செவ்வாய், 8 டிசம்பர், 2009

இலங்கையில் களமிறங்கப்போகும் 25000 சீனர்கள்!

இலங்கை… இறுகும் சீனப் பிடி!


போருக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமளவிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் 25000க்கும் மேற்பட்ட சீனர்கள் களமிறங்கவிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகள் குறிப்பிட்ட மாவட்டத்தில் என்றில்லாமல் இலங்கை முழுக்கப் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சீனா 6.1 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் கடன் தொகையை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பலாலியிலிருந்து காங்கேசன் துறை வரையிலான 56 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை, வட இலங்கை முழுவதும் உள்ள நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள், கொழும்பில் வளர்கலைக் கூடம் அமைத்தல் என பல பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது சீனா.

இந்தப் பணிகள் அனைத்துக்கும் உள்நாட்டுப் பணியாளர்கள் ஒருவர் கூட பயன்படுத்தப்படக் கூடாது என்பது இலங்கை – சீன ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். எனவே முழுக்க முழுக்க சீனர்களே இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், இதற்காக 25000 சீனப் பணியாளர்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் களமிறங்கப் போகிறார்கள் என்றும் சன்டே டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகள் தவிர, ஏற்கெனவே இலங்கையின் தென்பகுதியில், புத்தளம் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை விமான நிலையம், மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை, பின்னடுவ – மாத்தறை இடையிலான தெற்கு எக்ஸ்பிரஸ் பாதை போன்ற திட்டங்களை சீனா செயற்படுத்தி வருகிறது.

இது தவிர வடக்கில், பலாலி – காங்கேசன்துறை ரயில் பாதை, மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை, யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் யாழ். நகர இணைப்புச் சாலைகள் புனரமைப்பு, வடக்கில் மன்னார் மற்றும் புத்தளத்துக்கு இடையிலான அனைத்து நெடுஞ்சாலைகள் புனரமைப்பு ஆகிய திட்டங்களையும் சீனா செயற்படுத்த உள்ளதாம். இவற்றிலும் கணிசமான சீனர்கள் இடம்பெறக்கூடும்.

இந்தியாவுக்கு நெருடலாய்…

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் இந்த அழுத்தமான காலூன்றல், ஒருவிதமான ஊடுருவலாகவே பார்க்கப்படுகிறது.

தெற்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளத்தை இந்தியா வலுவில் இழந்ததாகவே இதனை சர்வதேச ராணுவ நிபுணர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தும் வாய்ப்பும்கூட இனி இந்தியாவுக்கு இருக்கும் என்று நம்புவதற்கில்லை. இந்துமகா சமுத்திரத்தில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் சீனர்கள் பங்கெடுத்திருப்பதும், இலங்கையின் ராணுவத் தளங்களில் சீன வீரர்கள் நடமாட்டம் இருப்பதையும் கிட்டத்தட்ட இலங்கை ஒப்புக் கொண்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்திய தரப்பு உதவிகளைக் கூட இலங்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற கருத்தும் வலுவடைந்து வருகிறது. அதற்கு ஒரு உதாரணம்:

இலங்கையின் வட பகுயில் வவுனியாவிருந்து யாழ்ப்பாணத்தின் பளை வரை ரயில் பாதை அமைக்க இந்திய குறைந்த வட்டியில் கடன் தந்துள்ளது. இந்தப் பணிகளையும் இந்தியாவே மேற்கொள்கிறது. ஒருகிலோ மீட்டர் நீள சாலைக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாதையை அமைக்கிறது இந்தியா.

ஆனால் பலாலியிலிருந்து காங்கேசன் துறைவரை சீனா அமைக்கும் ரயில் பாதையோ, கிலே மீட்டர் ரூ 4 மில்லியன் செலவில் அமைக்கப்படுகிறது. அதாவது இந்தியாவை விட இருமடங்கு அதிக செலவு வைக்கிறது சீனா.

அப்படி இருந்தும் அதிக செலவு, கடன் சுமையைத் தரும் சீனாவுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறது இலங்கை. இந்தியாவின் பங்களிப்பை முடிந்தவரை மறுத்து வருகிறது இலங்கை அரசு.
இன்றைய நிலவரப்படி, இலங்கை தீவு முழுவதுமே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது… இந்த வல்லாதிக்கப் போட்டியில் தமிழர்கள் எப்படியெல்லாம் இன்னும் சிதைக்கப்படப் போகிறார்களோ என்பதுதான் இப்போதைய கேள்வி!

நன்றி : என்வழி

2 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சூரிக்கு,
ஒளியின் வெளிச்சத்தில் மயங்கும் விட்டில் பூச்சிகளின் முடிவு தெரிந்ததே.

இந்தியாவை போன்ற சகோதரதுவம் எண்ணம் கொண்ட எந்தநாடும் இல்லை என்பதை விரைவில் அறிவர்.

(நம்மக்களை கொன்று குவித்தவர்களுக்கு ஒர்பாடம் கற்பிக்கட்டும் சீனா).

Sooriyan சொன்னது…

தோழர் ஸ்ரீனி அவர்களுக்கு ,

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி . என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும் உங்களின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கும் நன்றி .

இனியும் எதிர்பார்த்து ........

உங்கள்
சூரியன் .