வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பு- வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் [^] பொன்முடி அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக கட்டுமான பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இயந்திர பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள நான்கு அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் 14 கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்புகள் அறிமுகமாகின்றன. 

இதற்காக வரும் கல்வியாண்டில், இந்த குறிப்பிட்ட கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 800 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் [^], தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும் ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது.

பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான பாடத் திட்டங்கள், கலைச்சொல் உருவாக்கம் என இதற்கான பல்வேறு பணிகளும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

முதல்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்புக்கு தேவையான தமிழ் வழி பாடத்திட்டங்கள் மற்றும் கலைச்சொற்களை வடிவமைக்கப்பட்டு, பாடங்கள் நடத்த தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று சென்னை [^] தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், உயர்கல்வி ஆணையத்தின் துணைத்தலைவர் ராமசாமி மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் [^] நடந்தது.

இக்கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பை நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் கட்டுமான பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் பட்டப்படிப்புகள் தமிழ் வழி நடத்தப்படும்' என அறிவித்தார்.

மேலும், அண்ணா பல்லைக்கழகம் மற்றும் உருப்புக்கல்லூரிகளில் மட்டுமல்லாது, அகில இந்திய கல்வி ஆணையத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பு பாடங்களை நடத்த அவர்கள் விரும்பினால் நடத்தலாம்.

அனைத்து கல்லூரிகளிலும் தமிழில் தேர்வு நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென தனியாக கல்வி கட்டணம் ஏதும் இல்லை. தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பை படிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இதில் சேரலாம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்.

இந்த தமிழ் வழி பொறியியல் பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கென நான்கு துணைவேந்தர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் முதல் ஆண்டுக்குரிய புத்தகங்களை தயாரிப்பார்கள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பாடப்புத்தகங்களையும் அவர்கள் உருவாக்குவார்கள்.

இதே போல, பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டுமானம் மற்றும் எந்திரவியல் பொறியியல் பாடம் தமிழ் வழியில் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேசுப்பயிற்சி முக்கியம் என்பதால் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.


எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து ,இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன் இந்த அரசாங்கம் இதை செய்யாமல் ,வெறுமனே பேருக்காகவும் ,புகழுக்காகவும் செய்வார்களெனில் , இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும் .



சீனா,ஜப்பான்,ரஷ்ய,பிரான்ஸ்,ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொடுக்குமாறு இந்த தமிழின தலைவரின்!!! அரசை வேண்டி கேட்டு கொள்கிறேன். 


-சூரியன்

கருத்துகள் இல்லை: