வியாழன், 6 ஜனவரி, 2011

மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள்

உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என  நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.
புலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும், இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர். இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்). மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)

இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)
ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.  இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.  

நன்றி : ந‌ற்ற‌மிழ‌ன்.

கருத்துகள் இல்லை: