வியாழன், 12 நவம்பர், 2009

மரபணு கத்தரிக்காய் உண்ணாதீர்கள் – எச்சரிக்கை.


பி.டி.கத்தரிக்காய்: எதிர்ப்புகள் வலுப்பது ஏன்?

கத்தரிக்காய் முற்றினால் கடைக்குத் தான் வந்தாகனும்' என்ற பழமொழி தமிழ்நாட்டில் பிரபலம். இப்போது பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் சந்தைக்கு வருவதற்கு முன்பே சந்தி சிரிக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம். அதன் கீழ் வரும் 'மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் இதற்கும் அமைச்சர் 'முல்லை பெரியாறு'' புகழ் ஜெய்ராம் ரமேஷ்தான்!

மான்சான்ட்டோ

இதில் என்ன பிரச்சனை? நவீன விவசாயத்தை ஏற்கவேண்டியது தானே? விஞ்ஞான வளர்ச்சி மூலம் அதிக லாபம் பெறலாமே? என பலரும் கேட்கிறார்கள். இதில் தொலை நோக்கு அபாயம் இருக்கிறது. நமது சந்ததிகளின் நலன் குறித்த எச்சரிக்கை இருக்கிறது.

அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பொருள்களின் விதைகளை நமது வயல்களில் தெளித்தால் அது செழித்து வளரும், காய்த்து கொட்டும்.

ஆனால் அதன்மூலம் வரும் விதைகளைப் பயன்படுத்த முடியாது.விதைகளின் விற்பனை உரிமை மான்சான்டோ என்ற அமெரிக்கா நிறுவனத்தின் கீழ் இருக்கும். (பார்க்க: பெட்டி செய்தி)

பழைய அனுபவம்

இதன் அபாயங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. இவர்களின் மரபணு மாற்று பருத்தி விதைகள் பெரும் விளம்பரங்களோடு 1990களில் இந்தியாவுக்கு அறிமுகமானது.

அது உணவுப்பொருள் அல்ல என்பதால் பெரிதாக யாரும் எதிர்க்கவில்லை. எழுந்த எதிர்ப்புகளும் வலுவாக உருவாகவில்லை.

அந்த பருத்தி விவசாயம் ஆரம்பத்தில் லாபம் தருவதுபோல் தெரிந்தது. பின்னர் தன் வேலையை காட்டியது, அந்த பருத்திகளை தின்ற மாடுகள் தொண்டை புற்று நோய் வந்து மண்டன. ஆடுகள் கொத்து, கொத்தாக மண்ணில் வீழ்ந்தன.

அந்த பருத்தியை பயிரிட்ட மண் பாதிப்புக்குள்ளானது. மறு விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் கேள்விக்குறியானது. விவசாயிகள் கடனாளியாயினர். அதனால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலையால் மரணம் அடைய, அது ஆந்திராவில் புயலை கிளப்பியது.

அந்த மான்சான்டோ நிறுவனம் இப்போது மஹிகோ என்ற தனது துணை நிறுவனம் மூலம் கத்தரிக்காயை மரபணு மாற்றம் செய்து நுழைய பார்க்கிறது. இந்திய வேளாண் விஞ்ஞானிகளையும். ஆட்சியி¬ருக்கும் புள்ளிகளையும் சரி கட்டி இந்திய விவசாயத்தை விழுங்க பார்க்கிறது.

இது பருத்தி போல் அல்லாமல் உணவுப் பொருள் என்பதால் எதிர்ப்பு வலுவாகி அது மக்கள் மயப்படுத்தப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

ஏன் இந்த மரபணு மாற்றம்?

சமீபகாலமாக புதிய வகை பூச்சிகள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக்காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக்குள்ளாகினர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளித்தனர். அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவது என யோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி!

அதாவது பல்வலி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!

இப்படித்தான் பி .டி .பருத்திக்கும் விளக்கம் சொன்னார்கள், பருத்தியும் அழிந்து விவசாயிகளும் வீழ்ந்த அனுபவத்தை அறிந்திருந்த இந்திய விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், தொண்டு அமைப்புகள் பி.டி. கத்தரிக்காயை ஏற்கமாட்டோம் என கொந்தளித்துவிட்டனர். நாடு முழுவதும் பொதுமக்களின் கருத்தை கேட்ட பின்னரே பி.டி. கத்தரிக்காயை வணிக நோக்கில் பயிரிட அனுமதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து பின்வாங்கியிருக்கிறார்.

உடல் நலத்திற்கு ஆபத்து

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரானி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எலிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரலின் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேவையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று பி.டி விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இங்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான்!

ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

தேவை தடை

விவசாயத்துறை என்பது மாநில அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது தமிழக அரசு நமது மண்வளம், விவசாய முறைகள், அடுத்த தலைமுறைகளின் நலன், நிகழ்கால தலைமுறைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மரபணு மாற்ற விதைகளை தடை செய்வதாக அறிவித்து மத்திய அரசுக்கே முன் மாதிரியாக திகழ வேண்டும்,

மான்சான்டோவின் உலக முதலாளித்துவ சதிக்கு பலியாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும்.

இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக்கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.

இப்போது நாட்டில் உணவுபஞ்சம் இல்லை! விலைவாசி உயர்வு தான் இருக்கிறது! மரபணு மாற்று விதைகளை பயிரிட வேண்டிய எந்த நெருக்கடியும் இல்லை. விவசாயிகளும் கேட்கவில்லை.

உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.

பெட்டிச் செய்தி - அது என்ன மான்சான்டோ?

அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.

அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் பலியாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?

நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி¬ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,

மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,
அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,

மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!
இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியாவிலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.

-அபூ அயிஷா . TMMK INFO

கருத்துகள் இல்லை: