செவ்வாய், 17 நவம்பர், 2009
இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல!
இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.
இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது.
பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியை ஆட்சி மொழியாக கொள்ளவும் முடியாது என்ற கருத்தும் அப்போது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அதேபோல 351வது பிரிவின்படி, இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை ஊக்கப்படுத்த வேண்டியதும் மத்திய அரசின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது.
அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.
மும்மொழித் திட்டம்...
இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது.
1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன.
இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.
இந்தி வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் நிதியை ஒதுக்கியதும், திட்டங்களைத் தீட்டியதும், இந்த மாநிலங்களில் இந்தித் திணிப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு வெடித்தது.
இதில் ஒரு படி மேலாக, 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சொன்ன முக்கிய காரணம், அரசியல் சாசனச் சட்டத்தின் 348 (2) பிரிவு மற்றும் பிரிவு 7ன் கீழ், இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உ.பி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது தான்.
அப்படி இருக்கும்போது தமிழ் அதிகமாக பேசப்படும் தமிழகத்திலும், பெங்காலி பேசப்படும் மேற்கு வங்கத்திலும் உயர்நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட மொழிகளே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நியாயமான வாதம் முன் வைக்கப்படுகிறது.
அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது.
ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.
தற்போது ஆட்சி மொழி குறித்த விவாதம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மையமாக வைத்து அது கிளம்பியுள்ளது.
அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது.
ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் வெடித்துள்ளது.
எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது.
மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.
நன்றி : தட்ஸ்தமிழ் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவியிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது.
அடிமைபடுத்தியவன் மொழியை கற்றாலும் கற்ப்போம் ... முன்னேறுவோம். ஆனால் உள்நாட்டில் தோன்றிய ஒர்மொழியை ஏற்பதும் கற்பதும் பிழையென கருத்தில் கொள்வோம். வாழ்க நம்மக்கள்...
கருத்துரையிடுக