நடிப்பு - ஜெயம் ரவி, தன்ஷிகா, காதல் சரண்யா, வசுந்தரா, லியாஸ்ரீ, வர்ஷா, பொன்வண்ணன், ரோலன்ட் கிக்கிங்கர், வடிவேலு.
இசை - வித்யாசாகர்
இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்
தயாரிப்பு- கருணா மூர்த்தி, அருண்பாண்டியன்
இந்தியா அனுப்ப இருக்கும் செயற்கைகோளை அழிக்க வரும், சர்வதேச கூலிப்படை கும்பலை ஐந்து மாணவிகள் உதவியுடன் தீர்த்துகட்டும் இளைஞனின் கதை.
அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் ஜெயம் ரவி பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., பயிற்சிக்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணிக்கு ரவியை நியமிக்கிறார் வனத்துறை அதிகாரி பொன்வண்ணன். அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவிகள். கூடவே மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர்.
அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் ஐந்து பேரை காட்டுக்கு அழைத்துப் போகிறார் ஜெயம் ரவி. அப்போது நவீன எந்திர துப்பாக்கிகளுடன் வெள்ளைக்காரர்கள் போவதை ஒரு மாணவி பார்த்து ரவியிடம் சொல்கிறாள். அவர்கள் விவசாயத்துக்காக இந்தியா அனுப்ப உள்ள ராக்கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் கூலிப்படை என்பதை புரிந்து கொள்கிறார் ஜெயம் ரவி. உடனே அவர்களை அழிக்க புறப்படுகிறார்.
மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து ஜெயம் ரவியுடன் செல்கின்றனர். மாணவிகளின் உதவியோடு கூலிப்படையினரின் சதியை ரவி எப்படி முறியடிக்கிறார்? என்பது க்ளைமாக்ஸ்.
காதல் நாயகனாக வலம்வந்த ஜெயம் ரவி, ஆக்ஷன் நாயகனாக கண்ணில் வெறியையும், தோற்றத்தில் முரட்டுத்தனத்தையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பேராண்மையில். உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் சும்மா மிரட்டியிருக்கும் ஜெயம் ரவி, சாதி ரீதியாக உயர் அதிகாரியும், மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் துறுதுறுப்பு என நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஜெயம் ரவியை பயிற்சியாளர் பணியிலிருந்து விரட்ட வசுந்தரா, தன்ஷிகா கூட்டணி போடும் திட்டங்கள் திடுக். அதற்காக, நிர்வாண வாக்கிங் எல்லாம் ஓவர். செக்கிங் பாயின்ட்டில் நிற்கும் ஜீப்பை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் ஐந்து நாயகிகளும் முதல் பாதியில் வில்லிகளாகவே மாறிவிடுகின்றனர்.
நாயகன்களுக்கு சமமாக நாயகிகளும் ஆக்ஷனில் பாய்வதால் படத்தில் ஆறு நாயகன் என சொல்லுமளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள். காதல் சரண்யாவின் மனதுக்குள் உறங்கும் காதலும், அவர் கண்கள் பேசும் வார்த்தைகளும் யதார்த்தம்.
ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள். ஊர்வசி, பொன்வண்ணன், கையால் நடந்து வரும் குமரவேலு என அனைவரும் கதைக்கேற்ற தேர்வு.
கல்லூரி பியூனாக வந்து நாயகன் ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசி அடிக்கடி பொன்வண்ணன் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலுவின் காமெடி வழக்கம்போலவே செம கலாட்டா. மாணவிகளின் நிர்வாண கதையை கேட்டு, நள்ளிரவு 12 மணி வரை உறங்காமல் இருக்க வடிவேலு முயற்சிப்பது கிக் காமெடி.
சிக்ஸ் பேக் ஹாலிவுட் வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் தனது உடலைப் போலவே கேரக்டருக்கும் உரமேற்றுகிறார். படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம்.
மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்... மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸ’ல் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி.
பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.
இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும், சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.
ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரின் மலைவாழ் குடிசை செட், செயற்கைகோள், ராணுவ ஆயுதங்கள் கனக் கச்சிதம்.
பேராண்மை - கம்யூனிச சிந்தனைகளுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக