என்ன அம்பேத்கர், பகத் சிங் போன்ற தேச தலைவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டார்களா? எந்த நாட்டில் இப்படி ஒரு கொடும் நிகழ்வு நடந்து வருகின்றது? அங்கு சனநாயகம் கண்டிப்பாக செத்திருக்கும், மக்கள் ஒரு கொடுங்கோலாட்சியின் கீழ் தான் வாழ்ந்து வருவார்கள். இதில் கார்ல் மார்க்சுமா? என்ன கொடுமை ஐயா இது என நீங்கள் அதிர்ச்சியோடு கேட்கலாம். ஆனால் இது தான் உண்மை அம்பேத்கர், பகத்சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டு அதிக நாட்களாகி விட்டது, இப்பொழுது அந்த வரிசையில் கார்ல் மார்க்சும் சேர்ந்திருக்கின்றார். அந்த நாட்டின் பெயர் “இந்தியா”.
பாபா சாகேப் அம்பேத்கர், இந்தியாவிற்கான சட்டத்தை உருவாக்கிய அமைப்பின் தலைவர் இன்று இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளார், ஆம் அவரது கருத்துகளை, அவரது நூல்களை பரப்புவதற்காக நீங்கள் இந்த இந்துத்துவ அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவீர்கள். கேட்பதற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், இது உண்மை தான். “ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நான் முதுகலை தத்துவப்(M.Phil) படிப்பிற்கான நுழைவுத் தேர்வை முடித்தது எனக்கு மனநிறைவை தந்தது, ஆனால் இந்த சிறை நாட்கள் மீண்டும் என்னை ஒரு இருளுக்குள் தள்ளுகின்றன. அம்பேத்காரியவாதிகள் எல்லாம் சேர்ந்து 1857ல் நடந்தது போல கலகம் செய்யப் போகின்றீர்களா? என காவலர்கள் எனனைப் பார்த்துக் கேட்டார்கள்” என கூறுகின்றார் தின்கர் காம்பிளி. இவர்களைப் பற்றிய வழக்கு மிகவும் விசித்திரமான ஒன்று.
அனில் மம்மானே, வயது 27, சமூகவியல் பேராசிரியர் (முதுகலையில் தங்கப்பதக்கம்)
தின்கர் காம்பிளி வயது 23, முதுகலை தத்துவம், முதலாமாண்டு (முதுகலை தத்துவ நுழைவுத் தேர்வில் இரண்டாமிடம்)
பாபு பட்டீல் வயது 20, இளங்கலை முதலாமாண்டு
பாபாசாகேப் சேமோத்தி வயது 27, முதுகலை வணிகவியல் படித்தவர்.
இவர்கள் நால்வரிடமும் இருந்து கைப்பற்றிய புத்தகங்களில் இருக்கும் கருத்துகள் கண்டிக்கதக்கவை, மேலும் இந்நூல்கள் மக்களைத் தூண்டிவிட்டு நக்சல்களுடன் சேரத்தூண்டுபவை” என இவர்கள் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதில் முதல் இருவர் மட்டும் தான் இந்தப்புத்தகங்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றவர்கள், மூன்றாவது, நான்காவது நபர்கள் இவர்கள் பயணம் செய்த தொடர் வண்டியில் இவர்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்த குற்றத்தை செய்தவர்கள். இதில் நகைச்சுவை என்னவெனில் பாபுவிற்கு எதிராக காவல்துறை நீதிமன்றத்தில் காட்டிய ஆதாரம் அவர் படித்து வரும் இளங்கலை பாடப் புத்தகங்கள். அப்படி என்னதான் புத்தகங்களை அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்றால் கயர்லாஞ்சி நிகழ்வைப் பற்றிய புத்தகம், அம்பேத்கர், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்கள். (1)
பாபுவிற்கும், தின்கரிற்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது, ஆனால் அனிலுக்கும், பாபாசாகேப்பிற்கும் நீதிமன்றம் பிணை வழங்க மறுக்க, அவர்கள் உண்ணாவிரதம் நடத்தினார்கள். மேலும் சமூகப் போராளிகளான அன்னா கசாரே போன்றோரும் அரசின் இந்த தவறான நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க, மேலும் 14நாட்கள் உண்ணாவிரத்தத்திற்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. ஒரு தவறான வழக்கில் இருந்து பிணை பெறவே சாதாரண மக்கள் மிகக்கடுமையாக போராட வேண்டியுள்ளது.(1)
இதே போல இன்னொரு வழக்கும் உண்டு. தனேன்திர பூரிலே, நரேசு பன்சூத் இவர்கள் இருவரும் அம்பேத்கர் இந்து அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி பௌத்ததை தழுவிய தீட்சா பூமிக்குச் சென்று சட்டத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ய திட்டமிட்டார்கள் என்பதே அவ்வழக்கு. இவ்வழக்கு எவ்வித ஆதாரமும் அற்றது என கூறி இவர்கள் இருவருக்கும் பிணை வழங்கியது உயர் நீதிமன்றம், ஆனால் இந்த தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்து இவர்களை மீண்டும் சிறையிலடைத்தது. இவர்கள் மாவோயிசுட்டுகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். “என்னை தலைகீழாக கட்டித்தொங்க விட்டு, அம்பேத்கராக இருக்க முயன்றால் இது தான் உனக்கு கிடைக்கும் என ஒரு காவலர் அடிக்கடி கூறுவார்” என்கிறார் பன்சூத். மேலும் அவர் கூறுகையில், தலித்துகள் பொதுவாக லெனின், கார்க்கி போன்றோரின் எழுத்துகளைப் படிக்கமாட்டார்கள், அப்படி தப்பித்தவறி அவர்கள் படித்து விட்டால் அவர்கள் அனைவரும் இங்கே நக்சலைட்டுகள், குற்றவாளிகள். மேலும் அவர் தன்னிடம் உள்ள அம்பேத்கர் நூல்களின் தொகுப்பையும் நம்மிடம்(தெகல்கா) காட்டுகின்றார். இறுதியாக மூன்று வருடத்திற்கு பிறகு இவர்கள் மேல் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. (1)
பகத்சிங் தடை செய்யப்பட்டார். சந்திராப்பூர் என்ற ஊரில் மாணவர்களுக்கு பகத் சிங், ஜோதிபா பூலேவைப் பற்றி பாடம் எடுத்ததற்காக பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காரணம் இதன் மூலம் இவர்கள் நக்சல்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றார்கள் என்றது காவல்துறை. என்ன புரியலையா, அதாவது பகத்சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதம் ஏந்திய புரட்சியை முன்வைத்தார், பகத்சிங்கை படித்து அவரது கொள்கைகளில் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டால் அவர்களும் ஆயுதம் தாங்கிய புரட்சியை நோக்கி செல்வார்கள் என்கிறது காவல்துறை.(1) இப்படியாகத் தான் பகத்சிங்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டார்.
இறுதியாக இன்று பினாயக் சென் வழக்கின் மூலமாக கார்ல் மார்க்சும் இந்தியாவில் தடை செய்யப்பட்டார். ஆம் பினாயக் சென் ஒரு மாவோயிசுட்டு ஆதரவாளர் என்பதற்கு ஆதாரமாக காவல்துறை கார்ல் மார்க்சு எழுதிய மூலதனம் நூலை நீதிமன்றத்தில் காட்டியது. இதுபோன்ற ஆதாராங்களை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசதுரோகி எனக் கூறி ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.(2)
ஆதலால் இந்தியாவின் தேசபக்தர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களைப் புறக்கணியுங்கள். அதே போல தேசதுரோகிகள் எல்லாம் அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களை ஆதரியுங்கள். நீங்கள் தேசபக்தரா அல்லது தேசவிரோதியா என்பது உங்களின் கையில் தான் உள்ளது (நான் உங்கள் கையில் இருக்கப்போகும் புத்தகத்தைப்பற்றிச் சொல்கின்றேன்). மேலும் உங்கள் வீட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை வைத்துக்கொள்ளாதீர்கள் அதுவே நாளைக்கு உங்களுக்கு எதிரான ஆதாரமாகி விடலாம். சுதந்திரத்திற்கு முன்னான ஆங்கிலேய காலனீய ஆக்கிரமிப்பில் தான் இதுபோல புத்தகங்களை தடை செய்வார்கள் என நீங்கள் கருத தழைப்பட்டால் நீங்கள் ஒரு தேச துரோகி ஆகக் கூடும், ஆதலால் அது போன்ற எண்ணங்களையும் தவிர்த்து விடுங்கள்.
நன்றி – தெகல்கா வார இதழ்.
Original Source: http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810bhagatsingh.asp