மன்மதன் அம்பு அருமையான நகைச்சுவைப் படமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நீங்கள் வைத்த சில கருத்துகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது எச்சில் உமிழ்வது போல உள்ளது. இப்படிப்பட்ட ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியது நீங்கள் தான் என்பதை நான் முதலில் உங்களைத் தொடரும் இரசிககண்மணிகளுக்கு தெரியப்படுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்கள் இதில் நடித்தவர் மட்டுமே, இந்தப்படத்தின் கதை, வசனத்தில் எல்லாம் உங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கலாம் என அவர்கள் எண்ணக்கூடும்.
காசுமீரிகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் முதலில் எச்சில் உமிழ ஆரம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிரவாதிகள் ஒருவன் தான் படத்தில் உங்களின் கதாநாயகியையும், அவரது தந்தையையும் கடத்தி வைத்திருப்பதாக கூறுகின்றீர்கள். படத்தின் கதைப்படி இது ஒரு மூன்று வருடம் முன்னர் நடக்கின்றது. அதாவது 2009ல் நீங்கள் இந்தக் கதையை எழுதியிருந்தால் 2006ல் அப்படி ஒரு நிகழ்வு காசுமீரில் நடந்திருக்க வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,214
விசாரணையில் இருக்கும் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,969 கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117
விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726
அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347
பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதி தாசனே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்) உங்களையும் சூடு, சொரணையோடு பத்ம சிறீ விருதை திருப்பி தரச் சொல்லியும், அய்ஃபா (iifa) விருதுகள் வழங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நட த்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநராக இருக்கும் உங்களை அந்த பதவியில் இருந்து விலகக்கோரியும் சென்னையில் மே 17 இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின, அவர்களை கூட நீங்கள் சிறு அலை எனக் கூறியதாக ஞாபகம். ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17 என்ற மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.
எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். மற்றுமொரு உதாரணம் எங்கள் சமூகத்திலும் இப்பொழுது படித்த ஆட்களெல்லாம் இருக்கின்றார்கள் என தசாவதாரம் படத்தில் நீங்கள் கூறுவீர்கள். உங்களது இந்தக் கூற்றின் படி முன்னாட்களில் அந்த சமூகம் படிப்பறிவில்லாத சமூகம், அதற்கு அவர்கள் தான் காரணம் என சொல்ல வருகின்றீர்கள். மெத்த படித்த உங்களைப் போன்ற ‘பகுத்தறிவுவாதி’ இப்படி சொல்வது முறையா? 1937வரை மருத்துவ நுழைவுத் தேர்வு சமசுகிருதத்தில் இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்குமே நண்பர்.கமல். அந்த காலகட்டத்தில் சமசுகிருதம் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் மருத்துவம் படித்திருப்பார்கள் ? ஒரு சமூகத்தை நீங்கள் குறிவைத்து தாக்குகின்றீர்களோ என என்னுள் அச்சம் எழுவதை என்னாள் தவிர்க்க முடியவில்லை நண்பர்.கமல் அவர்களே. உடனே உங்கள் நற்பணி மன்ற நண்பர்கள்( அதாவது இரசிகர்கள்), இதற்கும் கமலுக்கும் என்னத் தொடர்பு, அவர் வெறும் நடிகர் தானே என விரைந்தோடி வந்து என்னைக் கேட்கலாம். தசாவதார படத்தின் கதை, வசனம் எழுதியது அவர் தான், உன்னைப் போல் ஒருவன் படத்தின் கதை, வசனம் எழுதிய குழுவில் கமலும் ஒருவர். இது போன்ற கருத்துகளினால் நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதியா ? என உங்களை நான் கேட்பது சரி என்று உங்களுக்கு தெரியும். அப்படியே உங்கள் கண்மனிகளுக்கும் சொல்லிவிடுங்கள்.
பின்குறிப்பு: இந்த தலைப்பு உங்கள் மனதை புண்படுத்தவோ, அல்லது உங்கள் இரசிக கண்மணிகளின் உள்ளத்தை புண்படுத்தவோ நான் வைக்கவில்லை. நீங்கள் என்ன காரணத்திற்காக உங்கள் படத்தில் ஒரு ஈழத்தமிழர் கூறுவதாக இப்படி ஒரு வரியை வைத்தீர்களோ, அதே நோக்கத்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக நான் திரைப்படங்களை பற்றி எழுதுவது கிடையாது, ஆனால் இந்தப் பதிவு நீங்கள் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திய காரணத்தினாலும், குறிப்பிட்ட சமூகத்தை நீங்கள் தொடர்ந்து தாக்கி வருவதாலும் இதைப்பற்றி நான் எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நன்றி : நற்றமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக