செவ்வாய், 8 டிசம்பர், 2009

மன்னிப்பு கேட்க நான் தயார்…’ ‘ஏத்துக்கவும் நாங்க தயார்…’ ‘ஆனா?’

போராட்ட நாடகத்தின் கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி!’

தனது ஆபாச பேச்சுக்காக இப்போது தினம் தினம் புலம்பித் திரியும் விவேக், பத்திரிகையாளர் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்துள்ள மகனே மருமகனே படத்தின் பிரஸ் மீட்டுக்கு அவராலேயே வர முடியாத நிலை. காரணம், அவர் வந்தால், நாங்கள் பிரஸ் மீட்டிலிருந்து வெளியேறுவோம் என பத்திரிகையாளர்கள் எச்சரித்ததுதான். இதனால் பிரஸ் மீட் நடந்த ராஜ் டிவி ஸ்டுடியோ வரை வந்தவர், உள்ளே நுழையாமல் காரிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.

பின்னர், ‘நான் பத்திரிகையாளர்களிடம் இங்கேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வரட்டுமா?’ என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் மன்றாடியுள்ளார். இதை இயக்குநர் டிபி கஜேந்திரனே வந்து சொன்னாராம். ஆனால் பத்திரிகையாளர்களால் அதற்கு உடனே ஒப்புதல் சொல்லிவிட முடியவில்லை.

காரணம்… இருக்கிறது!

இதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இவர்கள் அல்ல… இந்த போராட்டத்தை ஆரம்பித்தது சினிமா பத்திரிகையாளர்கள் அல்ல என்பதுதான் உண்மை. இதனை ‘உழைக்கும் பத்திரிகையாளர்கள்’, ‘பிரஸ் கிளப்’ ‘தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ போன்ற பொதுவான பத்திரிக்கை அமைப்புகளே முன்னெடுத்துப் போராடின. அவர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சினிமாக்காரர்களின் மதுவிருந்திலோ கேளிக்கைகளிலோ அவர்கள் பங்காளிகள் அல்ல.

ஆனாலும்- ‘பொதுவாக அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இழிவாக இந்த நடிகர்கள் பேசிவிட்டார்களே’ என்று கோபப்பட்டவர்கள் அவர்கள்தான்.

கொளுத்திய வெயிலில் நடு ரோட்டில் படுத்து கோஷம் போட்டதும் கொடி பிடித்ததும் அவர்களே. ஆனால் அந்த நேரத்தில் (சரியாகச் சொன்னால் மெரீனா சாலையில் போராட்டம் நடந்த நேரத்தில்) கிரீன் பார்க் ஓட்டலில் சூர்யா பிரஸ் மீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள்தான் சினிமா பத்திரிகை நிருபர்கள் (அரிதான விதிவிலக்குகள் சிலர் உண்டு). அட அவ்வளவு ஏன்… பிரஸ் கிளப் நடத்திய போராட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கூட பங்கெடுக்காத அளவுக்குதான் இவர்கள் மானம் ரோஷத்தின் லட்சணம் இருந்தது. நாம் இங்கே எழுதியதெல்லாம் கூட இவர்களுக்கு வக்காலத்து வாங்கியல்ல.

எனவே பிரச்சினை விவேக்குக்கும் சினிமா துணை நடிகர்களில் ஒரு பிரிவினராகவே மாறிவிட்ட சினிமா நிருபர்களுக்கும் கிடையாது. போராடும் பத்திரிகையாளர்கள் வேறு. அவர்கள் இந்த சினிமா நிருபர்களை ஒரு பொருட்டாகவும் பார்ப்பதில்லை. எனவே ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் சார்பாகவும் விவேக்கின் மன்னிப்பை ஏற்கும் இடத்தில் அல்லது தகுதியில் சினிமா நிருபர்கள் இல்லை.

அந்த போராடும் பத்திரிகையாளர்களுக்கு விஷயம் தெரிந்தால் சண்டைக்கு வருவார்கள் என்ற உண்மை உறைத்ததாலோ என்னமோ, அமைதியாக கலைந்து சென்றனர் சினிமா நிருபர்கள். இல்லாவிட்டால், ஒரு சமாதான நாடகம், அதைத் தொடர்ந்த தண்ணி பார்ட்டி குறித்த ரிப்போர்ட்டை இங்க தரவேண்டி வந்திருக்கலாம்!


நன்றி : என்வழி

கருத்துகள் இல்லை: