புதன், 8 ஜூன், 2011

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா?

ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்தால் இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட முடியுமா? முடியும் என்கிறார் பாபா ராம்தேவ். அப்படியே சொல்கின்றன இந்தியாவின் பரபரப்பு ஆங்கில செய்தி சேனல்கள். அப்படியே சொல்கிறார்கள் பி.ஜே.பி. உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் தலைவர்கள். பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை அரசு அதிரடியாக முடிவுக்குக் கொண்டுவந்த விதம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் பாபா ராம்தேவ் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்? அதன் பின்னணி என்ன? யாரைப் பாதுகாக்க, யாரை வளர்த்துவிட அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பதுபோன்ற கேள்விகளை இந்த பரபரப்பு மீடியாக்கள் எதுவுமே எழுப்பாதது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. ஏதோ ஊழலை ஒழிக்கவந்த அவதார புருஷனாக ராம்தேவை முன்னிறுத்துகின்றன ஆங்கில செய்தி சேனல்களும் தேசிய செய்தித்தாள்கள் சிலவும்! உண்ணாவிரதத்தைத் தடுத்ததற்காக அவரிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் பேசுகிறார் அத்வானி. அதற்கெல்லாம் அவர் தகுதியானவரா?


மனித எலும்புகளைக் கலந்து ஆயுர்வேத மருந்து தயாரிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ராம்தேவ். ஆயிரங்களில் கட்டணம் வாங்கிக்கொண்டு யோகா சொல்லித்தரும், மேல்தட்டு மக்களுக்கான ஆன்மிக குரு அவர். கோடிக்கணக்கில் சொத்து, வெளிநாடுகளிலும் ஆசிரமக் கிளைகள், எங்கும் தனி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு சொகுசு, ஒரு தீவையே வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளும் அளவுக்கு ஆடம்பரம் என பணத்தின்மீது படுக்காதகுறையாக யோகா சொல்லித் தரும் ஆசாமி அவர்.
கடந்த ஓராண்டாகவே தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்தக் கட்சியை தேர்தலில் போட்டியிடச் செய்யப்போவதாகவும் சொல்லி வந்தார். அந்தத் தருணத்திலிருந்துதான் அரசியல் தொடர்பாக அடிக்கடி கருத்துகள் சொல்ல ஆரம்பித்தார். லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அதற்கு தேசமெங்கும் இளைஞர்கள், நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. இது ராம்தேவை பெருமளவு ஈர்த்தது. உடனே டெல்லிக்கு ஓடி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் உட்கார்ந்து கொண்டார். லோக்பால் மசோதா தொடர்பான ஆலோசனைக் கமிட்டியில் மக்கள் பிரதிநிதிகள் ஐந்து பேரை சேர்த்துக்கொள்ள அரசு சம்மதம் தெரிவித்தது. அன்னா தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பார் என எதிர்பார்த்தார் ராம்தேவ். அன்னா ஹசாரே இந்த சாமியாரின் உள்நோக்கம் தெரிந்து உஷாராகி, இவரைப் புறக்கணித்தார். உடனே பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண் என ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை இந்தக் கமிட்டியில் அன்னா ஹசாரே சேர்த்ததை எதிர்த்து அறிக்கை விட்டார் ராம்தேவ். அப்பழுக்கற்ற இரண்டு சட்ட நிபுணர்கள் அந்தக் கமிட்டியில் இடம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தலைவர்கள் யாருடைய சதியாகக் கூட இந்த அறிக்கை இருக்கக்கூடும்.
 
அதன்பின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே அன்னா ஹசாரே ஆனார். காந்தி குல்லாவுடனான அவரது உருவமே பொதுவாழ்க்கையில் நேர்மையின் சின்னமாக ஆனது. சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரம்மாவும் அன்னாவின் வலதுகரமுமான அரவிந்த் கேஜுரிவால், சந்தோஷ் ஹெக்டே போன்ற அந்தக் கமிட்டியின் உறுப்பினர்களே பிரதானப்படுத்தப்பட்டார்கள். ராம்தேவ் இதில் எந்த ஆதாயமும் தேடிக்கொள்ள முடியவில்லை.


அன்னா ஹசாரேவைத் தாண்டி தானும் புகழ்பெற்று, அந்தப் புகழை அரசியல் எதிர்காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், அதற்கு தானும் ஒரு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு ராம்தேவ் வந்திருக்க வேண்டும். அதற்கு இந்துத்வா அமைப்புகள் தூண்டுதலாக இருந்ததற்கும் ஒரு அரசியல் காரணம் இருக்கிறது.

நாடெங்கிலும் காங்கிரஸ் கட்சி மாபெரும் சரிவைச் சந்தித்துவரும் வேளையில், அந்த சரிவின் ஆதாயத்தை பெரும்பாலும் ஆங்காங்கே இருக்கும் குட்டி மாநிலக் கட்சிகளே அனுபவித்து வருகின்றன. வரும் 2014 பொதுத் தேர்தலுக்குள் காங்கிரஸுக்கு மாற்றான வலுவான தேசியக் கட்சியாக தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறது பாரதிய ஜனதா. ஆனால், அதற்குத் தகுந்த தலைவர்கள் அந்தக் கட்சியில் இல்லை. வாஜ்பாய் படுக்கையில் இருக்கிறார்.

அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். வேறுவழியின்றி நரேந்திர மோடி மீது இருக்கும் மதக் கலவர கறையைத் துடைத்துவிட்டு, அவரது தலைமையில் அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது பி.ஜே.பி. எனவேதான் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை, ‘குஜராத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. நரேந்திர மோடியின் முன்மாதிரியை பின்பற்றினால் ஊழல் ஒழிந்துவிடும்’ என்று சொல்ல வைத்தார்கள். குஜராத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமலே அன்னா இப்படிச் சொன்னதும், அவருக்கு இந்துத்வா முத்திரை குத்தவும் முயற்சி நடந்தது. காந்தியவாதியான அவர் உஷாராக உடனே தன் கருத்தை மறுத்துவிட்டார்.
இப்போது ராம்தேவை அதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘சாமியார்கள் எல்லோரும் ஊழலை எதிர்ப்பவர்கள்; சாமியார்கள் இருக்கும் கட்சியும் ஊழலை எதிர்க்கும் கட்சி’ என சொந்தம் கொண்டாட முடியும்.

படித்த இளைஞர்களுக்கு அரசியல் என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கிறது; நடுத்தர மக்களின் மனோபாவமும் இதுவாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே தங்கள் தோளில் குதிரை சவாரி செய்து, தாங்கள் கட்டும் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள் என்ற நினைப்பு இந்த இரண்டு சமூகத்துக்கும் இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் மெஜாரிட்டி கூட்டமாக இருப்பது இளைஞர்களும் நடுத்தர வர்க்கமும்தான். அரசியல்வாதிகளின் அதிகாரத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதாலேயே அவர்கள் நேரடியாக எதிர்ப்பு காட்டாமல் இருக்கிறார்கள். அன்னா ஹசாரே போன்ற யாராவது போராடும்போது, அந்தத் தலைமைக்குப் பின்னால் அணி திரள்கிறார்கள்.

இதுவும் ஒருவகை அரசியல்தான்! அப்படிப் பார்க்கும்போது இந்தியாவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருப்பது இந்த இரண்டு இனமும்தான். ஊழல் எதிர்ப்பு என்கிற போர்வையில் ராம்தேவ் போன்ற ஆசாமிகளை தூண்டில் புழுவாக மாட்டி, இளைய சமுதாயத்தையும் நடுத்தர வர்க்கத்தையும் வீழ்த்த நினைக்கும் இந்துத்வ சக்திகளின் சதியாகவே இந்த உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது.

மகாத்மா காந்தி என்ற மாபெரும் அவதார புருஷர் இந்தியாவுக்கு அறிமுகம் செய்த அகிம்சை போராட்ட ஆயுதம்தான் உண்ணாவிரதம். இன்றைக்கும் இந்தியாவில் எளிய மனிதர்களின் போராட்ட வடிவமாக அதுவே இருக்கிறது. அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றாலும்கூட, உண்ணாவிரதம் இருந்து தங்கள் வலியை உணர்த்த இந்தியாவின் எந்த மூலையிலும் மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.

காந்தி காட்டிய வழியில் உண்ணாவிரதம் இருந்ததால்தான் அன்னா ஹசாரே இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ராம்தேவ் போன்ற ஆசாமிகள் அந்த வலிமையான ஆயுதத்தை கொச்சைப்படுத்த முயற்சிப்பது, மகாத்மாவுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்!

வியாழன், 3 மார்ச், 2011

தியாகத் திருவுருவம் காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சி, இந்திய அரசியலில் மிகப்பிரதானமான கட்சியாக இருந்து வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் எந்த அளவுக்கு பாடுபட்டது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.
 நேரு மௌண்ட் பேட்டனின் மனைவியின் புகைப்பானை பற்ற வைக்க உதவுகின்றார். (என்னமா தியாகம் பண்றாருன்னு பாருங்க மக்களே)

அதே சமயம், அந்த இந்திய தேசிய காங்கிரஸ் வேறு – சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், தன்மையிலும் தரத்திலும் வேறுபட்டது என்பது வரலாறு சரியாகப் புரிந்தவர்களுக்குத் தெரியும். அன்றிலிருந்து இன்றுவரை இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் செய்திருக்கும் தியாகங்கள் பல (!). சுதந்திரம் அடைவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு & தான் பிரதமராக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததும் உடல்நலம் குன்றிய ஜின்னா சிறிதுகாலம் பிரதமராக இருக்கட்டும் என்று மன்றாடிய மகாத்மா காந்தியின் வேண்டுகோளை நிராகரித்ததும் சரித்திரம். தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக இந்தியாவை இரண்டாக பிளக்க ஒப்புக்கொண்டார் நேரு. அதன்விளைவாக உருவான பாகிஸ்தானால் இன்றுவரை நமக்குத் தலைவலி தீரவில்லை. ஆக, பதவிக்காக நாட்டின் ஒரு பகுதியைத் தியாகம் செய்ததிலிருந்து இந்த தியாக தீபத்தைத் தொடர்கிறது காங்கிரஸ். பின்னால் சீனாவுடன் போர் வந்த சமயத்தில் கிருஷ்ணமேனனின் ஆலோசனையை நிராகரித்து தன்னிச்சையாக செயல்பட்டதன் மூலம், போரில் வெற்றியைத் தியாகம் செய்தது நேருவின் காங்கிரஸ் ஆட்சி.

     மொரார்ஜி தேசாய்க்கும் இந்திரா காந்திக்கும் நடந்த அதிகாரப் போட்டியில் குஜராத் பல சமயங்களில் கலவர பூமியானது. வழக்கமாக காங்கிரஸ் இத்தகைய கலவரங்களுக்கு பி.ஜே.பி.யைக் குற்றம்சாட்டும். ஆனால், 1969 களில் இந்தக் கலவரங்கள் நிகழ்ந்தபோது பி.ஜே.பி. பிறக்கவேயில்லை. மகாராஷ்டிராவிலும் சிவசேனா வளர்வதற்கு முன்னாலேயே கலவரங்கள் நடைபெற்றதின் பின்னணி, காங்கிரசினுள் நிகழ்ந்த மறைமுக அதிகாரச் சண்டை என்பது சென்ற தலைமுறையினருக்குத் தெரிந்த உண்மை.

இன்றைக்கு ‘காமராஜர் ஆட்சி’ அமைப்போம் என்று வாய்கிழிய முழக்கமிடும் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காலத்தில் காமராஜரையே ‘தியாகம்’ செய்துவிட்டது என்பது கசப்பான உண்மை. காங்கிரஸ் (i) என்றும் காங்கிரஸ் (0) என்றும் பிளவுபடவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. அப்போது காங்கிரஸ் (i) யாக இருந்த இன்றைய காங்கிரஸ், சுதந்திர காலத்திலிருந்து தன்னலமற்று பணியாற்றிய காமராஜ், நிஜலிங்கப்பா போன்றோரை இந்திரா காந்திக்காக போட்டுத்தள்ளியது.

        இன்று பி.ஜே.பி. பெரிது படுத்துவதாகச் சொல்லப்படும் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் எப்படி முளைத்தது? சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் புரியும். பாபர் மசூதி இருக்குமிடத்தில் ராமர் விக்கிரகத்தைக் கொண்டு வந்து வைத்தது நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். பல வருடங்கள் நடுவில் மூடி வைக்கப்பட்டிருந்த அந்த சர்ச்சைக்குரிய இடத்தை மறுபடி திறந்து விட்டது ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு (ஷாபானு வழக்கையொட்டி நிகழ்ந்தது இது.) அயோத்தியில் பி.ஜே.பி. செய்தது சரியில்லை என்பதுதான் என் அபிப்ராயமும். ஆனால், கடைசிவரை அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, மசூதியை இடித்தவுடன் மத்திய அரசுக்கு எதுவுமே தெரியாது என்று காங்கிரஸின் உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் சொன்னபோது, காங்கிரஸ் மூலம் மத்திய அரசு சுயகௌரவத்தைத் தியாகம் செய்தது.

        எந்த விடுதலைப் புலிகளுக்கு காங்கிரஸ் ஆதரவும் ஆயுதங்களும் கொடுத்துக்கொண்டிருந்ததோ, அதே காங்கிரஸ் தான் மிறிரிதி-ஐயும் ஆயுதங்களையும் அனுப்பி விடுதலைப் புலிகளை வீழ்த்த முற்பட்டது. இந்தியர்களின் தன்மானமும் தமிழர்களின் நலனும் சந்தோஷமாகத் தியாகம் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளின் அணுகுமுறை தவறு என்றே வைத்துக்கொண்டாலும் இந்தியா இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்.

             ராஜீவிற்குப் பிறகு நரசிம்மராவ் பலரும் ஆச்சரியப்படும் வகையில் ஓரளவு நல்லாட்சி கொடுத்து அசத்தினார். ஆனால் போபர்ஸ் ஆயுதபேர ஊழலில் ராஜீவின் பெயரைக் காப்பாற்றுவதாக நினைத்து அமரரான நரசிம்மராவின் நற்பெயரைத் ‘தியாகம்’ செய்து சமாளித்தது காங்கிரஸ். அதே ஊழலில் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமான குவாத்ரோச்சி என்ற மாஃபியா மன்னனைக் காப்பாற்ற இந்திய இறையாண்மையைத் தியாகம் செய்து குற்றவாளியைத் தப்பவிட்டதுடன் ஊழல் பணத்தையும் அவருக்கே பரிசாக அளித்து இந்தியர்களின் தன்மானத்தை தாரை வார்த்தது. அதற்கு ‘பெரிதும் உதவி புரிந்த’ பரத்வாஜைக் கர்நாடகத்து கவர்னராக்கியது காங்கிரஸ். எடியூரப்பாவின் ஊழலைப் பற்றி முழு நேர அரசியல்வாதியைப் போல் குழாய்ச் சண்டை பேட்டிகள் கொடுத்து அசத்துகிறார் இந்தக் காங்கிரஸ் தியாகி!

 எமர்ஜென்ஸி காலத்தில் பிந்தரன் வாலேயை உருவாக்கியதில் பெரும்பங்கு உண்டு இந்திரா காந்தி அம்மையாருக்கு. பின்னாளில் தன்வினை தன்னைச் சுட்டது சரித்திரம். ஆனால், அதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் உயிரைத் தியாகம் செய்ய வைத்துப் பழிதீர்த்துக் கொண்டது காங்கிரஸ். இந்திய ஜனநாயகத்தின் ‘கருப்பு காலம்’ என்றழைக்கப்படும் எமர்ஜென்சி கொடுமைகளை மறைக்க – கடைசியாக காங்கிரஸ் தியாகம் செய்ய முடிவெடுத்திருப்பது சஞ்சய் காந்தியை! அவர் அவருடைய கொள்கையில் சற்று மிகையாக (Arbitrary approach) நடந்து கொண்டாராம். அவ்வளவுதான். இருப்பவர்களையே தியாகம் செய்யத் துணிபவர்களுக்கு இறந்தவர்கள் எம்மாத்திரம்? சஞ்சய் காந்தி தவறு செய்யவில்லை என்று யாரும் வாதாடவில்லை. ஆனால், காங்கிரஸின் இந்த சந்தர்ப்பவாத அரசியல்தான் அவர்களின் கொள்கைகளை சந்திசிரிக்க வைக்கிறது. சஞ்சய் காந்தி இருக்கும்போதே இதை ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரசின் நேர்மையைப் பாராட்டலாம். என்ன செய்வது – இல்லாத ஒன்றை எதிர்பார்த்து ஏங்குவதே இந்தியாவின் பொதுஜனத்திற்கு தலைவிதியாகிவிட்டது!      ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட காங்கிரஸ், ஏதோ வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தைபோல் நடிக்கிறது. மக்களின் கோபத்தை தி.மு.க.வின் மேல் முழுதாகத் திருப்பிவிட்டுத் தான் தப்பிக்க வேண்டும். அதே சமயம் தி.மு.க.வின் முதுகில் கூட்டணி குதிரை ஏறி தேர்தலில் லாபம் பெறவேண்டும். எத்தனை உயர்ந்த உள்ளம்! காமன் வெல்த்தில் அடித்த ஆயிரக்கணக்கான கோடிகளிலும், ஆதர்ஷ் ஹவுசிங் அவலங்களிலும் தி.மு.க.வோ வேறு எந்தக் கட்சியுமோ சம்பந்தப்படவில்லையே. காங்கிரஸ் அரசு இதற்கெல்லாம் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? செய்ய மாட்டார்கள் – தன்மானத்தையே வழி வழியாக தியாகம் செய்தவர்கள் – மிஞ்சிப் போனால் தன்னளவில் நேர்மையானவர் என்று இன்றும் நம்பப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தியாகம் செய்ய முன்வரலாம் காங்கிரஸ்.
 இத்தனை நடந்த பின்னும் காங்கிரஸ் ஒய்யாரமாக ஆட்சியில் குந்தியிருப்பது அவர்களுடைய பலத்தால் அல்ல. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யின் பலவீனத்தால்தான். அக்கட்சியின் உச்சத்தில் இருக்கும் அரைடஜன் தலைவர்களுக்கிடையில் ஒருங்கிணைந்த கருத்துமில்லை. ஒன்றிப்போகும் எண்ணமும் இல்லை. இன்றைய அளவில் புலித்தோல் போர்த்திய பூனையாகத்தான் தெரிகிறது பி.ஜே.பி. காங்கிரசில் வாரிசு அரசியல் இல்லாதிருந்தால் அல்லது பி.ஜே.பி.யில் வாரிசு அரசியல் இருந்திருந்தால் & இரண்டு கட்சிகளுக்கும் இன்றைய அளவில் வித்தியாசமே இருந்திருக்காதோ என்று தோன்றுகிறது. காங்கிரசின் ‘தியாகம்’ தொடர்கிறது. நஷ்டம் வழக்கம்போல மக்களுக்குத்தான்!

நன்றி: நற்றமிழன் 



திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழ​க மீனவர்கள் மீதான தாக்குதலுக்​கான கவன ஈர்ப்புக்கு​..

கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

போபால் விஷவாயுதாக்குதலில் நீதி வழங்கியதில் பாரபட்சமா? உடனே டுவிட்டர், வலைபதிவு என்று கூக்குரல் கொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.. ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்த வட இந்திய ஆதரவு என்பது ஏட்டாக்கனியாகவே இருக்கின்றது... 

நம்மை மட்டும் தீண்டதகாதவர்களாக நடத்தப்படும் மனோபவம் மட்டும் குறையவில்லை அதுக்கான காரணம் தெரியவும் இல்லை....

வந்தாரை வாழவைக்கும் தமிழகமாக நாம் சிறந்து விளங்குகின்றோம்...சௌக்கார்பேட் தாரைவார்த்து கொடுத்தோம்.. இன்றும் வட இந்தியனை சகோதரன் போலத்தான் பாவித்து வருகின்றோம்..

ஆனால் வட இந்தியாவில் இன்னும் மதராசி என்ற ஏளனபார்வையோடுதான் பார்க்கபடுகின்றோம்...

தமிழக மீனவர்களை காக்க ஒரு பெட்டிஷன்... அதில் உங்கள் கையெழுத்து போட்டு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்...ஒரு லட்சம் கையெழுத்தாவது இந்தநேரம் வந்து இருக்க வேண்டும்... ஆனால் முக்கி முக்கி இப்போதுதான் 1000கையெழுத்து போட்டு இருக்கின்றார்கள்....


இந்த வலையை வாசிக்கும் வாசகர்கள் பெட்டிஷனில் கையெழுத்து போட வேண்டுகின்றேன்... இந்த ஒற்றுமை நம் இனத்தை காக்க வேண்டிய ஒற்றுமை.. ஆட்டை கடித்து மாட்டை கடித்து அந்த பொறம் போக்கு சிங்களநாய்கள் நம்மை சீண்டி பார்க்க ஆரம்பித்து விட்டடனர்.... அவர்களை எதிர்க்க இப்போது இருக்கும் ஒற்றுமை அவசியம்... அந்த ஒற்றுமை இந்த நேரத்தில் வந்தது குறித்து மகிழ்ச்சி...

தமிழன் இன்னும் மாற்றாந்தாய்மனோபவாத்துடன்தான் நடத்தபடுகின்றான். இன்னும் விரிவாய் அறிய.. திரு. ஜாக்கி சேகர் தமிழக மீனவனுக்காக எழுதிய இந்த கடித பதிவை படியுங்கள்.... இந்த கடிதத்தை படித்தால் நிச்சயம் பெட்டிஷனில் ஓட்டு போடுவீர்கள்...

திரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா கடும் கண்டனம்.

மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் பெட்டிஷனில் கையெழுத்து போட இங்கே கிளிக்கவும்......


நன்றி!!!
சூரியன்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இளைஞன் - திரைவிமர்சனம்

ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்களே!
அது போலத்தான் எனக்கு தோன்றியது ,
தமிழக முதல்வர்
முத்தமிழறிஞர்
வாழும் வள்ளுவர்
தன்மான சிங்கம்
குடும்பத்தலைவர்
திருமிகு
மானமிகு
மாண்புமிகு
கலைஞரின் இளைஞன் படத்தைப் பற்றிய கீழ்கண்ட விமர்சனத்தை பார்த்தவுடன். 

இதை விட பெரிய ஐஸ் கட்டியை தமிழ் நாட்டில், இந்தியாவில் அல்ல , உலகத்திலேயே யாராலும் வைக்க முடியாது என்பதால் நான் இத்துடன் இந்த படத்தின் விமர்சனத்தை முடித்துக்க் கொள்ளலாமென்று முடிவு செய்து விட்டேன்.

இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்று கோபத்துடன் என்னுடைய வலைப்பதிவை பார்க்க வந்தவர்களுக்கு இப்போது ஓரளவு ஆறுதல் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

யாரவது விமர்சனத்தை படித்து விட்டு வயிறு வலிக்க சிரித்து நோய்வாய் பட்டால் , கலைஞரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதற்கான செலவையும் இளைஞன் திரைப்பட குழுவே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உடல் நிலை சரியானதும்  இளைஞன் படத்தை திரையரங்கில் அமர்ந்து பார்க்க வேண்டுமாம்.

தைரியமிருந்தால் யாராவது முயற்சி செய்யுங்கள்.

தற்போது நான் Escapeeeee...

-சூரியன் .

செவ்வாய், 25 ஜனவரி, 2011

முள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்

முன்பொரு காலமிருந்தது


ஈழத்தில் அழுத கண்ணீர்

இங்கே பெருக்கெடுத்து

தெருவெல்லாம் ஒடி 

தீயை உசுப்பிவிட்ட காலம்..
முன்பொரு காலமிருந்தது.
......

குப்பியணிந்த சிறுவர்கள்

ஒருகையில் துவக்கும்

மறுகையில் புல்லாங்குழலுமாய்

புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட காலம்
தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
முழக்கங்களின் கவர்ச்சியில்

மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது
கேப்றன்,கேணல்

தேசியத் தலைவர் மாவீரர்

பட்டங்களே அடையாளமாய்

மாறிவிட்டிருந்த காலம்..

முன்பொரு காலமிருந்தது
செய்தியாளர் சந்திப்புக்கு

உலகமே திரண்டு வந்து

முண்டியடித்து நினற

அப்படியொரு காலமிருந்தது     .... ரவிக்குமார் எம்.எல்.ஏ.

1983 கருப்பு ஜூலை என் வாழ்நாளில் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திச் சென்ற மாதம்.23வயசு எனக்கு.அதுவரை இலக்கியம்,திரைப்படம் என்று மட்டுமே இருந்த என்னைப் புரட்டிபோட்ட மாதம். என் தொப்புள் கொடி உறவுகள் கொலை செய்யப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ,போராளிகளின் கண்கள் பிடுங்கப்பட்டு மிகக் கொடுமையான சிங்கள வன்முறைக்கு ஆளான நேரம்..அதுநாள்வரை இலங்கை வானொலி நிலையம், ஸ்ரீலங்கா டீத்தூள், ராணி சோப் என்று மட்டும் நான் அறிந்த இலங்கை எனக்கு வேறு முகம் காட்டிய மாதம்..
அன்றிலிருந்து மே 17,2009 -முள்ளிவாய்க்கால் பேரழிவு நடைபெற்ற தினம் வரை, என் உடல் , உணர்வு அனைத்திலும் நிரம்பி இருந்த ஒரு கருத்தாக்கம், தமிழீழம்.அன்றிலிருந்து என் வாழ்க்கை முறையையே, என் அன்றாட நிகழ்வுகளைக்கூட, தமிழீழம் நோக்கிய பயணத்திற்காகவே மாற்றி அமைத்துக் கொண்டேன்.

1992 வரை இந்தியாவில் நான் இருந்த காலம் வரை ஈழத்திற்காக எந்தவொரு போராட்டம் என்றாலும் நானும் இருப்பேன்..கட்சி சார்பற்று அனைத்து போராட்டங்களிலும் நான் இருந்தேன்..நான் தி.மு.க சார்பு உள்ளவன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை நான் மதிக்க கற்றுக்கொடுத்தது ஈழப் போராட்டம் தான்..தமிழக அரசியலில் என்னால் அறவே வெறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஈழப்போராட்ட ஆதரவு காரணமாக என்னால் அதிகம் கவரப்பட்டார்.. அந்த அளவுக்கு ஈழம் கிடைக்குமென்றால் எந்த சமரமும் செய்து கொள்ளலாம் என்று எனக்குப் பட்டது..
1987 செப்டம்பர் 26 . என் பாசத்துக்குரிய தோழர் தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்று சொல்ல முடியாத சோகத்துடன், வீட்டை விட்டு வெளியில் செல்ல மனமில்லாமல் இருந்த பொழுதுதான், மருத்துவமனை சென்றிருந்த என் மனைவி, தான் முதல் முதலாக கருவுற்ற செய்தி கொண்டு வந்து சந்தோசத்தில் என் முன்னர் நின்றார்..அப்பொழுது நான் என் மனைவியிடம் சொன்னது..ஆண் குழநதை என்றால் திலீபன் என்று பெயரிடுவோம்.. தமிழீழம் என்ற எனது வேட்கையை அணைக்காமல் இருக்க என் வீட்டுலேயே திலீபன் வளரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அநதப்பெயரை என் குடும்ப உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புகளோடு , அதே சமயம் மனைவியின் ஆதரவோடு என் மூத்த மகனுக்கு திலீபன் என்ற பெயர் வைத்தேன்..
தமிழீழம் என்பதை ஈழவிடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை..நாடான்ற தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது இன்றும் என்றும் எனது ஒரே கனவு.ஒரே பேராசையும் கூட..
28 வருஷம் சுமந்த கனவு..
விடுதலைப்புலிகளின் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு..இருந்தாலும் களத்தில் நின்றவர்கள் அவர்கள் மட்டுமே. கடைசிவரை மரபு வழிப் போரில் இருந்து கொரில்லாப் போருக்குத் திரும்பாமல், உயிர் போகும் வரை களத்தில் நின்றவர்கள் எம் விடுதலைப் போராளிகள். அவர்களுக்கு வீர வணக்கம்..

விடுதலைப் போராளிகள் தான் மரபு வழிப்போரில் இருந்தார்களே தவிர, இந்திய அரசு பின்னனியில் இருந்து நடத்திய இந்தப் போரில் சிங்கள ராணுவத்தால் அனைத்து மனித உரிமைகளும் மீறப்பட்டன.2008 ஆண்டு பின் பகுதியிலிருந்து 2009 மே18 வரை நடந்த அனைத்து அத்துமீறல்களும் ”யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்” (யு.டி.எச்.ஆர்)என்ற அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.முடிந்தால் பார்க்கவும் நெஞ்சு வெடித்துவிடும்.
2008 அக்டோபர் முதற்கொண்டு தொடர்ந்து, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று தமிழகம் முழுதும் போராட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்தும் , அதன் உச்சகட்ட நிகழ்வாக தியாகி முத்துக்குமரன், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டும் அதன்பிறகு 16 உயிர்கள் தீக்கிரையாகியும் , ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் தாய்த் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாத வேதனை, நம் கையாலாகத்தனம், என்னை என் சாவு வரைத் துரத்தும்.

கடைசிவரை 6 கோடித்தமிழர்களின் கூக்குரலுக்கும், போராட்டங்களுக்கும், தீக்குளிப்புக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசு நடத்திய இந்த இன அழிப்பு மனதால் கூட மன்னிக்க முடியாதது..தரை,வான்,கடல் என் முப்படைகளும் இருக்க, வங்கி,அஞ்சல்,மருத்துவம் என அனைத்துச் சேவைகளுடன் நடைபெற்ற ஒரு தமிழ் அரசை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்திய காங்கிரஸை என் ஏழேழு ஜென்மத்திலும்(அப்படி ஒன்று இருந்தால்) மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. காதுகளை மறைத்துக் கொண்டு தலைப்பாகையுடன் தமிழக எம்.பிக்கள் முன் மன்மோகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் எனக்கு சொல்லும் சேதி நம் குறைகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது என்பதாகத் தான் எனக்குப்பட்டது.நமது அழுத்தத்தினால் இலங்கை சென்ற அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப், அங்கு சென்று போரில் எவ்வளவு தூரம் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது என்று கேட்டு, அதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்கு கொடுத்து வந்தது முழுக்க முழுக்க நம்பிக்கைத் துரோகம்.
இதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ்தான் முழுக்காரணம் என்றாலும், உண்மையான காரணம் இந்திய வெளியுறவுத்துறையே.. என்னதான் இந்தியா ஒரு தேசம், ஒருமைப்பாடு என் உயிர் என்றெல்லாம் தமிழர்கள் ஒன்றிணைந்தாலும், மலையாளிகளுக்கு என்னமோ அதல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இங்கிலாந்திற்கு முதல் இந்தியத்தூதுவராகப் பணியாற்றியவரும் அதன் பின்பு ஐ.நாவிற்க்கான இந்தியக்குழுவிற்கு தலைமை வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னின்றவர்.. அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் நுழைந்த மலையாளிகள்,அந்தத் துறையையே, ஏதோ கேரள அரசின் ஒரு பகுதியாகத் தான் இன்று வரை பார்க்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறையை இந்திய மலையாளிகள் துறை என்று பெயர் மாற்றம் செய்யலாம். ஐ,நாவில் இருந்த சசி தரூர், இன்றும் உள்ள விஜய் நம்பியார், எம்.பி.நாராயணன்.. சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலராக இன்று இருக்கும் நிரூபமா அனவருமே மலையாளிகள்.. இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே.அந்தோனி ஆகியவர்கள் ராஜபக்‌ஷேவுடன் இணைந்து நடத்தியது தான் இந்த இன அழிப்புப் போர்.. இந்திய இறையாண்மை, இந்திய அரசின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் சொல்லி முதலில் இந்திய உளவுத்துறை”ரா” வால் விடுதலைப் புலிகளை முடிக்கப் பார்த்த இவர்கள் இன்று, ராஜீவை இழந்த சோனியா,ராகுல் காலத்தில் தான் இதை நடத்தி முடிக்க முடியுமென்று திட்டமிட்டு முடித்தது இந்த மலையாளிக் கூட்டணிதான்.இதற்கு இங்குள்ள ராஜபக்‌ஷேவின் தூதுவர் இந்து ராம் ,சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் துணை..
தமிழகத்தில் இருந்து அமைச்சர் பதவி கேட்போர், பணம் பண்ணும் துறைகளையே கேட்டுப்பெறாமல், உண்மையிலேயே உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், முதலில் கேட்டுப் பெறவேண்டியது இந்த வெளியுறவுத் துறையே. வெளியுறவுத்துறை கைக்கு வந்தாலும் உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது. துறை முழுதும் களை எடுக்கப் பட வேண்டும். உண்மையான இந்திய பாதுகாப்பு எது என்று தெரியப்படுத்த வேண்டும். கிருஷ்ண மேனன் காலத்திலேயே அவரது தவறான கணிப்பால் தான் சீனா நம்மீது படை எடுத்தது. அந்தத் துறையின் தவறான போக்கால் தான் இந்தியாவின் நாலு பக்கமும் பாதுகாப்பு பலவீனப்பட்டு உள்ளது. இதுவரை பாதுகாப்பாக இருந்த தென்னிந்தியாவின் பாதுகாப்பையும் இப்போது கேள்விக்குரியதாக்கி இருக்கிறார்கள்.

வெளியுறவுத்துறையை கேட்டுப் பெற்று தேவையான மாற்றங்கள் செய்தால் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து இந்தியர்களுக்கும் அது தான் பாதுகாப்பு. இந்தியாவிற்கும் பாதுகாப்பு.

அப்பொழுதுதான் உலகமெங்கும் வாழ் தமிழர்களுக்கு மட்டுமில்லை.. தினந்தோறும் பிழைக்கப்போய் குண்டடிபட்டு வந்து நிற்கும் என் சொந்த மண்ணைச்சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கும் அது தான் பாதுகாப்பு..

அதுநாள்வரை உலகத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல..என் மீனவத் தோழர்களுக்கும் நாதியில்லை என்பது தான் உண்மை.

அன்புடன்

அ.வெற்றிவேல்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

கடவுள் இருக்கிறார்! ஒத்துக் கொள்கிறேன்!

துறவறம் பூண்டவன் நடிகையுடன் இருந்ததை நாடே கண்டபோதும் காணாத குருடனாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
காஞ்சி கோவில் கருவறைக்குள் கலவி நடப்பதைத் தடுக்க இயலாத பிண்டமாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
விமானம் ஏறி விரயம் செய்து வந்து மிதிபட்டுச் சாவதைத் தடுக்க இயலாத உணர்வற்றவனாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
இருமுடி கட்டி வந்த பக்தர்கள் மிதியடியாய் மிதிபட்டுச்சாவதைத் தடுக்க இயலாதக் கையாலாகாதக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
இந்தக் கையாலாக கடவுள் இருந்தாலென்ன..இல்லாமல் போனால் தான் என்ன?

செவ்வாய், 11 ஜனவரி, 2011

அம்பேத்கர், பகத்சிங், கார்ல் மார்க்சு புத்தகங்கள் படிப்பதாலே நீங்கள் சிறை செல்ல நேரிடலாம் !

என்ன அம்பேத்கர், பகத் சிங் போன்ற தேச தலைவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு விட்டார்களா? எந்த நாட்டில் இப்படி ஒரு கொடும் நிகழ்வு நடந்து வருகின்றது? அங்கு சனநாயகம் கண்டிப்பாக செத்திருக்கும், மக்கள் ஒரு கொடுங்கோலாட்சியின் கீழ் தான் வாழ்ந்து வருவார்கள். இதில் கார்ல் மார்க்சுமா? என்ன கொடுமை ஐயா இது என நீங்கள் அதிர்ச்சியோடு கேட்கலாம். ஆனால் இது தான் உண்மை அம்பேத்கர், பகத்சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டு அதிக நாட்களாகி விட்டது, இப்பொழுது அந்த வரிசையில் கார்ல் மார்க்சும் சேர்ந்திருக்கின்றார். அந்த‌ நாட்டின் பெய‌ர் “இந்தியா”.
பாபா சாகேப் அம்பேத்கர், இந்தியாவிற்கான‌ ச‌ட்ட‌த்தை உருவாக்கிய அமைப்பின் த‌லைவ‌ர் இன்று இந்தியாவில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளார், ஆம் அவ‌ர‌து க‌ருத்துக‌ளை, அவ‌ர‌து நூல்க‌ளை ப‌ர‌ப்புவ‌த‌ற்காக‌ நீங்க‌ள் இந்த‌ இந்துத்துவ அர‌சால் கைது செய்ய‌ப்ப‌ட்டு சிறையில‌டைக்க‌ப்ப‌டுவீர்க‌ள். கேட்ப‌த‌ற்கு ச‌ற்று அதிர்ச்சியாக‌ இருந்தாலும், இது உண்மை தான். “ஏழ்மையான‌ குடும்ப‌த்தில் பிற‌ந்திருந்தாலும் நான் முதுக‌லை த‌த்துவ‌ப்(M.Phil) படிப்பிற்கான நுழைவுத் தேர்வை முடித்த‌து என‌க்கு ம‌ன‌நிறைவை த‌ந்த‌து, ஆனால் இந்த‌ சிறை நாட்க‌ள் மீண்டும் என்னை ஒரு இருளுக்குள் த‌ள்ளுகின்ற‌ன. அம்பேத்காரிய‌வாதிக‌ள் எல்லாம் சேர்ந்து 1857ல் ந‌ட‌ந்த‌து போல‌ க‌ல‌க‌ம் செய்ய‌ப் போகின்றீர்க‌ளா? என‌ காவ‌ல‌ர்க‌ள் எனனைப் பார்த்துக் கேட்டார்க‌ள்” என‌ கூறுகின்றார் தின்க‌ர் காம்பிளி. இவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ வ‌ழ‌க்கு மிக‌வும் விசித்திர‌மான‌ ஒன்று.


அனில் ம‌ம்மானே, வ‌ய‌து 27, ச‌மூக‌விய‌ல் பேராசிரிய‌ர் (முதுக‌லையில் த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம்)

தின்க‌ர் காம்பிளி வ‌ய‌து 23, முதுக‌லை த‌த்துவ‌ம், முத‌லாமாண்டு (முதுக‌லை தத்துவ நுழைவுத் தேர்வில் இர‌ண்டாமிட‌ம்)

பாபு ப‌ட்டீல் வ‌ய‌து 20, இள‌ங்க‌லை முத‌லாமாண்டு

பாபாசாகேப் சேமோத்தி வ‌ய‌து 27, முதுக‌லை வ‌ணிக‌விய‌ல் ப‌டித்த‌வ‌ர்.

இவ‌ர்க‌ள் நால்வ‌ரிட‌மும் இருந்து கைப்ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ளில் இருக்கும் க‌ருத்துக‌ள் க‌ண்டிக்க‌த‌க்க‌வை, மேலும் இந்நூல்க‌ள் ம‌க்க‌ளைத் தூண்டிவிட்டு ந‌க்ச‌ல்க‌ளுட‌ன் சேர‌த்தூண்டுப‌வை” என‌ இவ‌ர்க‌ள் நால்வ‌ர் மீதும் வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌து காவ‌ல்துறை. இதில் முத‌ல் இருவ‌ர் ம‌ட்டும் தான் இந்த‌ப்புத்த‌க‌ங்க‌ளை விற்ப‌னை செய்வ‌த‌ற்காக‌ கொண்டு சென்ற‌வ‌ர்க‌ள், மூன்றாவ‌து, நான்காவ‌து ந‌ப‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்த‌ தொட‌ர் வ‌ண்டியில் இவ‌ர்க‌ள் அருகில் அம‌ர்ந்து ப‌ய‌ண‌ம் செய்த‌ குற்ற‌த்தை செய்த‌வ‌ர்க‌ள். இதில் ந‌கைச்சுவை என்ன‌வெனில் பாபுவிற்கு எதிராக‌ காவ‌ல்துறை நீதிம‌ன்ற‌த்தில் காட்டிய‌ ஆதார‌ம் அவ‌ர் ப‌டித்து வ‌ரும் இள‌ங்க‌லை பாட‌ப் புத்த‌க‌ங்க‌ள். அப்படி என்னதான் புத்தகங்களை அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்றால் கயர்லாஞ்சி நிகழ்வைப் பற்றிய புத்தகம், அம்பேத்கர், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்கள். (1)

பாபுவிற்கும், தின்க‌ரிற்கும் நீதிம‌ன்ற‌ம் பிணை வ‌ழ‌ங்கிய‌து, ஆனால் அனிலுக்கும், பாபாசாகேப்பிற்கும் நீதிம‌ன்ற‌ம் பிணை வ‌ழ‌ங்க‌ ம‌றுக்க‌, அவ‌ர்க‌ள் உண்ணாவிர‌தம் ந‌ட‌த்தினார்க‌ள். மேலும் சமூகப் போராளிகளான அன்னா கசாரே போன்றோரும் அரசின் இந்த தவறான நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க, மேலும் 14நாட்க‌ள் உண்ணாவிர‌த்த‌த்திற்கு பிற‌கு தான் பிணை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ஒரு த‌வ‌றான‌ வ‌ழ‌க்கில் இருந்து பிணை பெற‌வே சாதார‌ண‌ ம‌க்க‌ள் மிக‌க்க‌டுமையாக‌ போராட‌ வேண்டியுள்ள‌து.(1)

இதே போல‌ இன்னொரு வ‌ழ‌க்கும் உண்டு. த‌னேன்திர பூரிலே, ந‌ரேசு ப‌ன்சூத் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அம்பேத்க‌ர் இந்து அடிமைத்த‌ன‌த்தில் இருந்து  வெளியேறி பௌத்ததை தழுவிய‌‌‌ தீட்சா பூமிக்குச் சென்று ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌ செய‌ல்க‌ளைச் செய்ய‌ திட்ட‌மிட்டார்க‌ள் என்ப‌தே அவ்வ‌ழ‌க்கு. இவ்வ‌ழ‌க்கு எவ்வித‌ ஆதார‌மும் அற்ற‌து என‌ கூறி இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் பிணை வ‌ழ‌ங்கிய‌து உய‌ர் நீதிம‌ன்ற‌ம், ஆனால் இந்த‌ தீர்ப்பின் மீது உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் இடைக்கால‌த் த‌டை பிற‌ப்பித்து இவ‌ர்க‌ளை மீண்டும் சிறையில‌டைத்த‌து. இவ‌ர்க‌ள் மாவோயிசுட்டுக‌ள் என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்டார்க‌ள். “என்னை த‌லைகீழாக‌ க‌ட்டித்தொங்க‌ விட்டு, அம்பேத்க‌ராக‌ இருக்க‌ முய‌ன்றால் இது தான் உன‌க்கு கிடைக்கும் என‌ ஒரு காவ‌ல‌ர் அடிக்க‌டி கூறுவார்” என்கிறார் ப‌ன்சூத். மேலும் அவர் கூறுகையில்,  த‌லித்துகள் பொதுவாக‌ லெனின், கார்க்கி போன்றோரின் எழுத்துக‌ளைப் ப‌டிக்க‌மாட்டார்க‌ள், அப்ப‌டி த‌ப்பித்த‌வ‌றி அவ‌ர்க‌ள் ப‌டித்து விட்டால்  அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் இங்கே ந‌க்ச‌லைட்டுக‌ள், குற்ற‌வாளிக‌ள். மேலும் அவ‌ர் த‌ன்னிட‌ம் உள்ள‌ அம்பேத்க‌ர் நூல்க‌ளின் தொகுப்பையும் ந‌ம்மிட‌ம்(தெக‌ல்கா) காட்டுகின்றார். இறுதியாக‌ மூன்று வ‌ருட‌த்திற்கு பிற‌கு இவ‌ர்க‌ள் மேல் போட‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு த‌ள்ளுப‌டி செய்ய‌ப்ப‌ட்ட‌து. (1)

ப‌க‌த்சிங் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார். ச‌ந்திராப்பூர் என்ற‌ ஊரில் மாணவர்களுக்கு ப‌க‌த் சிங், ஜோதிபா பூலேவைப் ப‌ற்றி பாட‌ம் எடுத்த‌த‌ற்காக‌ ப‌த்து மாண‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். கார‌ண‌ம் இத‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுக்கின்றார்க‌ள் என்ற‌து காவ‌ல்துறை. என்ன‌ புரிய‌லையா, அதாவ‌து ப‌க‌த்சிங் ச‌மூக‌த்தில் ந‌டைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுத‌ம் ஏந்திய‌ புர‌ட்சியை முன்வைத்தார், ப‌க‌த்சிங்கை ப‌டித்து அவ‌ர‌து கொள்கைக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு ஏற்ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் தாங்கிய‌ புர‌ட்சியை நோக்கி செல்வார்க‌ள் என்கிற‌து காவ‌ல்துறை.(1) இப்ப‌டியாக‌த் தான் ப‌க‌த்சிங்கும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார்.

இறுதியாக‌ இன்று பினாய‌க் சென் வ‌ழ‌க்கின் மூல‌மாக‌ கார்ல் மார்க்சும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டார். ஆம் பினாய‌க் சென் ஒரு மாவோயிசுட்டு ஆத‌ரவாள‌ர் என்ப‌த‌ற்கு ஆதார‌மாக‌ காவ‌ல்துறை கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேச‌துரோகி என‌க் கூறி ஆயுட்கால‌ சிறைத் த‌ண்ட‌னை வழங்கியது நீதிமன்றம்.(2)

ஆதலால் இந்தியாவின் தேசபக்தர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களைப் புறக்கணியுங்கள். அதே போல தேசதுரோகிகள் எல்லாம் அம்பேத்கர், பகத்சிங், கார்ல்மார்க்சு போன்றோர்களை ஆதரியுங்கள். நீங்கள் தேசபக்தரா அல்லது தேசவிரோதியா என்பது உங்களின் கையில் தான் உள்ளது (நான் உங்கள் கையில் இருக்கப்போகும் புத்தகத்தைப்பற்றிச் சொல்கின்றேன்). மேலும் உங்கள் வீட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை வைத்துக்கொள்ளாதீர்கள் அதுவே நாளைக்கு உங்களுக்கு எதிரான ஆதாரமாகி விடலாம். சுதந்திரத்திற்கு முன்னான ஆங்கிலேய கால‌னீய‌ ஆக்கிர‌மிப்பில் தான் இதுபோல‌ புத்தகங்களை தடை செய்வார்கள் என நீங்கள் கருத தழைப்பட்டால் நீங்கள் ஒரு தேச துரோகி ஆகக் கூடும், ஆதலால் அது போன்ற எண்ணங்களையும் தவிர்த்து விடுங்கள். 

நன்றி – தெகல்கா வார இதழ்.
 
Original Source: http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810bhagatsingh.asp

வியாழன், 6 ஜனவரி, 2011

மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள்

உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என  நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.
புலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும், இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர். இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்). மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)

இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)
ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.  இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.  

நன்றி : ந‌ற்ற‌மிழ‌ன்.

புதன், 5 ஜனவரி, 2011

கமல்…நீங்கள் வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?

மன்மதன் அம்பு என்ற படத்தில் நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டே செருப்பால் அடிக்கின்றீர்களே. இது என்ன புது வித்தை. இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள் நண்பர்.கமல் அவர்களே.

ம‌ன்ம‌த‌ன் அம்பு அருமையான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டிய‌து. ஆனால் நீங்க‌ள் வைத்த‌ சில‌ க‌ருத்துக‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தின் மீது எச்சில் உமிழ்வ‌து போல‌ உள்ள‌து. இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ப‌ட‌த்தின் க‌தை, திரைக்க‌தை, வ‌ச‌ன‌த்தை எழுதிய‌து நீங்க‌ள் தான் என்ப‌தை நான் முத‌லில் உங்க‌ளைத் தொட‌ரும் இர‌சிக‌க‌ண்ம‌ணிக‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்க‌ள் இதில் ந‌டித்த‌வ‌ர் ம‌ட்டுமே, இந்த‌ப்ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌த்தில் எல்லாம் உங்க‌ளுக்கு எந்த‌ ஒரு தொட‌ர்பும் இல்லாம‌ல் இருந்திருக்கலாம் என‌ அவ‌ர்க‌ள் எண்ண‌க்கூடும்.

காசுமீரிகளின் தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌த்தில் நீங்க‌ள் முத‌லில் எச்சில் உமிழ ஆர‌ம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிர‌வாதிக‌ள் ஒருவ‌ன் தான் ப‌ட‌த்தில் உங்க‌ளின் க‌தாநாய‌கியையும், அவ‌ர‌து த‌ந்தையையும் க‌ட‌த்தி வைத்திருப்ப‌தாக‌ கூறுகின்றீர்க‌ள். ப‌ட‌த்தின் க‌தைப்ப‌டி இது ஒரு மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் ந‌ட‌க்கின்ற‌து. அதாவ‌து 2009ல் நீங்க‌ள் இந்த‌க் க‌தையை எழுதியிருந்தால் 2006ல் அப்ப‌டி ஒரு நிக‌ழ்வு காசுமீரில் ந‌ட‌ந்திருக்க‌ வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969 கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912
 

அதே போல படத்தில் வரும் ஒரு வசனம் விருமாண்டியின் தொடர்ச்சி என நினைக்கின்றேன். இனிமேல் இந்தியா பாகிசுதானுக்கு இடையே சண்டை கிடையாது, இருவருமே நட்பு நாடுகள் ஆகிட்டோம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம், நான் என் நண்பனை (சண்டையில்)கொன்ன பாகிசுதான் இராணுவ வீரனை தேடி போயி கொல்ல முடியாதில்லை என நீங்கள் சொல்வீர்கள். இதே கேள்வியை அங்க இருக்கிற பாகிசுதானைச் சேர்ந்த இராணுவ வீரனும் கேட்கலாமே. இந்தக் கேள்வி உங்கள் தரப்பில் சரி என்றால், அவர்களது தரப்பிலும் சரி தானே. நான் தெரியாம தான் கேட்கிறேன் இதுக்கும் அந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு. இந்தப் படத்தில் வரும் மேற்கூறிய இரு காட்சிகளின் கருத்தியலில் தான் இந்துத்துவ மதவெறியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படின்னா நீங்க யாரு நண்பர்.கமல் அவர்களே? உங்களை எல்லாம் நாத்திகவாதி எனக் கூறுகின்றார்களே. அதெல்லாம் பொய், நீங்கள் ஒரு இந்துத்துவ வெறியர் அப்படின்னு இந்த இரண்டு காட்சிகள் சொல்லுதே, இதற்கு உங்கள் பதில் என்ன நண்பர். கமல் அவர்களே.


அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதி தாசனே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்) உங்களையும் சூடு, சொரணையோடு பத்ம சிறீ விருதை திருப்பி தரச் சொல்லியும், அய்ஃபா (iifa) விருதுகள் வ‌ழ‌ங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நட த்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநராக இருக்கும் உங்களை அந்த பதவியில் இருந்து விலகக்கோரியும் சென்னையில் மே 17 இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின‌, அவர்களை கூட நீங்கள் சிறு அலை எனக் கூறியதாக ஞாபகம். ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17 என்ற மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.

                                                                                                                                                                   
எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். ம‌ற்றுமொரு உதார‌ண‌ம் எங்க‌ள் ச‌மூக‌த்திலும் இப்பொழுது ப‌டித்த‌ ஆட்க‌ளெல்லாம் இருக்கின்றார்க‌ள் என‌ த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்தில் நீங்க‌ள் கூறுவீர்க‌ள். உங்க‌ள‌து இந்த‌க் கூற்றின் ப‌டி முன்னாட்க‌ளில் அந்த‌ ச‌மூக‌ம் ப‌டிப்ப‌றிவில்லாத‌ ச‌மூக‌ம், அத‌ற்கு அவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ சொல்ல‌ வ‌ருகின்றீர்க‌ள். மெத்த‌ ப‌டித்த‌ உங்க‌ளைப் போன்ற‌ ‘ப‌குத்த‌றிவுவாதி’ இப்ப‌டி சொல்வ‌து முறையா? 1937வ‌ரை ம‌ருத்துவ‌ நுழைவுத் தேர்வு சம‌சுகிருத‌த்தில் இருந்த‌து உங்க‌ளுக்கு தெரிந்திருக்குமே ந‌ண்பர்.க‌ம‌ல். அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ச‌ம‌சுகிருத‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் ம‌ருத்துவ‌ம் ப‌டித்திருப்பார்க‌ள் ? ஒரு ச‌மூக‌த்தை நீங்க‌ள் குறிவைத்து தாக்குகின்றீர்க‌ளோ என‌ என்னுள் அச்ச‌ம் எழுவ‌தை என்னாள் த‌விர்க்க‌ முடிய‌வில்லை ந‌ண்ப‌ர்.க‌ம‌ல் அவ‌ர்க‌ளே. உட‌னே உங்க‌ள் ந‌ற்ப‌ணி ம‌ன்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள்( அதாவ‌து இர‌சிக‌ர்க‌ள்), இத‌ற்கும் க‌ம‌லுக்கும் என்ன‌த் தொட‌ர்பு, அவ‌ர் வெறும் ந‌டிக‌ர் தானே என‌ விரைந்தோடி வ‌ந்து என்னைக் கேட்க‌லாம். த‌சாவ‌தார‌ ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌து அவ‌ர் தான், உன்னைப் போல் ஒருவ‌ன் பட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌ குழுவில் க‌ம‌லும் ஒருவ‌ர். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் நீங்க‌ள் ஒரு ப‌குத்த‌றிவுவாதியா ? என‌ உங்க‌ளை நான் கேட்ப‌து ச‌ரி என்று உங்க‌ளுக்கு தெரியும். அப்ப‌டியே உங்க‌ள் க‌ண்ம‌னிக‌ளுக்கும் சொல்லிவிடுங்க‌ள்.
பின்குறிப்பு: இந்த‌ த‌லைப்பு உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்த‌வோ, அல்ல‌து உங்க‌ள் இர‌சிக‌ க‌ண்ம‌ணிக‌ளின் உள்ள‌த்தை புண்ப‌டுத்த‌வோ நான் வைக்க‌வில்லை. நீங்க‌ள் என்ன‌ கார‌ண‌த்திற்காக உங்க‌ள் ப‌ட‌த்தில் ஒரு ஈழ‌த்த‌மிழ‌ர் கூறுவ‌தாக‌ இப்ப‌டி ஒரு வ‌ரியை வைத்தீர்க‌ளோ, அதே நோக்க‌த்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக‌ நான் திரைப்ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி எழுதுவ‌து கிடையாது, ஆனால் இந்த‌ப் ப‌திவு நீங்க‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ங்க‌ளைக் கொச்சைப்ப‌டுத்திய‌ கார‌ண‌த்தினாலும், குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை நீங்க‌ள் தொட‌ர்ந்து தாக்கி வ‌ருவ‌தாலும் இதைப்ப‌ற்றி நான் எழுத‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன். 
 
நன்றி : ந‌ற்ற‌மிழ‌ன்