வியாழன், 31 டிசம்பர், 2009
மிகவும் மாசுபட்ட 10 நகரங்கள் பட்டியலில் வேலூருக்கு முதலிடம்!!!
இந்தியாவின் மாசுபட்ட 10 நகரங்கள் பட்டியலில் வேலூர் இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலை கழிவுகள், மக்களின் அக்கறையின்மை போன்றவற்றால் அதிகம் மாசடைந்த நகரங்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம்.
'முதலிடம்' வேலூருக்கு....
அந்தந்த மாநிலங்களில் உள்ள சுற்றுச் சூழல் துறை மற்றும் ஐஐடி உதவியுடன் 88 தொழில் நகரங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது இந்த வாரியம். Comprehensive Environmental Pollution Index (CEPI) எனும் அளவீட்டின்படி நகரங்களின் மாசடைந்த தன்மை சோதிக்கப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் கோவை, கடலூர், மணலி, மேட்டூர், திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய 7 தொழில் நகரங்கள் இதில் இடம்பெற்றன.
இவற்றில் வேலூர் நகரம்தான் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. வேலூரில் மட்டும் 100-க்கு 81.79 CPEI புள்ளிகள் காற்று, நீர் மாசடைந்துள்ளது என இந்த சர்வே தெரிவிக்கிறது. நினைவிருக்கட்டும் இது தனியார் நடத்தியதல்ல. மத்திய அரசின் நிறுவனம் மாநில அரசுடன் சேர்ந்து நடத்திய சர்வே.
தமிழகத்தில் அதிக அளவு மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக வருகிறது கடலூர். இங்கு காற்றும் நீரும் 77.45 சதவிகிதம் மாசடைந்துள்ளதாம். மணலியில் காற்று மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாம். ஒட்டுமொத்தமாக இங்கு 76.32 சதவிகிதம் சுற்றுச் சூழல் சீர்கேடடைந்துள்ளது.
கோவையில் தண்ணீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு அபாயகட்டத்தில் இருப்பதாகவும், நில மாசுபாடு மட்டும் ஓரளவு பரவாயில்லை என்றும், ஒட்டுமொத்தமாக 72.38 சதவிகிதம் சுற்றுச் சூழல் கெட்டுப்போயுள்ளதாகவும் கூறுகிறது.
திருப்பூர் நகரின் நிலம், நீர், காற்று மூன்றின் சுற்றுச் சூழலுமே அபாயகட்டத்தில் உள்ளது. இங்கு 68.38 சதவிகித மாசுபாடு பதிவாகியுள்ளது.
மேட்டூரிலும் இதே நிலைதான். ஆனால் இங்கு தண்ணீரின் நிலை படு மோசமாகியுள்ளது. 68.98 சதவிகிதம் மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 7 தொழில் நகரங்களிலும் சற்று குறைவான மாசுபாடு ஈரோட்டில்தான் பதிவாகியுள்ளது. ஏராளமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் உள்ள இந்த நகரில் 58.19 சதவிகிதம் அளவு சுற்றுச் சூழல் சீர்கெட்டுள்ளது.
ஆனால் இந்தியாவின் பிற மாநில நகரங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் சூற்றுச் சூழல் மாசுபாடு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
'குஜராத் ரொம்ப மோசம்!'
குஜராத்தின் அங்கலேஷ்வர்தான் அதிக மாசடைந்த நகரமாக உள்ளது, இந்திய அளவில். இங்கு சுற்றுச் சூழல் மாசுபாடு அளவு 100க்கு 88.5 புள்ளிகள். இதே மாநிலத்தின் வாபி நகரம் 88.09 சதவிகிதம் மாசடைந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் காஸியாபாத் 87.37 புள்ளிகளும், மகாராஷ்ட்ராவின் சந்திராபூர் 83.88 புள்ளிகளும், சத்தீஷ்கரின் கோர்பா 83 புள்ளிகளும், ராஜஸ்தானின் பிவாடி 82.91 சதவிகிதமும், ஒரிஸாவின் தல்சர் 82.09 புள்ளிகளும் பெற்றும் மாசடைந்த நகரங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளன.
இந்த சர்வேக்காக தேர்வு செய்யப்பட்ட 88 தொழில் நகரங்களில் 43 நகரங்கள் நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளதாகவும், பல நகரங்களின் சுற்றுச் சூழல் அளவு சீர் செய்ய முடியாத அளவு கைமீறிப் போய்விட்டதாகவும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "பல தொழில் நகரங்களின் நிலையை உயர்த்த ஏராளமான தொகையை அரசு செலவிட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் இனி மாசுபடுத்த ஒன்றுமே இல்லை எனும் அளவு சுற்றுப் புறத்தை நச்சாக்கி வைத்துள்ளன என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அவற்றின் தரத்தை உயர்த்த முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் முயற்சித்துக் கொண்டுதான் உள்ளோம்.." என்றார்.
தமிழகத்தின் வேலூரில் அதிகபட்ச தோல் தொழிற்சாலைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளை அகற்ற அரசு மிக அதிக அளவு நிதியை செலவிட்டும் இம்மியளவு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் பாழானதுதான் மிச்சம். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை என்கிறது சுற்றுச்சூழல் வாரிய அறிக்கை.
என்ன செய்யப் போகிறார்கள் வேலூர் மக்கள்?
நன்றி : தட்ஸ்தமிழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அன்புள்ள சூரியனுக்கு,
எங்கே எங்கே சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பட்டியல் இட்டு வரிசையாக காட்டினால் நல்லது. நாங்கள் தூய்மை செய்வதற்கு கேட்கவில்லை. தூய்மையாய் இருக்கும் இடங்களை மாசு செய்ய வசதியாக இருக்கும் இல்லையா? அதற்காகதான்.
தாஜ்மகாலின் வெள்ளை நிறம் சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உலகமே கருத்துகளை வழங்குகிறது, சிந்திக்கின்றது. ஆனால் நம் மக்களை காக்க யார்? எப்படி? எவ்வாறு? என சிந்திப்பது, செயல்படுத்துவது.
ஒவ்வொரு மனிதனுக்கும், என்று தான் வாழ்வதை பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு தன்னை சாராத மற்றவர்கள் வாழ்வதை பற்றி எண்ணுகின்றானோ? அன்று ஒருவேளை மாறுமோ? இந்த நிலைமை...
கருத்துரையிடுக