அன்டார்டிக் பனிப் பகுதியிலிருந்து உடைந்து வந்த பிரமாண்ட பனிக்கட்டி ஆஸ்திரேலியா அருகே மிதந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தென் மேற்குக் கடல் பகுதியில் 1700 கிலோமீட்டர் தொலைவில் அந்த பனிக் கட்டி மிதந்து கொண்டிருக்கிறது. இதற்கு B17B என்று பெயரிடப்பட்டுள்ளது.
செயற்கைக் கோள் மூலம் இந்த பனிக் கட்டி மிதந்து வருவது தெரிய வந்தது. 12 மைல் நீளமும், 5 மைல் அகலமும் கொண்டதாக இது உள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி இது வந்து கொண்டுள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டு அன்டார்டிகாவில் ராஸ் மற்றும் ரான் ஆகிய இரு மிக பிரமாண்ட பனிக் கட்டிகள் உடைந்தன. அதிலிருந்து பிரிந்த ஒரு துண்டுதான் இந்த பனிக் கட்டி எனக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் இந்த பிரமாண்ட பனிக்கட்டி நியூசிலாந்து கடல் பகுதியில் வந்தபோது கப்பல்கள் அந்தப் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே அன்டார்டிகாவிலிருந்து நூற்றுக்கணக்கான பனிக் கட்டிகள் உடைந்து மிதந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வரும் பனிக் கட்டி பிரமாண்டமானதாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்த பனிக் கட்டி, மான்ஹாட்டன் தீவை விட 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.
தற்போது இந்தப் பனிக் கட்டி மெதுவாக உடைய ஆரம்பித்துள்ளது. இன்னும் சில வாரங்கள் அல்லது ஒரு மாதத்தில் இது கரைந்து போய் விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அன்டார்டிகாவில் வெப்ப நிலை அதிகரித்திருப்பதே இப்படி பனிக்கட்சிகள் உருகி வரக் காரணம். கடந்த 60 ஆண்டுகளில் அங்கு 3 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக