ஞாயிறு, 14 மார்ச், 2010

மகளிர் தினமும் மகளிர் மசோதாவும்!

மார்ச் 8 அன்று பெண்கள் தினம். உலகமே பெண்களைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் பெருமைமிகு டில்லி மேல் சபையும் பெண்கள் தினத்தைக் ‘கொண்டாடியது'. மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவின் நகல்களை மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தார்கள். தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது விவாதம் நடத்த விடாமல் அவையை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். 15 ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டுவரும் இந்த மசோதா மீண்டும் ஒருமுறை தள்ளிப்போடப்படுமோ என்ற சூழ்நிலை எழுந்தது.

என்றாலும் அடுத்த நாள் அதே சபை அந்தச் செயலுக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. தாக்கல் செய்ய விடாமல் தடுத்த எம்.பி.க்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு விவாதம் நடந்தது. மசோதா நிறைவேறியது. எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜும் (பா.ஜ.க.) பிருந்தா காரத்தும் (சி.பி.எம்.) கட்டி அணைத்தபடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சியே பெண்களின் உணர்வுகளைப் பளிச்சென்று வெளிப்படுத்தியது. 

ஆனால் மசோதா பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது. இன்னும் மக்களவையில் அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஏப்ரல் 14க்கு முன் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 கோடியைத் தொட்டுவிட்ட பெண்களின் முகங்களை லோக்சபா என்று சொல்லப்படும் மக்களவையிலும் மாநில சட்டமன்றத்திலும் பூதக்கண்ணாடி வைத்துத்தான் பார்க்க வேண்டியதாகிறது. இந்த நிலையை மாற்றி அரசியலில் பெண்கள் அதிகாரபூர்வமாக நுழைந்து செங்கோலைக் கையிலெடுக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக ஒலித்துவந்தது. 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெறும் முயற்சியாகவே முற்றுப்பெற்றுவிட்டது. மூன்று முறை முயற்சிகள் நடந்தன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் தற்போது பெண்களின் கரங்களில்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மசோதாவை நிறைவேற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். ராஜ்ய சபாவில் பிரதான எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் இடதுசாரிக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தாலும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற முக்கியக் கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பதற்காக இந்த மசோதாவை இவர்கள் எதிர்க்கவில்லை. இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது இவர்கள் வாதம். முலாயம் சிங் யாதவ், ‘இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பார்லிமென்ட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கை இது’ என்கிறார். முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதை பா.ஜ.க. விரும்பவில்லை. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதைப் பல கட்சிகள் முழு மனதோடு ஆதரிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் வரும் என்று அவை கழன்றுகொள்கின்றன. உள் ஒதுக்கீடு தருவது என்றால் மசோதாவின் வரைவையே மாற்றி எழுத வேண்டும். விரிவான விவாதமும் கருத்தொற்றுமையும் இல்லாமல் அதைச் செய்ய முடியாது. அப்படியே செய்வதானாலும் அதற்கு மிகவும் தாமதமாகும். எனவே தற்போதுள்ள நிலையிலேயே மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முனைகிறது. ஆனால் உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் ஏற்கனவே பல விதங்களிலும் செல்வாக்குப் பெற்ற மேட்டுக்குடியினர்தான் அதனால் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது முலாயம், லாலு ஆகியோரின் வாதம்.

மகளிர் மசோதாவை எதிர்ப்பதை விட முதலில் அதை அமல்படுத்திவிட்டு, அதன்பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. உள் ஒதுக்கீடு கேட்டு மசோதாவைக் கிடப்பில் போடுவதற்கு பதிலாக அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்குவதே நல்லது என்பது முதல்வரின் கருத்து.

ஒரு வழியாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது ஏறத்தாழ 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பிறகு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் மசோதா நிறைவேறியது (தீர்மானத்திற்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக ஒரே ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்).

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் வானில் பெண்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியுள்ளன. ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறினால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வரும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பார்கள். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பார்கள். அப்படி நடந்தால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அது இருக்கும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த மசோதாவுக்கு எதிரான ஆட்சேபங்களை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிட முடியாது. உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் செல்வாக்குப் படைத்த மேட்டுக்குடிப் பெண்களே பிரதிநிதிகளாவார்கள் என்னும் சமூக நீதிக் குரலில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை நிற்க வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

அரசியலுக்கு வர எத்தனை பெண்கள் தயாராக இருப்பார்கள் என்பது இன்னொரு கேள்வி. இந்நிலையில் ஏற்கனவே அரசியலில் இருக்கும் ஆண்களின் நெருங்கிய உறவினர்கள்தான் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்வார்கள், இதனால் குடும்ப ஆதிக்கம் தலை தூக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதுவும் முக்கியமான விஷயம்தான். ஆனால் இந்திய அரசியலில் ஏற்கனவே பல அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டுவருவதைப் பார்த்த பிறகு இதை ஒரு புதிய பிரச்சினையாக எழுப்பிப் பேசுவது அர்த்தமறது என்பது வெளிப்படை. தவிர, இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் முதல் ஓரிரு தேர்தல்கள்வரைதான் எழும். அதற்குள் எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து மக்கள் செல்வாக்குப் பெற்று, மக்களுக்காக நல்லது செய்கிற ஒருவரது தொகுதியை பெண்களுக்காக ஒதுக்கினால், அவர் வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட முடியும் என்ர கேள்வியும் எழுப்பப்படுகிறது. பெண்களுக்கான தொகுதிகளைச் சுழற்சி முறையில் தீர்மானிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

பல நூற்றாண்டுகளாகச் சம உரிமை மறுக்கப்பட்டுவந்த பெண்களுக்கு அதிகாரப் பீடத்தில் முக்கிய இடம் அளிக்கும் முயற்சி நடக்கும்போது அதில் சில பிழைகள் ஏற்படத்தான் செய்யும். வரலாற்று நோக்கிலும் சம தர்ம நோக்கிலும் இந்தப் பிரச்னையை அணுகி இந்தச் சட்டத்தை இப்போதைக்கு ஆதரித்து, இதிலுள்ள குறைகளைக் களைவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வதே நல்லது. 



நன்றி - தெனாலி 


-சூரியன்

2 கருத்துகள்:

Happy Smiles சொன்னது…

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

Sooriyan சொன்னது…

hi ,

please send your questions to my mail ID.

sooriyan.k@gmail.com

i will try to answer my level best.