஆக்கியிருக்கின்றன. எத்தனையோ காயங்கள், நடுவில் சில சறுக்கல்கள், விவரம் அறியாதவர்களின் மொண்ணையான விமர்சனங்கள், ஏறிக்கொண்டே போகும் வயது, புதிது புதிதாக வரும் பந்து வீச்சாளர்கள், இளம் ஆட்டக்காரர்களிடமிருந்து வரும் போட்டிகள் ஆகியவற்றையெல்லாம் தாக்குப் பிடித்து ஆடுவது மட்டுமல்ல. மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருப்பதுதான் சச்சினின் சிறப்பு.

எல்லாவற்றுக்கும் மேலாக, 21 ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்னும் மகத்தான சுமையைத் தாங்கி, அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு ஆடிவருவது இதுவரை யாருமே செய்யாத சாதனை. கிரிக்கெட் மீது பைத்தியமாக இருக்கும் ஒரு தேசத்துக்குத் தன் மண்ணிலிருந்து ஒரு மாபெரும் சாதனையாளன் பிறக்க வேண்டும் என்ற கனவு இருப்பது இயற்கைதான். அந்தக் கனவின் உருவமாகத் திகழ்கிறார் சச்சின். அவர் கையிலிருக்கும் மட்டை மந்திரவாதியின் மந்திரக்கோலாக மாறிக் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுகளை நனவாக்கிவருகிறது.

இன்னும் அவர் செய்ய வேண்டிய சாதனைகள் சில இருக்கின்ரன. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் பிரையன் லாரா எடுத்த 400 ரன்கள் என்னும் சாதனையை அவர் கடக்க வேண்டும். அவரே வெளிப்படையாகச் சொல்வதுபோல 2011இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அவர் பங்களிக்க வேண்டும். இவை இரண்டையும் அவர் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். 

அவர் 200 ரன் எடுத்து முடித்ததும், “ஒரு சர்ஜனின் கத்திபோல அவரது மட்டை செயல்பட்டது” என்றார் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி. ஒரு ஓவியக் கலைஞனின் தூரிகை போல என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆபரேஷன் செய்யும் கத்தியின் கூர்மை, கச்சிதம், ஓவியம் தீட்டும் தூரிகையின் நளினம், நுட்பம் ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒரு சேர இருக்கும் அதிசயம்தான் டெண்டுல்கரின் கையில் இருக்கும் மட்டை.

மட்டை என்பது வெறும் கருவி. அதைப் பிடித்திருக்கும் கைதான் சாதிக்கிறது. கைகூட அல்ல. அந்தக் கையை இயக்கும் மனம். அதில் உறைந்திருக்கும் உறுதி. சாதிப்பதற்கான துடிப்பு. அனுபவத் தழும்பு ஏறிய அந்த மனத்தில் நேற்றுதான் விளையடத் தொடங்கிய ஒரு குழந்தையின் உற்சாகம். இந்த அசாத்தியமான கலவைதான் சச்சினின் ஆளுமை.

இந்த ஆளுமை கிரிக்கெட் உலகையே ஆளுவதில் வியப்பென்ன!  

கருத்துகள் இல்லை: