வெள்ளி, 6 நவம்பர், 2009

சச்சின் - ஒரு மாவீரன்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"


2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."

நன்றி : நிலா ரசிகன் .

கருத்துகள் இல்லை: